என் இரண்டாம் காதலி

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
 • Agregar a Technorati
 • Agregar a Del.icio.us
 • Agregar a DiggIt!
 • Agregar a Yahoo!
 • Agregar a Google
 • Agregar a Meneame
 • Agregar a Furl
 • Agregar a Reddit
 • Agregar a Magnolia
 • Agregar a Blinklist
 • Agregar a Blogmarks


படித்து முடித்த மர்ம நாவலை மீண்டும் படிப்பதை விட கொடுமையானது இரண்டாம் முறை காதலிப்பது. எப்படியும் தெரிந்த முடிவுதான் என்ற போதிலும் காதலித்தலில் உள்ள சுவாரசியம் எப்படி தோற்கும் என்று தெரிந்து கொள்வதற்காக பொறுமை காப்பதுதான். ஆனால் முதல் காதலில் தோற்றபின் தாடி வளரும்வரை அவள் முகம் காணக்கூடாது என்று ஒளிந்து போகும் அசௌகரியம் இரண்டாம் காதலில் இருப்பதில்லை. இரண்டாமவளுக்கு, என் காதல் எப்படி தோற்றது என்ற ஞாபகக்குறிப்புகளை மன அகழ்விலிருந்து மெல்லிய விரல்களால் இதயம் வரை விட்டு பிராண்டியதில் நெஞ்சில் இரத்தம் கண்டு இரண்டு சொட்டு கண்ணீர் மட்டுமே அவள் கண்களில் மிஞ்சியது. அவள் விரல் நகத்தில் ரத்தம் பட்டுவிட்டதால் இப்படி வருத்தப்படுவாள் என்று தெரிந்திருந்தால் இதயத்தை கழட்டியாவது வைத்துவிட்டு வந்திருக்கலாமோ என்று தோணியது. அழகான மருதாணி என்று சமாளித்தலில் வலியை தீர்த்துக்கொண்டேன். ஆனாலும் புதியவள் மூத்தவளை அக்கா என்ற உறவுமுறையை கொண்டாடுவது எனக்கு தெரிந்த முடிவின் ஆரம்பமாகவே தோணியது. போடா! போய் ரெண்டு கூல்டிரிங்ஸ் கொண்டுவா என்று சத்தத்தின் முடிவிலும் எனக்கு ஐஸ்கிரீம் என்ற குயிலின் குரலுக்குத்தான் அவன் அமைதிப்பட்டு சென்றான் என்பது தனியாய் அவனிடம் சிக்கியபோது எனக்கு தெரிய வந்தது. அமைதியாய் இருந்திருக்கலாமோ..?! காதல் ஆராய்ச்சிக்குறிப்புகளை ஆரவாரத்துடன் வெளியிடலில் அவளது மௌனம் கலந்த சம்மதத்தில் கிடைத்த முத்தம் மட்டுமே மிச்சம். எச்சம் புனிதமாகிறது என்று எந்த புத்தன் சொல்லியிருப்பானென‌ தெரியவில்லை. நான் அன்று புனிதனாகியிருந்தேன்.

தனிமையை நான் ரசிக்க ஆரம்பித்தது எப்போது என்ற எந்த விவரணங்களும் என்னுடைய ஞாபகப்படிமங்களில் இல்லை. ஆனாலும் அவளுக்காக‌ தனியனாய் காத்திருந்த காலத்திலிருந்தே தனிமையை துணை கொண்டு விட்டேன். தனக்குள் பேசக்கற்றுக்கொள்வதை யோகம் என்று எந்த பைத்தியக்காரன் எழுதி வைத்தானோ. நான் அவளுடன்தான் இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறேன். அவள் வந்து விடுவாள் என்ற எண்ணத்தில் எழுத ஆரம்பித்த கவிதை இன்னும் முற்றுப்புள்ளிக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அவளது நினைவை அழிப்பதற்காக எழுதப்படுகின்ற எல்லா கவிதைகளுமே அவள் நினைவைக் கொள்வதாக எண்ணி எழுத்துக்களை கொன்று தின்கின்றேன். ஆனாலும் எழுத்துக்கள் என்னை தவ்விப்பற்றி உடலெங்கும் சூழ்ந்து என்னை தின்ற ஆரம்பித்து விட்டன. ஒவ்வொன்றாக பிடுங்கி இழுத்துப்போட்டதில் அப்பாடா அவளும் தொலைந்து விட்டாள். அடுத்த கவிதைக்கான வார்த்தை கிடைக்கும் வரை நிம்மதியாய் இருக்கலாம்.


அவளுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது. இனி அவளை காண்பது அரிதாகிவிடும். நினைவுகள் அதிகமாகிவிடும். மதுக்கிண்ணத்தை ஏந்துவதற்கான தேதி குறிக்கப்பட்டு விட்டது. மற்றவர்களை விட இவளுக்காக‌ ஒரு கோப்பை அதிகம் குடிக்க வேண்டும். என் காதலிக்கு திருமணம் என்ற செய்தி அவள் என்னை காதலித்த செய்தியை விட விரைவாய் வந்து சேர்ந்து விட்டது. அவளுக்காக கறுப்பு தாஜ்மஹாலை வரையத்தொடங்கிவிட்டேன். வரைந்து முடித்தப்பின் என்னை அதில் புதைத்து விடுங்கள். அதற்கும் அமர்ந்து அழவேண்டும் தனியனாக.


என் எல்லா காதலிகளும் காதலை கற்று மறக்கிறார்களோ இல்லையோ... காதலனை நன்றாகவே மறக்கத்தெரிந்திருக்கிறார்கள்.