கடவுள் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படம்

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks

இயக்குனர் இமயவரம்பன் அந்தச் செய்தியை சொல்லும்போது எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. கடவுள், இமயவரம்பனின் புதிய படத்தில் நடிக்கப்போவதாக அரசல் புரசலாக வந்த செய்தியை நம்பாமல் அவரிடம் நேரே கேட்க நேரம் ஒதுக்கிக் காத்திருந்ததில் இப்படி ஒரு செய்தி கிடைக்கும் என்று நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. என்னையே நான் ஒரு முறை இயக்குனருக்குத் தெரியாமல் கிள்ளிப்பார்த்துக் கொண்டேன். நிஜம்தான். கடவுள் நடிக்கப்போகிறார். எனது வாராந்திர பத்திரிக்கையில் இந்த மாதம் கடவுளின் புண்ணியத்தால் சம்பளத்துடன் சற்று அதிகப்பணம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. உள்ளறையிலிருந்து செல்பேசி ஓசைக்கு இயக்குனர் எழுந்து சென்றிருந்தார். நான் செய்திகளை மனதிற்குள் கோர்க்கத் தொடங்கினேன்.

செல்பேசி விட்டு வந்த இயக்குனரிடம் நான் பேட்டியென்று கூறாமல் எங்களுக்குள் இருந்த தனித்த நட்பில் வியப்பை பேச்சினில் காட்டி அவரை பேச வைத்துக் கொண்டிருந்தேன்.

கடவுள், பூமியை சுற்றத் தொடங்கிய நாளிலிருந்து பூமியில்தான் அலைந்து வருகிறாராம். அவர் கடவுள் என்று தெரிந்திராதவரை அவரை யாரும் தொந்தரவு செய்யாமல் தான் இருந்திருக்கின்றனர். இவர் உருவாக்கி மகிழ்ந்த பூமியின் நிகழ்வுகள் அவரையும் அதிகம் பாதித்து இருக்கின்றன. மழையில் நனைந்து காற்றில் உலர்த்தி வெயிலில் காய்ந்து இருக்கின்றார். சினிமாவில் நடிப்பதற்கு விருப்பம் மேலோங்க கடவுளாகவே இமயவரம்பனை பார்க்க வந்து தன்னைப்பற்றிக்கூறி ஆசி வழங்கி படத்தை இயக்கச் சொல்லியிருக்கின்றார்.

இயக்குனர் இமயவரம்பனின் முந்தைய மூன்று படங்களின் தோல்வியைப் பற்றி கடவுளுக்கு எந்த அளவிற்கு தெரியும் என்று தெரியாத சூழலில் கடவுள் அவரது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதில் எனக்கு சற்று வருத்தம் இருந்தது. முன்னாள் நடிகை ஒருத்தியை, மனைவி இருக்கும்போதே சின்னவீடாய் வைத்திருந்த இமயவரம்பனை விட முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாம் திருமணம் செய்துகொண்ட முத்தரசன் சிறப்பானவராக எனக்குப் பட்டது. கடவுள் நடிப்பார் என்று தெரிந்திருந்தால் வெள்ளி விழா இயக்குனர் முத்தரசன் தனது சம்பளத்தில் பெருமளவு குறைத்துக்கொண்டிருப்பார் என்று எனக்குத் தோன்றியது.

கடவுளுடனான ஒப்பந்தங்கள் குறித்து இயமவரம்பன் பேச மறுத்தார். நடிப்பது கடவுள் என்று முடிவான பிறகு அவருடன் ஒப்பந்த அளவிலான பேச்சு மதிப்பீடுகள் நிச்சயம் பலனற்றவை என்றே எனக்குப் பட்டது. கதை எந்தளவில் இருக்கிறது, பிற நாயக நாயகி தேர்வு என்பதைப் பற்றிய கேள்விகள் என்னிடமிருந்து இயக்குனரை சென்றன. பேச்சை மாற்றும் நோக்கில் இழுபடும் கேள்விகள்தான் இவையெனினும் எனது சிந்தனையை கடவுள் முற்றிலுமாகத் தன் பக்கத்தில் இழுத்து வைத்திருந்தார். நான் வந்தபோது கொண்டு வந்து தரப்பட்ட டீயை குடிக்காமல் இருந்தது பார்வையில் பட நாகரீகம் கருதி டீக்கோப்பையை கையில் எடுத்துக்கொண்டேன். எப்படி கேட்பது எப்படி கேட்பது என்ற தவிப்பில் விரலால் கோப்பையின் விளிம்பில் கோலம் போட்டுக்கொண்டு இருந்தவனை இயக்குனரின் செருமல் சப்தம் நிமிரச் செய்தது. பதட்டத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கேட்டு விட்டேன்.

“கடவுளின் பெயர் என்ன?”

0o0

கடவுள் நடிக்கும் படத்திற்கான பூஜை என்பது சாதாரணமானது இல்லை. பூஜை அழைப்பிதழ்களில் ’கடவுளின்’ புதிய படம் என்று ஆரம்பித்துத்தான் அச்சு செய்திருந்தார்கள். படத்திற்கான பெயரை இன்னும் முடிவு செய்யாத நிலையில் படப்பெயருக்கான இடத்தை வெறுமனே விடுவது அமங்கலமாக தயாரிப்பாளருக்குப் பட்டதால் அங்கு புதியபடம் என்று அச்சிட சொல்லியிருந்தாராம். மஞ்சள் வர்ண பத்திரிக்கையில் வெறுமனே யாருடைய புகைப்படமும் இல்லாமல் எழுத்துக்கள் மாத்திரம் பொன்னெழுத்துக்களால் மின்னிக்கொண்டிருந்தன. கடவுளைக் காண கூட்டம் அலைமோதியிருந்தது. உள்ளரங்கத்திலான பூஜை என்றாலும் வெளியில் கட்டுக்கடங்காத ஓசை முற்றிலும் குளிர்வசதியாக்கப்பட்ட அறையை தொட்டது. கடவுளுக்கான வாழ்த்துக்களும் ஆரவாரங்களும் விண்ணைத்தொட்டிருக்கும் என்று தோன்றியது. கடவுளுக்காக எழுதப்பட்ட சிறப்புப் பாடல் பதிவுடன் படத்தின் பூஜை ஆரம்பிக்கப்பட்டது. அரங்கத்தில் நாற்பதிற்கும் மேற்பட்டோர் கடவுளுக்கான சிறப்பு தூதுவர்கள் போல முழுக்க வெள்ளையாலான நிற உடையில் பரபரப்புடன் அலைந்து கொண்டிருந்தனர். முன்பே அனைவரும் தொடர்பு கொண்டு பேசியிருக்கக்கூடும். அங்கு நான் மாத்திரம் சிகப்பு வர்ண மேலாடையிலும் நீல வர்ண ஜீன்ஸிலும் நின்றிருந்தது சற்று நெருடலாகப்பட்டது எனக்கு. என்னைப்போன்று வேறு யாரும் வர்ண உடை அணிந்திருக்கிறார்களா என்று தேடியதில் தயாரிப்பாளரின் மனைவியும் சில நடிகைகளும் மாத்திரம் காணக்கிடைத்தனர். பெண்களுக்கான வெள்ளையுடையில் அத்தனை வசீகரிப்புத்தன்மை இல்லாமல் இருந்ததாலும் கடவுளை முன் காணும்போது நிறமற்றதொரு நிறத்தில் பெண்கள் இருப்பது கடவுளுக்கு ரசிப்புக்குரியதாயிருக்காது என்று நான் எண்ணிக்கொண்டேன். அங்கு நின்றிருந்தவர்களில் புகழ்பெற்ற குணச்சித்திர துணை நடிகை என்ற அளவில் பெயர் பெற்றிருந்த மைதிலி எனக்கு நல்ல பழக்கம் என்பதால் ஒரு புன்னகையை அவளிடம் வீசி அவளருகில் சென்று நின்று கொண்டேன்.

வெளியில் கடவுளைக் காண வந்தவர்களிடையே குழப்பம் அதிகரித்திருந்ததால் காவல்துறையின் உதவியால் அவர்கள் முழுவதுமாக அடித்து துரத்தப்பட்டிருந்தனர். நான் நாகரீகமாக அப்புறப்படுத்தப்பட்டிருந்தனர் என்று எழுத வேண்டிவரலாம். பத்திரிக்கையாளன் என்ற வகையில் வேறுயாரும் சிநேகப்புன்னகை என்னிடமிருந்து பெறுமளவு தெரிந்தவர்கள் இல்லாதது சற்று மனக்குறையாய் இருந்தது. எக்ஸ்க்ளூசிவ் செய்திகள் என்னிடமிருந்து மாத்திரம் வெளிவரும் என்பதில் வெளியான சிரிப்பில் சந்தோஷம் அதிகளவு கலந்திருந்தது. ஆனாலும் கடவுள் பூஜைக்கு வந்து சேராமலிருந்தது சற்று மனவருத்தத்தை எனக்குத் தந்தது. சுகவீனம், அஜீரணம் போன்ற நோய்க்குறிகளை கடவுளிடம் ஏற்றிப்பார்க்க மனம் ஒப்பவில்லை. அவருக்கான அவருடைய படப்பூஜையில் கலந்து கொள்ளாததற்கான காரணங்கள் வேறு ஏதேனும் எழுத வேண்டும்.

0o0

எனது பத்திரிக்கையில் கடவுளின் புகைப்படம் வெளியாகாதது குறித்து வந்த நிகழ்வு பற்றிய கடிதங்களில் வாசகர்களிடையே மிகுந்த வருத்தங்களைப் பெற்றிருந்தது. இது முழுக்க கட்டுக்கதை என்றும் ஏமாற்று வேலை செய்யாதீர்கள் என்றும் வந்திருந்த 162 கடிதங்களும் முழுக்க முழுக்க செய்திகள் கிடைக்கப்பெறாத எதிர்ப்பத்திரிகை நண்பர்களின் உதவியால் வந்திருக்கும் என்று ஆசிரியர் நம்பினார். குடும்ப சகிதமாய் கடவுளை சந்தித்து தரிசனம் பெற்று மனம் முழுக்க நிம்மதி நிரம்பி வழிந்த ஆசிரியருக்கு எதிர்ப்புக்குரல்களைப் பற்றிய கவலைகள் தீர்ந்திருந்தது. திரித்து அனுப்பப்படும் செய்திகளை முற்றிலும் வடிகட்டி விடுங்கள் என்று கூறாமல் அதையும் பிரசுரித்திருந்தது வியாபார யுக்தி என்று எங்களது போட்டி நிறுவனத்தில் அச்சிட்டு பரபரப்பாக அதிக வாசக எண்ணிக்கையை அந்த வாரத்தில் மாத்திரம் சேர்த்திருந்தனர். கடவுளின் புகைப்படங்கள் எங்கும் வெளியாகாதவாறு பார்த்துக்கொள்ள சிறப்புப் பயிற்சி பெற்ற தனிப்படை ஒன்று எப்பொழுதும் கடவுளைச் சுற்றிலும் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அவர்களில் பலர் சிகரெட் குடிக்கும் பழக்கம் கொண்டிருந்தது கடவுளை விட இயக்குனருக்கு அதிக வருத்தம் தந்தது. தயாரிப்பாளரும், கடவுளுக்கு முன்பாக சிகரெட் புகைத்தலை முற்றிலுமாக எதிர்த்திருந்தார். அதனால் படப்பிடிப்பு முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் ராணுவ பயிற்சித்தள அமைப்புடன் நடந்தது.

0o0

பகுத்தறிவுக்கான கூட்டங்களில் கடவுள் சினிமாவில் நடிக்கும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. நாட்டில் நிலவும் வேலை வாய்ப்பின்மை, நோய்க்கேடுகள், பெண்களுக்கு எதிரான அநீதிகள், வறுமை மற்றும் போர் போன்றக் கொடுமையான நிகழ்வுகளை மறந்து கடவுள் சினிமாத்தொழிலுக்கு போனதில் அவர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருந்தது. ஒரு சாரார் நடிப்பது கடவுள் இல்லையென்றும் கடவுள் பெயரால் அந்தப்படத்திற்கு கிடைக்கும் வியாபார நோக்கிற்காகவே குழுவாக இப்படி செய்கிறார்கள் என்றும் ஒவ்வொரு ஊரிலும் பிரச்சாரமாக செய்யத் தொடங்கினர். கடவுள் வந்திருக்கிறார் என்றால் ஏன் ஆணாக தோற்றம் கொள்ள வேண்டும் இது பெண்ணீய சிந்தனைக்கு எதிரானதாக உள்ளது என்றும் வட்டாரங்களில் பேச்சு அடிபட்டது. இப்போதைக்கு தேர்தல் வராத சூழலில் படம் வெளிவந்து வெற்றி பெற்று கடவுள், முதல்வர் நாற்காலி ஆசையில் அரசியலில் குதித்தால் என்ன செய்வது என்ற அச்சம் தான் இத்தனை களேபரங்களுக்கும் காரணம் என்றும் இது அரசியல்வாதிகளின் சூழ்ச்சியென்றும் எங்கள் நிறுவனத்தின் மற்றொரு புலனாய்வு பத்திரிக்கை சிறப்பு செய்தி வெளியிட்டு இருந்தது. ஆனாலும் அடிமனத்தில் எல்லோருக்கும் ஒளித்து வைக்க முடியாத ஒரு கேள்வி எப்பொழுது யார்மூலம் வெடிக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு பெருத்த வன்முறை மூலம் அக்கேள்வி மக்களிடையே அச்சத்தை உண்டு செய்திருந்தது. வன்முறையில் பலர் காயமடைந்தும், மூவர் அநியாயமாய் எரித்துக்கொல்லப்பட்டிருக்கக் காரணமாயிருந்த அந்தக்கேள்வி...

”அந்தக் கடவுள் எந்த மதம்?”

0o0

தமிழ்நாட்டின் கலவரங்களை காரணம் காட்டி வரவழைக்கப்பட்ட சிறப்பு காவல்படை தமிழ்நாடு முழுக்க ரோந்து சுற்றிக்கொண்டிருந்தது. கடவுளின் படத்திற்கான ஆயத்தங்களை தாங்குவதற்கு தமிழ்நாடும் தமிழனும் இன்னும் தயாராகவில்லை என்ற அளவில் இருந்ததாலும் இயக்குனரும் தயாரிப்பாளரும் இந்த சினிமாவை இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் நேரடியாய் வெளியிட விருப்பமாய் இருந்தனர். தமிழ்ப் படத்தில் நடிக்கும் கடவுளுக்கான மொழி தமிழாக இருந்ததால் வெளி மாநிலங்களில் கடவுளுக்கு அவ்வளவு மதிப்பு இருக்குமா என்ற என்னுடைய சந்தேகத்திற்கு அத்தனை மொழிகளிலும் கடவுளே டப்பிங் பேசுவார் என்று கூறி வாயில் இனிப்பை அள்ளித்திணித்து விட்டு சென்றான் ஒரு உதவி இயக்குனன். கடவுளின் படத்தில் பணிபுரிவது என்பது உதவி இயக்குனராய் பணிபுரியும் அவனுக்கான மிகப்பெரிய அடையாள அட்டை என்று ஒருநாள் குடிபோதையில் என்மீது சாய்ந்து உருண்டு புலம்பித்தள்ளியிருந்தான். கடவுளுக்கான ரசிகர் மன்றங்கள் திறத்தல் என்பது அத்தனை சுவாரசியமாயில்லாத காரணத்தால் கடவுளை துணை கொண்டு பக்திப்பேரவைகள் உருவாகியிருந்தன. பல்கிப்பெருகிய பக்தி பேரவைகளால் மற்ற ஆன்மீகவாதிகள் அச்சமும் வருத்தமும் தெரிவித்த வண்ணம் இருந்தனர். க்டவுள் மீண்டும் வருவதென்பது நிச்சயம் அழிவிற்கான செய்தி அறிவித்தல் என்று நம்புவதால் இந்த படத்தை நிறுத்திவிடுமாறு அன்புடனும் தனிப்பட்ட செல்வாக்கு கொண்டு மிரட்டலாகவும் பல்வேறு தரப்பிலிருந்து செய்திகள் வந்து சேர்ந்து கொண்டிருந்தன. நஷ்டம் என்ற அளவில் இயங்கி வந்த மிகப்பல திரையரங்குகள் கடவுளின் படத்தை வெளியிடுவதற்காக மீண்டும் தொடங்கப்போவதாகவும் அறிக்கை வெளியாகியிருந்தது. எனது கிராமத்தில் மூடப்பட்டு விட்ட திரையரங்கிற்கு புதிதாய் வெள்ளையடித்து மராமத்து பணிகள் நடைபெறுவதாக என்னிடம் தொலைபேசிய அம்மா கூறியபோது கடவுளின் சக்தியை நினைத்து பிரமிப்பில் ஆழ்ந்தேன். ஆனாலும் மனதை ஒரு கேள்வி என்னை மிகவும் வாட்டிக்கொண்டிருந்தது.

கடவுள் ஒரு சாராருக்கானவர் என்றால் பிரச்சினை வராதா?!

0o0

படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருந்த போது வெளிநாடுகளிலும் இதுபற்றிய செய்திகள் பரவி உலகத்தின் அதிர்ச்சியை தன்பால் கடவுள் ஈர்த்துக்கொண்டிருந்தார். கடவுள் என்பதற்கான அடிப்படை சோதனைகள் ஏதுமில்லாமல் தாங்கள் தமிழ்ப்படத்தில் நடிப்பது கடவுள்தான் என்று நம்பமுடியாது என்பதாக பல்வேறு உலகநாடுகளின் தலைவர்கள் கருத்துக்கூறியிருந்தனர். கருத்துக்கூறாத நாடுகளில் இச்செய்தி பரவாமல் தடுத்து வைத்திருக்கும் ஊடகத்தன்மை சந்தேகத்துக்குரியதாக்கப்பட்டது. மக்களிடம் செய்தி கொண்டு சென்று சேர்க்கும் வல்லமையை ஊடகங்கள் தவறவிடுவதாக கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன. ”கடவுள் என்பவர் உறைகல் அல்ல. அவரை உரசிப்பார்த்து உங்களின் தரம் காண முயலாதீர்கள்” என்று நான் எழுதிக்கொடுத்த கட்டுரை செய்தி தமிழ்நாடெங்கும் வரவேற்பு பெற்றதாக அடுத்த வார இதழில் அரைப்பக்க செய்தியை எங்கள் பத்திரிக்கை வெளியிட்டு இருந்தது. தங்கள் நாட்டு சினிமாவில் நடிக்கும் கடவுளை எதிர்ப்பது நாட்டின் தேசிய உணர்வை அவமதிப்பது போலாகும் என்று திடீர் உணர்வுகள் பொங்க அரசியல்வாதிகளும் பேட்டி அளித்தனர். கடவுளை நம்புவதா வேண்டாமா என்ற பிரச்சினை தீர்ந்து நீ எப்படி என் கடவுளை சொல்லலாம் என்ற அளவில் பேச்சு திரும்பியிருந்தது. மற்ற நாட்டினரும் தங்களது நாடுகளில் எங்கேனும் கடவுள் தட்டுப்படுகிறாரா என்று தேட ஆரம்பித்திருந்தனர். பெயரை ஆங்கிலத்தில் முறையாக எழுத இயலாத பல அரசியல் தலைவர்களின் பேச்சுக்களும் ஆங்கில முன்னணிகளில் புகைப்பட செய்தியாய் தொங்கிக்கொண்டிருந்தனர். கடவுள் நடிக்கும் படமென்பது மக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விசயம். மக்களின் உணர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென்பதில் அனைவரும் ஒன்றிணைந்திருப்பதாக தலைவர் தொலைக்காட்சி பேட்டியொன்றின் முடிவில் கூறி வணக்கம் வைத்திருந்தார்.

0o0

கடவுளிடம் நேரடிப்பேட்டி எடுப்பது என்பது நிச்சயம் என்னால் ஆகாத ஒன்று என்பது எனக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஆயினும் பேட்டி என்று கூறாமல் கேள்விகளுக்கு பதில் கொண்டு வா என்று கூறி என்னை அலுவலகத்திலிருந்து அனுப்பி வைத்திருந்தனர். கடவுளிடம் கேள்வி கேட்பதைவிட வேறு வேலை ஏதும் இல்லாததால் கடவுள் தனக்கான நடிப்பை முடித்து வரும்வரை காத்திருந்தேன். ஏற்கனவே கேட்ட கேள்விகளுக்கான பதில்களே கிடைககாத போது பொறுமையை சோதிக்கும் அம்சமான கேள்விகள் கேட்பதில் எனக்கு அலுப்பு இருந்ததால் கடவுளை கேள்வி ஏதும் கேட்காமல் படப்பிடிப்பு தளத்திலிருந்து அறைக்கு திரும்பி உடை மாற்றிக்கொண்டு உறங்கிப்போனேன். அதற்குப்பிறகு எனக்கு அந்த வேலை பார்ப்பதில் இஷ்டமில்லாததால் வேறு வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டேன். நான்கைந்து முறை என்னுடைய பத்திரிக்கை அலுவலகத்திலிருந்து என்னை மீண்டும் பணிக்கு திரும்ப சொல்லியும் நான் மறுத்துவிட்டது அவர்களுக்கு வருத்தத்தை தந்திருக்கக்கூடும். அதற்குப்பிறகு அவர்கள் என்னை அழைக்கவில்லை. என்னுடைய வேலைக்கான சம்பளத்துடன் அதிகமாக இரண்டாயிரம் ரூபாய் எனது வங்கிக்கணக்கிற்கு மாற்றப்பட்டிருந்தது.

படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்திருந்தது. படத்தில் நடித்த பல்வேறு நடிகரும் கடவுளின் ஆசிக்காக காத்திருந்து பெற்றுச் சென்றனர். கடவுளின் பெயரால் நடக்கும் சச்சரவுகளை தணிக்கும் பொருட்டு பெயரில்லாத அந்த கடவுள் நடித்த படத்திற்கும் கடவுள் என்றே பெயர் வைக்க ஆலோசித்து இறைவன், ஆண்டவன், பெரியவன். விகுதி குறைத்து மதிப்பிடத்தோன்றாததால் கடவுள் என்றே பெயர் கொள்ள முடிவு செய்யப்பட்டிருந்தது. முற்றிலும் இந்தத் திரைப்படம் மதம் சார்ந்து பாராமல் மனிதம் சாரும் கதை என்று விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் இது மனிதம் சார்ந்ததில்லை மக்கள் மனம் சார்ந்தது என்று எனக்குப் பட்டது. இவனது சாமியை அவன் அசிங்கப்படுத்த மாட்டான் என்றாலும் ஆனால் அவன் கடவுள் மீது வைத்துள்ள நம்பிக்கையை எப்படி முழுதாக்கிக் கொள்வான் என்று எனக்குத் தெரியவில்லை. பெயர் தெரியாத கடவுளின் பெயரில்லா படத்தைப் பற்றிய கருத்துக்கள் வேகவேகமாக மக்களிடம் பரவியிருந்தது. தணிக்கை அலுவலகத்தில் கடவுள் நடித்தப் படம் வெளியாவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன. விருது பெறும் படம் அல்லது கதை அல்லது கதாபாத்திரம் என்ற அம்சங்கள் தாண்டி கடவுளே நடித்திருப்பதால் இதனை தணிக்கையின்றி வெளியிட அனுமதி கோரியதை விதியின் பெயரால் அதிகாரிகள் நிராகரித்திருந்தனர். கடவுள் நடித்த என்ற எழுத்துக்களை நீக்கிவிட்டால் படத்தை வெளியிட தங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றும் இது மக்களின் மனதை புண்படுத்தும் வாசகங்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தயாரிப்பாளரும் இயக்குனரும் வாசகங்களை நீக்குவதற்கு மறுப்பு தெரிவித்து நீதிமன்றத்தை அணுகப்போவதாக செய்திகள் வெளியானது. ஆனாலும் படம் வெளியாகும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் குறைந்து வருவதாகத்தான் எனக்குப் பட்டது. ஒரு வேளை கடவுளும் சட்டத்தை மதிப்பது காரணமாக இருந்திருக்கலாம்.

0o0

மழை அதிகம் பெய்து கொண்டிருந்த ஒரு நள்ளிரவில் மின்சாரம் இல்லாததால் தூக்கம் வராமல் மழைச்சாரலை ரசித்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்து புகையூதிய நேரத்தில் கடவுள் நனைந்து கொண்டே எனது அருகில் வந்து நின்றார். எப்போதும் கிடைக்கும் அதே புன்னகை கொஞ்சமும் குறையாமல் முகத்தில் கிடைத்தது. அணைக்கத் தோன்றாமல் புகைந்து கொண்டிருந்த சிகரெட் மழைச்சாரல் ஈரம் பட்டு கொஞ்சம் கொஞ்சமாய் அணையத்தொடங்க நான் சிகரெட்டை கீழே வீசினேன். இவ்வளவுநாள் இல்லாமல் கடவுளை நேராக கண் கொண்டு காண சற்று அச்சம் இருந்தது. இப்போது தனியாக இருப்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

கடவுள் அமைதியான குரலில் சினிமாவும் அலுத்துவிட்டதாக கூறினார். தான் மீண்டும் பயணம் போக தயாராக இருப்பதாகவும் அதற்கு முன் என்னைக்கண்டு செல்ல விரும்பியதாகவும் சொன்னார். அவரது நினைவுகளில் என்னைப் பற்றிய எண்ணங்கள் இருப்பது எனக்கு ஆச்சரியமூட்டுவதாக இருந்தது. நான் ஒன்றும் பேசாமல் நின்றேன். எனது பதின்ம வயதுகளில் நான் மிகவும் நேசித்த பிறந்து பத்து நாட்களே ஆன அழகான பழுப்பும் வெள்ளையும் கலந்த குட்டிப்பூனையை அதன் தாய்ப்பூனை கவ்வி எடுத்துச்சென்றுக் கொன்றதற்கு ஆறுதல் கூறினார். எனக்குள் துக்கம் பொங்கியது. சரி நான் கிளம்புகிறேன் என்று கிளம்பியவரிடம் ஒரு கேள்வி கேட்க நினைத்தேன். எதிர்பார்த்தவர் போல திரும்பி என்னைப் பார்த்தார்.

“நான் நாத்திகன்ங்கறது உங்களுக்குத் தெரியுமா?” என்றேன்.

கடவுள் சிரித்துக்கொண்டே நடந்து சென்று பெய்துக் கொண்டிருந்த மழையில் கொஞ்சம் கொஞ்சமாக பார்வையிலிருந்தும் கரையத்தொடங்கினார். அதற்குப்பிறகு அவரைப்பற்றிய செய்திகள் வருவது முற்றிலுமாக நின்று போயிருந்தது. அற்புதங்கள் விளைவிக்காத, வரங்கள் அள்ளித்தராத, மக்களை நெருங்காத கடவுளாக இருந்ததால் மக்களும் தங்களுக்கான கடவுள் அவரல்ல என்று நம்பத்தொடங்கினர். அவர் நடித்த படமும் வெளியாகாமல் இருந்ததால் அவருக்கானப் பெயர் என்னவென்று தெரியாத நிலையில் ராசியில்லாத கடவுள் என்ற பெயரை சுமந்திருந்தார். நான் அதைக் கேள்விப்பட்டு மிகவும் வருத்தப்பட்டேன்.