ஒரு கதை, மூன்று கவிதை மற்றும் ஐந்து ஹைக்கூக்கள்

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks

எல்லாவற்றையும் துற என்று ஒரு குரு சொல்லக்கேட்டு ஒரு சிஷ்யன் ஒரே ஒரு தவிர்க்க முடியாத கோவணத்துடன் ஊருக்கு வெளியே வாழ்ந்து வந்தானாம். அந்தக் கோவணத்தை அடிக்கடி எலி கடித்து விட்டது. ஊரார் என்ன இது இவ்வாறு கந்தலாகக் கோவணம் கட்டியிருக்கிறாயே என்று கேட்க ‘எலி’ என்று பதில் சொன்னானாம் துறந்தவன். அதற்காக ஒரே ஒரு பூனை வளர் என்றார்கள். அவன் பூனை வளர்க்கத் தொடங்கினான். பூனைக்குப் பால் தேவையாக இருந்தது. இல்லாவிடில் அது எலியை கடிக்க மறுத்தது. பாலுக்காக ஊரில் பிச்சை எடுக்க ஆரம்பித்தான். ஊரார் ஒரே ஒரு பசுமாடு தருகிறோம். தினம் தினம் இங்கே வராதே என்று பசு மாட்டை தானமாக அளித்தார்கள். மாடு வந்தது. புல் தேவையாக இருந்தது. புல்லுக்காக தினம் ஊருக்குச் செல்ல ஆரம்பித்தான். இதற்காகவா இங்கு வருகிறாய், ஒரு கால் ஏக்கரா நிலம் வைத்துக்கொண்டு புல் பயிரிடேன் என்று புறம்போக்காக நிலத்தைக் கொடுத்தார்கள். நிலத்துக்கு வேலி, பால் கறக்க ஒரு இடையன், அவனுக்குச் சோறு, அதற்காகக் குடும்பம்.. குரு மறுபடி சிஷ்யனை வந்து பார்த்த போது அவனைச் சுற்றி ஒரு பண்ணையே செழித்திருந்தது. மனைவி, மக்கள், சுற்றம், ஆட்கள், நிலம், மாடு, மனை என்று.. குரு வினவினார், “எதற்காக அப்பனே இதெல்லாம்?” என்றார். “சுவாமி எல்லாம் ஒரு கோவணத்துக்காக, என்றான் சிஷ்யன்...

பகவான் ராமகிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை.

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0

தூங்கும் முன்
கழுத்தைக் கட்டிக்கொண்டு
கதைகேட்ட
குழந்தைக்கு
கதை முடிந்ததும்
நீதியைச்
சொல்ல ஆரம்பித்தேன்
தூக்க சுவாரஸ்யமோ
போதனையின் அசுவாரஸ்யமோ
உன் கதையை நீயே வைத்துக்கொள் போ
திரும்பிப் படுத்துக்கொண்டது
சொன்னபின்
யாருக்குச் சொந்தம் கதை?
திரும்பவாங்கிப்
புலனுக்குள் பூட்டக்
கதைசொல்லிக்கு
முடியுமோ?

--கலாப்ரியா (வனம் புகுதல்)


==============================

புல்வெளியை சுத்தம் செய்யச் செல்கிறேன்
இலைகளை மட்டும் பெருக்கிவிட்டு வந்து விடுவேன்
சில வேளை ஜலம் வடிவதைப் பார்த்துவிட்டு வருவேன்
அதிக நேரமாகாது நீயும் வாயேன்.

*******
கன்றுக்குட்டியைக் கொண்டுவரப் போகிறேன் அதன்
அம்மாவின் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறது
அம்மா அதை நக்கிக் கொடுக்கும்போது தடுக்கிவிழுகிறது
அதிக நேரம் ஆகாது நீயும் வாயேன்

- ராபர்ட் ஃப்ராஸ்ட்.. தமிழில் சுஜாதா

============================

கனத்த
படிம ஆடை
அணி அலங்கார
ஒப்பனைகளுடன்
அரங்கேறிய உங்கள்
அடையாளம் தெரியவில்லை
எனக்கு
மேடையின் பின்னே
ஒப்பனை அறையின்
எளிய வாயிலில்
காத்திருக்கிறேன்
முகம் பார்க்க

- கவிஞர் புவியரசு

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0

மூங்கில் நிழல் இரவெல்லாம்
மாடிப்படி பெருக்கிற்று
தூசுகள் அகலவில்லை

- சி. மணி(யின் மொழிபெயர்ப்பு)

&*&*&*&*&*&*&*&

சமவெளியில்
பசுவின் உதடுகளில்
புல்லின் ஈரம்

- சுஜாதா

&*&*&*&*&*&*&*&

குட்டையில் சிறுநீர்
கழிக்கும் சிறுவன்
வானத்தை அசைக்கிறான்!

- வீ. இராஜசேகரன் சேலம்.

&*&*&*&*&*&&*&*&*&*

பல்லிக்கும் பூச்சிக்கும்
இடையில் இருக்கும்
கண்ணாடி ஜன்னல்!

- ஜே.பி. அன்பு சிவம், அரசூர்

&*&*&*&*&*&*&*&*&*&

பிக்னிக் மேஜை விரிப்பின்
கறுப்பு சதுரத்துள்
எறும்பு மறைகிறது

- கனடா தேசத்துப் ப்ரெஞ்சு ஹைக்கூ

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0

மேற்கண்ட கதை, கவிதை மற்றும் ஹைக்கூ அனைத்தும் சுஜாதாவின் ‘ கணையாழியின் கடைசிப்பக்கங்கள்’ தொகுப்பிலிருந்து பெறப்பட்டது.