பிடித்த கவிதைகள் - 3

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
 • Agregar a Technorati
 • Agregar a Del.icio.us
 • Agregar a DiggIt!
 • Agregar a Yahoo!
 • Agregar a Google
 • Agregar a Meneame
 • Agregar a Furl
 • Agregar a Reddit
 • Agregar a Magnolia
 • Agregar a Blinklist
 • Agregar a Blogmarks

கோணம்

நான்
தலைகீழாகத் தலைவாரிக்கொண்டிருப்பதை
தலைகீழாகச் சமைப்பதை
தலைகீழாக உணவருந்துவதை
தலைகீழாக அமர்ந்து குழந்தைக்குப் பாலூட்டுவதை
தலைகீழாக புத்தகம் வாசிப்பதை
தலைகீழாகவே நின்று
தன்னை உற்றுப் பார்ப்பதை
அச்சத்துடன் வியந்து பார்த்தபடியிருக்கிறது
தோட்டத்து விருட்சத்தில் காய்த்துக் கிடக்கும்
வௌவால்

மௌனத் துரு

சொல்வாய் எனும் எதிர்பார்ப்பில்
இடைவெளியின்றி விழுந்து
நிரம்பிக்கொண்டிருக்கிறது
திடமான மௌனம்

எளிதாகவேயிருக்கிறது
வார்த்தைகளைப் பற்றிக்கொள்வதைவிடத்
துருவேறியிருந்தாலும்
மௌனத்தை பற்றிக்கொள்வது

பதட்டம்

தோற்றத்தில் இனம்பிரித்துக்
காட்டாத குழந்தையின்
நனைந்த உள்ளாடை விலக்க எத்தனிக்கையில்
கூசிச் சிரித்துக் கைபொத்தித்
திகிலூட்டும் குழந்தை

கருணையின் ஊற்று

திறந்திருக்கும் கார் கண்ணாடி வழியே
தேய்வுற்றுக் கரைந்த
ரோகக் கை நீட்டி
இரைஞ்சும் கிழவிக்கில்லை
என் கருணையின் ஊற்றைத்
திறப்பதற்கான
துளிப் பிரயாசையும்

ஒரு பூ மலர

முன்பு
ஒரே ஒரு முறை
சந்தித்திருப்பின்
மொத்த வாழ்வையும்கூடப்
பணயம்வைக்காதிருந்திருக்கலாம்

கண நேரப் பொறுமை
இந்த மோசமான வார்த்தையை
விழுங்கிச் செரித்திருக்கும்

உரிய கவனமோ அக்கறையோ
இருந்திருந்தால்
சிதறியிருக்காது
இந்த நட்பு

சுவையற்ற நீண்ட காலம்
ஸ்தம்பிக்கிறது
கண நேர அவகாசங்களில்

இப்பூ மலர
ஒரு கணம் தாமத்திருந்தால்
இப்படி கனன்றுகொண்டிருக்காது
இல்லையா?

வன்மம்

வஞ்சம் படர்ந்த
நகரத்தின் தெருக்களில்
வெப்பம் மிதந்தலையும்
பேருந்தில்
வியர்த்து வழியும் உடல்களினூடே
எங்கோ துளிர்த்துப் பெருகிய வன்மமென
என்மீது நீளும்
ஓர் ஆண்குறி

உயிர்ப்பின் வெம்மை

முன் எப்போதோ
தன் பறத்தலிலிருந்து
நிலம் மீண்ட மயிலிறகு
ஒளிந்திருக்கிறது
என் குழந்தையின் புத்தக இடைவெளிக்குள்

தன் உயிர்ப்பின் வெம்மையோடு
அவனது கனவுகளை அடைகாத்தபடி

நீக்கமுடியாத வரிகள்

நீ அருகிலிருந்த வேளை
நிலைக்கண்ணாடிப் பிம்பமென
எப்படியோ வந்துவிட்டது
சில வருத்தங்களும் வலிகளும்

என் நினைவுகளில்
உன்னைப் பற்றிய வரிகளை
நீக்கிவிடச் சொல்லி மன்றாடுகிறாய்

உனக்குப் புரிவதில்லை
உன்னைப் பற்றிச் சொல்லாமல்
வலியைப் பற்றி மட்டுமே பேசுமென்
சாத்தியமின்மைகளை

இந்த மாலை

வேறெந்தப் பொழுதுகளையும்விடச்
சுமக்கவே இயலாதபடிக்கு
எப்படி இவ்வளவு கனத்துவிடுகிறது
இந்த மாலை
மாதவிடாய் ஈரம் நிரம்பிக்
கனக்கிற பஞ்சைப்போல

மெழுகுச்சுடர்

நீங்களில்லாத பொழுதில்
உங்களைப் பற்றிய வருத்தங்களோடு
ஓரிடம் தேடிப்போவேன்
நானில்லாத சமயங்களில்
நீங்களும் அப்படித்தான்
நாமிருவர் பேசிக்கொள்கையில் மட்டும்
கூச்சமின்றி வளர்த்தெடுக்கின்றோம்
பிரியங்களால் மெழுகிய ஒரு சுடரை


கவிதைகளின் மூலம் : பச்சை தேவதை (கவிதைத்தொகுப்பு)
ஆசிரியர் : சல்மா
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்