இருட்டின் திசையறிதல்

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
 • Agregar a Technorati
 • Agregar a Del.icio.us
 • Agregar a DiggIt!
 • Agregar a Yahoo!
 • Agregar a Google
 • Agregar a Meneame
 • Agregar a Furl
 • Agregar a Reddit
 • Agregar a Magnolia
 • Agregar a Blinklist
 • Agregar a Blogmarks

க‌ண்கள் அதிக‌ம் எடுத்துக்கொண்ட
மையை துடைத்தெடுத்து
சூனிய‌த்தில் அப்பிவிட‌
மேலும் அட‌ர்த்தியான‌து இருட்டு...

வெளிச்சம் குறைவதை இருட்டு என சொல்வது அத்தனை ஏற்புடையதாயில்லை. இருட்டு கிழிவது வேண்டுமானால் வெளிச்சமாயிருக்கக்கூடும். அத‌னாலேயே இருட்ட‌ ஆர‌ம்பித்திருந்த‌ அந்த‌ மாலைநேர‌ம் என‌ எழுதுவ‌த‌ற்கு ம‌ன‌ம் வ‌ர‌வில்லை. வெளிச்ச‌க்கீற்றுக்களின் முனைகள் ம‌ழுங்கத்தொடங்கியிருந்த நேர‌‌த்தில் என‌க்கு த‌ற்கொலை செய்துகொண்டால் என்ன என்ற எண்ண‌ம் ஆர‌ம்பித்திருந்த‌து.

பகலை விட இரவு நேரங்கள் எனக்கு ஏற்புடையவதாய் இருக்கின்றன. இரவுகளில் என்னை யாரும் தேடுவதில்லை. பகல்களில் அந்நியங்களின் புன்னகைகள் கூட என்னை சுலபமாய் தாக்கத்தொடங்கிவிடுகிறது. எனக்கு மட்டுமான தனித்த அந்த இரவுகள் யாருக்கும் அத்தனை எளிதாய் கிட்டிவிடுவதில்லை. இருட்டு என் நேசிப்பிற்குரிய விஷயங்களின் முதல் நண்பன்.

கண்களை மூடிக்கொண்டாலே இருட்டு வந்துவிடுமே என்று கருதுபவர்களுக்கு, என் கண்களை மூடிக்கொள்ளும்போது விழிகளின் விளிம்புகளில் நான் விரும்புகின்ற வண்ணம் கசிந்து எனது இருட்டை வண்ணமாக்கிவிடுகின்றன. எப்போதும் நீலம், சிலநேரம் மஞ்சளாய் இருட்டை காண்பதற்கு மனம் விரும்புவதில்லை. வெள்ளையடித்த சுவர் மீது விழும் நிழல்போல இருட்டை காண விரும்புகிறேன். அதனாலேயே வெளிச்சக்கூறுகள் செத்துப்போன அடர்ந்த அந்த இருட்டினை முடிந்த மட்டும் கண்களால் உள்வாங்கிக்கொண்டு அமர்ந்திருப்பேன். இருட்டும் என்னை முழுவ‌தும் ஆக்கிர‌மித்துக்கொண்டு என்னை காணாம‌ல் செய்துவிடும்.

எழுத்துக்களில் நான் என்ற‌ வ‌ரிசையில் தொட‌ங்கும்போது வார்த்தைக‌ளின் க‌டின‌ங்க‌ள் புல‌ப்ப‌டுகின்ற‌து. என‌க்கொரு பெய‌ர் வேண்டும். எளிதில் வாயில் நுழையாத‌ ஆங்கில‌ப்பெய‌ர்கள் என்மேல் நாட்ட‌ம் கொள்வ‌தில்லை. அதிக‌ம் யோசித்தும் ஏதும் தோணாமல் ப‌ழ‌கிய‌ ப‌த்ம‌னை என் பெய‌ராக‌ நான் எடுத்துக்கொண்டேன்.

ப‌த்ம‌ன் த‌ற்கொலை செய்துகொள்ள‌ வேண்டும். ஆனால் அது விப‌த்தாய் காட்சிப்ப‌டுத்த‌ப்பட‌ வேண்டும் என்ப‌தில் நான் முக்கிய‌த்துவ‌ம் கொண்டிருந்தேன். ப‌த்ம‌ன் விப‌த்தில் இற‌ந்த‌து ப‌ல‌ருக்கு ஆச்ச‌ரிய‌ம் கொடுக்க‌ வேண்டும். ஏனெனில் அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் ப‌த்ம‌ன் த‌ற்கொலை செய்துகொள்வான் என‌ ந‌ம்பிக்கை கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள். அவ‌ர்க‌ள் நம்பிக்கையையும் நான் சேர்த்து கொல்ல‌ப்போகின்றேன். ஆனால் ஜெனிதா மோச‌ஸ் மட்டும்தான் ப‌த்ம‌ன் த‌ற்கொலை செய்திருப்பான் என்று ந‌ம்புவாள்.

ம‌ன்னிக்க‌வும் ஜெனிதா மோச‌ஸை நான் இன்னமும் உங்க‌ளுக்கு அறிமுக‌ம் செய்திருக்க‌வில்லை. ஜெனிதாவின் பெய‌ரோடு தொக்கி நிற்கும் மோச‌ஸ் அவ‌ள‌து த‌ந்தை என்று நீங்க‌ள் க‌ருதினால் நீங்க‌ள் க‌ண்டிப்பாய் என்னுட‌ன் ப‌ழ‌கிய‌வ‌ராய் இருந்திருக்க‌க்கூடும். ஆமாம்.. ஏனென்றால் நான் ப‌ழ‌கிய‌வ‌ர்க‌ளுட‌ன் மோச‌ஸ் என்ப‌து அவ‌ள் த‌ந்தை பெய‌ர் என்றுதான் கூறி வ‌ந்திருக்கிறேன். இத‌ற்காக‌வும் அவ‌ர்க‌ள் என்னை மோச‌க்கார‌ன் என்று க‌ருத‌க்கூடும்.

ஜெனிதா மோச‌ஸைப் ப‌ற்றி இதில் அதிக‌ம் என்னால் விவ‌ர‌ண‌ப்ப‌டுத்த‌ இய‌லாது. ஏனெனில் அவ‌ளைப்ப‌ற்றி நான் அதிக‌ம் என‌து டைரிப்ப‌க்க‌ங்க‌ளில் எழுதி வ‌ந்திருக்கிறேன். என் ம‌ர‌ண‌த்திற்கு பிற‌கு யாராவ‌து அந்த‌ டைரியை எடுத்து ப‌திப்பிக்க‌ முய‌ற்சித்து அதில் வார்த்தைக‌ளின் மேல் க‌றுப்புப்ப‌ட்டைக‌ள் அடிக்க‌ப்ப‌ட்டிருந்தால் நினைவு கொள்க‌. அந்த‌ வார்த்தைக‌ள் புனித‌மாக்க‌ப்ப‌ட்டுள்ளன‌ என்று.

இற‌ப்ப‌த‌ற்கு முடிவெடுத்த‌ நொடி முத‌ல் பத்மன் தீர்மானித்த‌து இனி ஒவ்வொரு நொடிக‌ளையும் ச‌ந்தோஷ‌மாக‌ வாழ‌ வேண்டும் என்ப‌துதான். க‌டைசியாக‌ ச‌ட்டைப்பையிலிருந்த‌ வெள்ளைப்ப‌குதியில் இத‌ய‌ம் ப‌ட‌ம் வ‌ரைந்து அம்பினால் கிழிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ அந்த‌ ஐந்து ரூபாய் நோட்டைக் கொடுத்து ஒரு டீ குடித்து ஒரு வில்ஸ் சிக‌ரெட் வாங்கிக்கொண்டான். டீ மிக‌ மோச‌மான‌தாக‌ இருந்த‌து. ஆனாலும் ர‌சிப்புத்த‌ன்மை என்னுள் எல்லை மீறிப்போன‌தால் பத்மன் அத‌னை ர‌சித்து ஆன‌ந்த‌மாக‌ குடித்து சிக‌ரெட்டை ப‌ற்ற‌ வைத்தான். கடைசித்துளி சிக‌ரெட் வ‌ரை விடாம‌ல் இழுத்தான். விர‌ல் சுடும் உண‌ர்வு வ‌ந்தும் அடுத்த‌ சிக‌ரெட் கிடைக்காத‌ ஆற்றாமையால் நான் அவ‌னை சிக‌ரெட்டை கீழே போட‌ விட‌வில்லை. இத‌ற்கு மேல் முடியாது என்ற‌ நிலையில் சிக‌ரெட் கீழே வீசியெறிந்து மிதிக்க‌ ம‌ன‌மின்றி ப‌த்ம‌னை தாண்டி ந‌ட‌க்க‌விட்டேன்.

இருட்டின் வாசிப்புக‌ள் அலாதியான‌வை. இருட்டு அனைத்திலும் வியாபித்துள்ள‌து. சொல்ல முடியாத‌ சோக‌ங்க‌ள், அசிங்க‌ங்க‌ள், தொல்லைக‌ள் எதையும் இருட்டு மிச்ச‌ம் வைத்த‌தில்லை. ப‌த்ம‌ன‌து சாவும் இருட்டில் ந‌ட‌க்க‌வேண்டும் என்று குறிக்கோள் கொண்டிருந்தேன்.

அந்த‌ மேம்பால‌த்தின் மேல் த‌ற்கொலைக்கான‌ நிக‌ழ்வை ஆர‌ம்பிக்க‌ முடிவு செய்திருக்கிறேன். மூன்று கோண‌ங்க‌ளாக‌ பிரிந்து ஒரு புள்ளியில் மேலேறி மீண்டும் ச‌ரிவைத்தொட‌ங்கும் அந்த‌ மேம்பால‌ம் என‌க்கு மிக‌ப்பிடித்த‌ இட‌ம். இருட்டு அந்த‌ மேம்பால‌த்தை முழுவதுமாக‌ மூடி வைத்திருந்த‌து என‌க்கு நிம்ம‌தியாக‌ இருந்த‌து. என‌து நேசிப்புக‌ள் சில‌வாவ‌து ஒன்று சேர்கிற‌து. அந்த‌ நிமிட‌ம் ப‌த்ம‌னின் உண‌ர்வுக‌ளை உங்க‌ளிட‌ம் நான் சொல்லியாக‌ வேண்டும். நெஞ்சின் மேல் க‌ல்லை வைத்துக் க‌ட்டிக்கொண்டாற் போல் ஒரு உண‌ர்வு. ஆனால் த‌லை ம‌ற்றும் கால்க‌ள் ப‌ஞ்சு போல‌ இல‌குவாக‌ இருந்த‌து. ப‌த்ம‌னிட‌மிருந்து மிச்ச‌மிருந்த‌ யோச‌னைகளை அழித்துவிட்டேன். அவ‌ன் சாக‌வேண்டிய‌து க‌ட்டாய‌மாகிய‌தால்.

இருட்டைக்கிழித்து ஒரு வெளிச்ச‌ப்புள்ளி த‌ன‌து துக‌ளை அனுப்பி வைத்த‌து. ப‌த்ம‌னுக்கு தைரிய‌ம் போத‌வில்லை. நெஞ்சு வேக‌மாக‌ துடித்துக்கொண்ட‌து. ஆசுவாச‌ப்ப‌டுத்திக்கொள்ள‌ முய‌ற்சிக்கிறான். கூடாது. அவ‌ன் யோசிக்க‌ ஆர‌ம்பித்துவிட்டால் த‌ற்கொலை செய்துகொள்ள‌ மாட்டான். அந்த பெரிய வண்டி பெருத்த இரைச்சலோடு பத்மனை தாண்டிப்போனது. எனக்கு எரிச்சலாக இருந்தது. இருட்டை கிழிக்க‌ப்போகும் அடுத்த‌ வெளிச்ச‌க்க‌த்திரிக்காக‌ காத்திருக்க‌ ஆர‌ம்பித்தேன். மீண்டும் வெளிச்ச‌ம் இருட்டின் வ‌ழியே வ‌ந்த‌து. ப‌த்ம‌னை த‌யார்ப‌டுத்தினேன். 'ம்.. ஆர‌ம்பி.. யோசிக்காதே.. யோச‌னைக‌ள் இனி உன‌க்கு ப‌ல‌ன‌ளிக்காது. போ...'

ப‌த்ம‌ன் வேக‌மாக‌ பால‌த்தின் ந‌டுவில் வ‌ந்து நின்று க‌ண்க‌ளை இறுக‌ மூடிக்கொண்டான். வேக‌மாக‌ வ‌ந்த‌ அந்த‌ கார் ந‌டுவில் அவ‌ன் நிற்ப‌தை பார்த்து த‌டுமாறி திசை திருப்பி அதிக‌ அழுத்த‌த்துட‌ன் குலுங்கி நின்ற‌து. காரின் ஜன்னலின் வழியே வெளியே காரோட்டி வந்தவன் இருட்டில் முக‌ம் ச‌ரியாக‌ தெரியாத‌ ப‌த்ம‌னைப்பார்த்து பலத்த குரலில் கத்தினான்.

"தேவிடியாப்பையா..."

கார் நகர்ந்து சென்றது.

ப‌த்ம‌ன் க‌ண்க‌ளை திற‌க்க‌ முய‌ற்சிக்க‌வில்லை. க‌ண்ணீர் வ‌ழிந்து கொண்டிருந்த‌து. மெதுவாய் பால‌த்தின் ந‌டைபாதையோர‌மாய் சென்று அம‌ர்ந்து கொண்டான். இர‌ண்டு நிமிட‌ங்க‌ள் கூட‌ அவ‌னால் தாக்கு பிடிக்க‌ முடிய‌வில்லை. வேக‌மாய் வாய்விட்டு அழ‌ ஆர‌ம்பித்தான்.