கொலை செய்யப் போறோம்

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks


வனிதாவை சாகடிப்பது என்று முடிவு செய்த நிமிடத்திலிருந்து எனக்கு பதட்டம் அதிகரித்திருந்தது. எப்படி சாகடிக்கப்போகிறோம் என்ற முடிவுக்கு வருவதற்காகத்தான் நாங்கள் இங்கு சேர்ந்திருக்கிறோம்.

நாங்களில் நான் மணிகண்டன். எனக்கு இடப்புறமாக அமர்ந்து சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டிருக்கும் ரவி, பேண்டிலிருந்து லுங்கிக்கு மாறிக்கொண்டிருக்கும் கோபி, அறையில் உள்ளே கிடைத்த பழைய விகடனை புரட்டிக்கொண்டிருக்கும் ராஜா. எங்கள் நால்வருக்குத்தான் இப்போது தலைவலி. நாங்கள் சாகடிக்க வேண்டியது ராஜா காதலித்துக் கொண்டிருக்கும் வனிதாவைத்தான். ஆனால் அவன் அதைப்பற்றிய கவலை இல்லாமல் இருந்தான். அவனுக்குச் சற்றுப்பக்கத்தில் நேற்று வனிதா தந்துவிட்டுப் போன அவளது கல்யாணப்பத்திரிக்கை ஃபேன் காற்றில் தாள்களை படபடக்க விட்டபடி கிடந்தது.

எப்போதும்போல அபிராமி டீக்கடையில் எங்களுக்கான தனி அறை உள்ளேயே அமர்ந்து பேச வேண்டிய நேரங்கள் தவிர்த்து இன்று எனது அறைக்கு வரச்சொல்லியிருந்தபோது மற்ற மூவரின் புருவமும் உயர்ந்தது. அவர்களும் என் முடிவு தெரிந்துதான் வந்திருப்பார்கள் என்று நான் வனிதாவை சாகடிக்க வேண்டும் என்று சொன்னபோது அதை மவுனமாக ஆமோதித்தபடி சிகரெட் புகை ஊதிய விதத்திலேயே தெரிந்து கொண்டேன்.

வனிதா - நல்ல அழகி. இரண்டு வார்த்தைகளில் முடித்து விட முடியாதபடியான அழகுக்கு சொந்தக்காரி. வசதியான அப்பா, அம்மாவிற்கு ஒரு அண்ணனுடன் பிறந்தவள். நல்ல சூட்டிகை. அடாவடியான செயல்களும் துக்கிரித்தனமான பேச்சும் இவளைக் காண்பவரை கவர வைத்திருந்தது. ஆனாலும் இவளுக்கும் இவளது அண்ணியான பத்மினிக்கும் சரிவர பேச்சு இருந்ததில்லை. காரணம் அங்கீகாரம் மற்றும் முக்கியத்துவம்.

வனிதாவை விட பத்மினிக்கு குடும்பத்தில் மருமகள் என்ற அந்தஸ்தை விட முதல் மகள் என்ற பெருமை கிடைத்திருந்தது வனிதாவிற்கு அதிகப்பொறாமை கிளப்பி விட வசதியாயிருந்தது.

இது போதாதென்று அண்ணி மேல் இவளது வெறுப்பை அதிகரிப்பதற்கென்றே அவ்வப்போது பத்மினியைப்பற்றி அக்கப்போர் சொல்லிக்கொண்டிருக்கும் அவளது அப்பாவுடன் கூடப்பிறந்த தங்கை சரஸ்வதி மற்றும் அவளுடைய தூரத்து உறவுக்காரி நந்தவனம் இருவரும் போதுமானவாயிருந்தனர். சரஸ்வதிக்கு வனிதாவை தனது பையனுக்கு திருமணம் செய்து வைத்து மருமகளாக்கிக் கொண்டு சொத்தில் ஒரு பாதியை அனுபவிக்கும் எண்ணமும் இருக்கிறது.

ஆனால் இவ்வளவு எண்ணங்களிலும் எதுவும் நிறைவேறாது, வனிதா அவளது வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்ளப்போவதாய் சொல்லியபோதுதான் எங்களுக்கு சங்கடங்கள் ஆரம்பித்தது.

வனிதாவிடம் எவ்வளவோ நைச்சியமாய் பேசியும் எங்களின் எந்தத் திட்டத்திற்கும் அவள் ஒத்துக்கொள்ளாததும் சாகடிக்க காரணமாய் அமைந்தது. ராஜாவிற்கு கவலையில்லை. அவனை ஒருதலையாய் காதலித்துக் கொண்டிருக்கும் மைதிலியின் மேல் பார்வை வீச அவனுக்கு ஒரு காரணம் கிடைத்துவிடும்.

வனிதாவை சாகடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.

1. தற்கொலையாய் காட்டலாம். ஆனால் இதில் இவளுக்கான தனிப்பட்ட சங்கடங்கள் ஏதுமில்லாதது கவலை. அவளுக்கும் அண்ணிக்கும் இடையில் சண்டை வெறுமனே பனிப்போர் அளவிலேயே இருப்பதும் பெரிய அளவிலான பிரச்சினைகள் இன்னும் ஏதும் ஆரம்பமாகமல் இருப்பதும் சிரமம் தரக்கூடியது.

2. கொலை. இதில் யார் மேல் பழி போடுவது என்ற கேள்விதான் பூதாகரமாய் உள்ளது. அண்ணி, சரஸ்வதி, நந்தவனம் இவர்களை தவிர்த்து ராஜா மேல் எளிதாக சந்தேகப்பட்டு கை வைக்க வாய்ப்பு உள்ளது.

3. விபத்து. வீட்டில் இயல்பாக நடக்கும் விபத்தில் இறக்குமாறு செய்யலாம்.

நான் யோசனையாய் பேப்பரில் நட்சத்திரங்கள் வரைந்து கொண்டு இருந்தேன்.

நான் ஏதும் பேசுவேனென்று அமைதியாய் அமர்ந்திருந்த ராஜா எரிச்சலாய், “அதான் சாகடிக்கறதுன்னு முடிவு செஞ்சுட்டீல்ல. அப்புறம் என்ன? ஏதும் ஆக்சிடண்ட்ன்னு போட்டு போட்டோவுக்கு மாலைய மாட்டி இந்த வாரத்தை முடி. சீரியலுக்காக ஒருத்தியைக் கொல்லுடான்னா சீரியல் கில்லர் ரேஞ்சுல யோசிச்சுட்டு இருக்கே. இன்னும் ரெண்டு நாள்ல அடுத்த ஆளை ரெடி செஞ்சு கதைக்குள்ள கொண்டு வந்துடலாம். நைட் ரொம்ப லேட் ஆகிட்டு இருக்குது. சீக்கிரம் தூங்கணும். நாளைக்கு இன்னொரு ஷெட்யுல் இருக்குன்னு டைரக்டர் சொல்லியிருக்காரு” என்று சலிப்புடன் சொல்லிவிட்டு தூங்கிப்போனான்.