அந்த தேவதைக்கு வாலும் இருந்தது

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks

................
.........................
.............
முத்தமிட்டோ முகம் சுழித்தோ
பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும் நீ
ஏனெனில் இது பரிசு

.....................ஜெ.பிரான்சிஸ் கிருபா, மெசியாவின் காயங்கள் கவிதைத்தொகுப்பில்

நெடுமர விழுதென விழுந்திருந்த இரவின் கிளைகளில் அமர்ந்திருந்த மேகங்களை உரசி உரசி மெலிந்து தேய்ந்திருந்த நிலவின் வெளிச்சக்கூடுகள் அணையத்தொடங்கிய சிம்னி விளக்கினை ஒத்திருந்தது. காற்றற்றிருந்த சப்தங்கள் மரித்துப்போன பறவைகளின் உறக்கத்தினூடான பொழுதுகளின் ஆரம்பமாக காலம் இருந்தது. வழக்கமான நடைபாதையை ஆக்கிரமித்து அவ்வப்போது ஓட்டநடைகளை கொண்டிருந்தவர்களின் நடமாட்டம் இல்லை. இந்நேரத்திய விழிப்பு கலக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. தனிமையை முழுமையாய் ரசிக்க விடாது ஏதேனும் செய்யச்சொல்லும் ஓட்டம் கொண்டிருந்தது.

எழுந்து தலைக்கு மேலே என் உயரத்திற்கு எட்டாத மெல்லிய கம்பிகளால் இணைக்கப்பட்டிருந்த சன்னலில் நட்சத்திரம் தேடினேன். இந்த நட்சத்திரம் புதிதாய் எனது சன்னலுக்கு வெளியே அமர்ந்ததிலிருந்து இன்று ஆறாவது இரவு. பிந்தைய மூன்று இரவுகளால் முயற்சித்து, மரத்தினாலான‌ மெல்லிய தடுப்பை நகங்களால் நிற‌ம் கசிய கசிய சுரண்டி உண்டாக்கிய சிறிய இடைவெளியில் பக்கத்து நகரத்தில் அனுமதியின்றி பார்வை செலுத்தினேன். ஒருக்களித்து படுத்திருந்து தலைதாங்கிக் கொண்டிருந்த விரல்களில் ரத்த ஓட்டம் அற்றுப்போனதால் கைகளை இறக்கிக்கொண்டு வானம் காண படுத்தவளின் பின்புறத்தில் கல்லைக்கொண்டுக் குத்தி திமிறச்செய்த வேதனை உண்டாக, முகத்தின் சுழிப்புமீட்சிகளுடன் உறக்கச்செயலை முழுமையாக்க வலியை அனிச்சையாக்கி கைகள் கோர்த்து தொடையிடுக்கில் குறுக்கியபோது உடைதாண்டி நீண்டு மெத்தை விளிம்பில் தொட்டு ஊசலாடி நின்றது ஜெனிதாவின் வால்.

நேற்றைய இரவைப்போல் இன்று அவசரப்படவில்லை. மெதுவாய் வலக்கையின் ஆட்காட்டி விரலை பற்களுக்கிடையில் வைத்து கடித்தேன். நடுவிரலின் காயம் இன்னும் ஆறாதது மட்டுமின்றி அதிலிருந்து நிறம் வருவதும் நின்றிருந்தது. நேற்று நிறம் காண முயற்சித்தபோது பற்களின் அதீத பலத்தில் தோலுடன் சதைகளும் பிரிந்திருந்தது. இதற்காக காலையில்தான் வினோதமானவர்களின் உலக காப்பாளர் மருந்தென்ற‌ பேரில் பழந்துணிகளாலும் சில மர இலைக‌ளையும் சேர்த்து க‌ட்டியிருந்தார். அத‌ன் வாச‌னை என்னை மிக‌வும் வேத‌னைப்ப‌டுத்திய‌து. வாச‌னை, சேமித்து பிரித்த‌றிய‌ இய‌லாத‌ தொலைவுக‌ளை குறைக்கும் அரூப‌ங்க‌ளில் இதுவும் ஒன்று. ம‌ற்ற‌ இர‌ண்டு அரூப‌ங்க‌ள் ச‌ப்த‌ம் ம‌ற்றும் பார்வை. காற்றின் திசைகளில் இவை தொலைவுக‌ளை குறைத்து அருகிருக்க‌ச்செய்யும் அபூர்வ‌ங்க‌ள்.

ஆட்காட்டி விர‌லின் மேல் சுவ‌டுப்ப‌குதியிலிருந்து நிற‌ம் முளைக்க‌‌த்தொட‌ங்கியிருந்து. ஈர‌ம் காயாத‌ ஒரு நிற‌ம். அச‌ப்பில் கிளியின் மூக்கினைப்போல‌வும் விர‌ல்க‌ளின் இடைவெளிக‌ளைக் குறுக்கி சூரிய‌பார்வை காணுத‌ல் போல‌வும் விர‌வி விளிம்பிலிருந்து சுவ‌டுக‌ளை ஈர‌மாக்கிய‌ப‌டி ந‌னைந்து வ‌ழிந்த‌து நிற‌ம்.

இந்த‌ நிற‌த்தை என்னிட‌மிருந்து வ‌டித்து கல்சுவ‌டுக‌ளில் அவ‌ள‌து பெய‌ரை எழுதிக்காட்டி சிரித்த‌‌போது அவ‌ள் 'அய்யோ! ர‌த்த‌ம்' என்று அல‌றிய‌ காட்சி பார்வைக்கு வ‌ந்து அருகாமையை ம‌ங்க‌லாக்கிய‌து. அன்று அவ‌ள‌து பெய‌ரை அதிக‌ ஈக்க‌ள் மொய்த்திருந்த‌ன‌. அத‌னை அவ‌ளிட‌ம் காட்டிய‌போது ர‌த்த‌வாடைக்கு வ‌ந்த‌தாக‌ கூறினாள். ஈக்களின் மலராய் அவள் பெயரை நேசம் செய்து கொய்யும் காட்சியை க‌விதையாய் காண‌ அவ‌ள் விரும்ப‌வில்லை. அன்றைய‌ இர‌வு அவ‌ள் அதிக‌ம் க‌ண்ணீர் விட்டு அழுத‌தாக‌ ம‌றுநாள் என‌க்குத்தெரிய‌ வ‌ந்த‌து. முன்தினக்க‌ன‌வில் க‌ட‌லில் மூழ்கி த‌த்த‌ளிப்ப‌தாக‌ க‌ண்ட‌து அத‌னால்தான் என்று நான் உண‌ர்ந்தேன். என‌து உண‌ர‌ல்க‌ள் அனைத்தும் அவ‌ளுக்கு உள‌ற‌லாகப்ப‌ட்ட‌தால் என‌து உண‌ர்வுக‌ளை அவ‌ள‌றியாது ம‌றைக்க‌த் தொட‌ங்கியிருந்தேன். எப்போதும் மற்றவரின் நகரத்தின் முன்பு இருட்டாக கிடைத்துக்கொண்டிருந்த எனது நகரத்தை வெளிச்சத்தில் காண விரும்பி எனது நகரத்தை தீயிட்டு கொளுத்தி நகரத்தை வெளிச்சத்தில் பார்த்துக்கொண்டிருந்த போதும் அவள் அழுதாள்.

என்னை இந்த விநோதமானவர்களின் உலகத்திற்கு அழைத்து வந்து தனித்து விடப்பட்டபோதும் அவள் அழுதவண்ணம் இருந்தாள். அது அவ‌ள் என்னை புரிந்து கொள்ள‌ முடியாத‌ தின‌த்தில் க‌டைசிநாளாக‌யிருந்திருக்க‌க்கூடும். அவ‌ள‌து க‌ண்ணீர் கூட‌ இந்த‌ நிற‌த்தில் க‌ல‌ந்திருக்க‌க்கூடும். நிற‌த்தை வீணாக்க‌ விரும்பாம‌ல் ஜெனிதாவின் வாலை என்னை உட்புகுத்தியிருந்த ந‌க‌ர‌த்தின் சுவ‌ரின் அடிப்பாக‌த்தில் வ‌ரைய‌த்தொட‌ங்கினேன்.

வினோத‌மான‌வ‌ர்க‌ளின் உல‌க‌த்தில் என்னுடைய‌ ந‌க‌ர‌மாக‌ அறிய‌ப்ப‌ட்ட‌ இட‌ம் என்னுடைய‌ பாத‌ச்சுவ‌டுக‌ளில் இருப‌த்தெட்டு ந‌டைதூர‌ம் நெடுக்காக‌வும் ப‌திமூன்று ந‌டைதூர‌ம் குறுக்கிலுமாய் இருந்த‌து. என‌து ந‌க‌ர‌மாக‌ அத‌னை உட‌னே ஏற்றுக்கொள்ள‌ இய‌ல்வ‌து மிக‌க்க‌டின‌மாக‌ இருந்த‌து. என்னைவிட‌ என‌து உற‌வுக‌ளாய் இருந்த ஒற்றை சிங்கமும், ஆறு மான்க‌ளும் பிற‌ வில‌ங்குக‌ளும் இந்த‌ இட‌த்தில் ஒன்றுவ‌த‌ற்கு மிக‌வும் க‌டின‌மாய் உண‌ர்ந்த‌ன‌. தின‌மும் இவ‌ற்றிற்கு நீரைத்த‌விர‌ வேறெந்த‌ உண‌வையும் என்னால் த‌ர‌விய‌ல‌வில்லை. இவ‌ற்றைவிட‌ ப‌ற‌வைக‌ளின் க‌தி ப‌ரிதாப‌த்துரிய‌தாய் இருந்த‌து. அவ‌ற்றிற்கு உண்டான‌ இய‌ல்புக‌ளை அவ‌ற்றால் திடீரென‌ துற‌ப்ப‌த‌ற்குரிய‌ இய‌லாமையில் அவை நீண்ட‌ தூர‌ம் ப‌ற‌ப்ப‌த‌ற்கான‌ ஆய‌த்த‌ங்க‌ளில் இற‌ங்கின‌. என்னால் அத‌னை த‌டுக்க‌ முடிய‌வில்லை. என்னுட‌ன் இணைந்திருக்க‌ முடிவு செய்த‌வ‌ர்க‌ளிற்கான‌ ப‌ல‌ன்க‌ள் முற்றிலுமாக‌ குறைந்திருந்த‌து. ஆயினும் என்னுடைய பிடிவாத குணத்திற்கான பரிசாய் அவைகள் என்னுடன் தங்கி விட்டன. அந்த மிகச்சிறிய பூச்சிகள் மாத்திரம் புகுந்து வரக்கூடிய கம்பிகள் அடைபட்ட ஜன்னலின் வழி பறவைகள் புகுந்து சென்றது.

பூக்க‌ள் பூக்க‌ விரும்பாத‌ இட‌மென்று இத‌னை என்னால் க‌ருத‌ முடிய‌வில்லை. பூக்களை விரும்பாத‌ உல‌க‌மாக என்னால் அறிய‌ப்ப‌ட்ட‌து. வினோத‌மான‌ உல‌க‌த்தில் கொண்டு வ‌ர‌ப்படுப‌வ‌ர்க‌ள் அந்த‌ உல‌க‌த்த‌லைவ‌ரின் முன் நிறுத்திவைக்க‌ப்ப‌ட்ட‌ பிற‌கு ஆண்ட‌வ‌னிட‌ம் த‌லைவ‌ர் இறைஞ்ச‌த்தொட‌ங்குவார். ஆண்ட‌வ‌ரின் ச‌ன்னிதான‌த்தின் முன் நிறுத்த‌ப்ப‌ட்ட‌ வினோத‌மான‌வ‌னை மீள் உருவாக்க‌ம் செய்யும் ப‌ணியில் ஆண்ட‌வ‌னின் ப‌ங்கு அதிக‌ரிக்க‌ச் செய்யும் பிரார்த்த‌னைக‌ள் தொட‌ங்க‌ப்பெறும். ஒருநாள் காலை உண‌வுக்கான‌ முன்பான‌ பிரார்த்த‌னையில் அம‌ர‌ வைக்க‌ப்ப‌டும்போதுதான் ஜெனிதாவையும் வினோத‌மான‌வ‌ர்க‌ளின் உல‌க‌த்திற்கு கொண்டு வ‌ந்திருந்த‌ன‌ர். அவ‌ளையும் மீள் உருவாக்க‌ம் செய்து திருத்தித்த‌ரும் ப‌ணி ஆண்ட‌வ‌ருக்கு இருப்ப‌தாக‌ த‌லைவ‌ர் பிரார்த்தித்துக் கொண்டார். அப்போது ஜெனிதா ஆண்ட‌வ‌ரின் சிலைக்கு முன்னால் ம‌ண்டியிட்டு அம‌ர வைக்க‌ப்ப‌ட்டிருந்தாள். வ‌ழ‌மையான‌ நீல‌ நிற‌த்தில் அணிய‌ப்ப‌டும் வினோத‌மான‌ உல‌க‌த்த‌வ‌ரின் உடையில் இல்லை. பிரார்த்த‌னை முடிந்து காலை உண‌வு நேர‌மும் முடியும் ச‌ம‌ய‌த்தில் அவ‌ள‌து முக‌த்தை காண‌ முடிந்தது. ஆனால் பேசுவ‌த‌ற்கு வாய்ப்பு ம‌றுக்க‌ப்ப‌டும் ந‌க‌ர‌த்தில் நான் வாழ்ந்து வ‌ந்த‌தால் அவ‌ளை எளிதாய் க‌ட‌ந்து செல்ல‌ முடிந்த‌து.

வினோதமான‌வ‌ர்க‌ளின் உல‌க‌ காப்பாள‌ர் ஜெனிதாவை என் ந‌க‌ர‌த்திற்கு ப‌க்க‌த்தில் இருந்த‌ அறையில் த‌ங்க‌ வைத்திருந்தார். அவ‌ள் த‌ன்னை தேவ‌தை என்று ஒரு நாளிர‌வு த‌ன்னை என்னிட‌ம் அறிமுக‌ப் ப‌டுத்திக்கொண்ட‌திலிருந்து எங்க‌ளின் எல்லை குறைந்திருந்த‌து.

தான் தேவ‌தை என்ப‌தை அறியாம‌ல் த‌ன்னை வினோத‌மான‌வ‌ர்க‌ளின் ப‌ட்டியலில் இணைத்துவிட்ட‌தாக‌ அதிக‌ம் வ‌ருந்திய‌வ‌ளுக்கு த‌ன‌து ந‌க‌ர‌த்தை உருவாக்கிக் கொள்ளும் விந்தையை க‌ற்றுக்கொடுத்தேன். என‌து ந‌க‌ர‌த்தில் தேவ‌தைக‌ளை நான் உட்புக‌ விட்ட‌தில்லையெனினும் தேவ‌தைக்க‌தைக‌ளை அறிந்திருந்த‌ப‌டியால் அவள் தேவ‌தையாவ‌து ஏற்புடையதாயில்லை. தேவ‌தைக்க‌தைக‌ளில் மித‌க்கின்ற‌ சிற‌குக‌ளுட‌ன் உலா வ‌ருகின்ற‌ தேவ‌தைக‌ளின் ம‌த்தியில் இவ‌ள் மிக‌ச்சாதார‌ண‌மாய் இருந்தாள். அவ‌ள் திரும‌ண‌மான‌வ‌ளென்றும் அவ‌ள் க‌ண‌வ‌ன் மூல‌மே இவ‌ள் வினோத‌மான‌வ‌ர்க‌ளின் உல‌கில் இணைக்க‌ப்ப‌ட்டாளென்றும் அவ‌ள் கூறினாள்.

வினோத‌மான‌வ‌ர்க‌ளின் உல‌கில் வாழ்ப‌வர்களில் சில‌ருட‌ன் என‌க்கு ப‌ரிச்ச‌ய‌ம் உண்டு. மிக‌ முக்கிய‌மாய் ஹோன‌க்ஸ். அவ‌னுக்கு எப்போதும் ச‌ப்த‌ங்க‌ள் த‌ன்னைச்சுற்றிக் கொண்டு இருப்ப‌தாய் கூறியிருந்தான். அவ‌னால் இரைச்ச‌ல்க‌ளிலிருந்து ச‌ப்த‌ங்க‌ளை பிரித்துக்கொள்ள‌ முடிந்திருந்த‌து. அந்த‌ ச‌ப்த‌ங்க‌ளை அவ‌ன் வெளிப்ப‌டுத்தும்போது ம‌ற்ற‌வ‌ரின் துன்ப‌த்திற்கு ஆளானான். அரூப‌ங்க‌ள் ச‌ப்த‌ங்க‌ள். தூர‌ம் குறைக்கும் கூடுக‌ள். இவ‌ற்றை சொல்லி அவ‌னை சாந்த‌ப்ப‌டுத்த‌ முய‌ற்சித்த‌போது அவ‌ன் த‌ன‌து ச‌ப்த‌த்தின் ஒன்றை என‌க்கு உண‌ர‌வைத்தான். அது ஒரு குழ‌ந்தையின் அழுகையொலியாக‌ இருந்த‌து. மீளாத்துய‌ர‌த்தில் மித‌க்கின்ற‌ அந்த‌ அழுகையை கேட்டு ஹோன‌க்ஸ் மிக‌ப்பெரிதாய் அழுது கொண்டிருந்தான். அவ‌ன‌து அந்த‌ அழுகை நான்கு இர‌வு வ‌ரை தொட‌ர்ந்திருந்த‌து. அவ‌ன‌ருகே ம‌ற்ற‌வ‌ர் செல்ல‌வும் அந்த‌ நாட்க‌ளில் த‌டை விதிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. ஆனால் என்னைச் சுற்றிலும் நெடுங்கால‌ம் அந்த‌ குழ‌ந்தையின் அழும் ஓசை என்னை விடாம‌ல் சூழ்ந்திருந்த‌து. மிக‌வும் க‌டின‌மாய் அந்த‌ ஓசையை என‌து ந‌க‌ர‌த்திற்கு அப்பால் விட‌ மூன்று முறை முய‌ற்சித்து முழுமையாய் ஒருநாள் துடைத்தெறிந்தேன்.

பின் மேத்யூ. காற்றிலிருந்து சித்திர‌ உருவ‌ங்க‌ளை பிரித்தெடுப்ப‌வ‌ன். கை தேர்ந்த‌ ஓவிய‌னின் க‌லைந‌ய‌த்துட‌ன் காற்றில் மித‌க்கின்ற‌ உருவ‌ங்க‌ளை விர‌ல்களால் பிரித்து அவ‌ற்றை சேக‌ரிக்கும் ப‌ழ‌க்க‌ம் கொண்டிருந்தான். இவ்வாறு சேக‌ரித்த‌ உருவ‌ங்க‌ளுக்கு பெய‌ர்க‌ளிட்டு அவ‌ற்றை வ‌ள‌ர்த்துக்கொண்டிருந்தான். தின‌ந்தோறும் கிடைக்கின்ற‌ அதிக‌ உருவ‌ங்க‌ளால் அவ‌னால் அவனை வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ அறையில் இட‌ம் குறைந்து கொண்டே இருந்த‌து. இட‌ நெருக்க‌டியால் அவ்வ‌ப்போது அந்த‌ உருவ‌ங்க‌ளின் ம‌த்தியில் ச‌ண்டைக‌ளும் உண்டாகியிருந்த‌து. இத‌னால் ம‌ன‌ம் வேத‌னைப்ப‌ட்டு என்னிட‌ம் சில‌ உருவ‌ங்க‌ளை த‌ங்க‌ வைத்துக்கொள்ள‌ இய‌லுமா என்றும் உத‌வி கேட்டிருந்தான். ஆனால் நான் ஹோன‌க்ஸின் மூல‌ம் கிடைத்த‌ அனுப‌வ‌த்தினால் இவ‌னை பிடிவாத‌மாய் வில‌க்கி என‌து ந‌க‌ர‌த்தினுள் புகுந்து கொண்டேன். ஆயினும் இன்ன‌மும் மேத்யூ சித்திர‌ங்க‌ளை காற்றிலிருந்து பிரித்து த‌ன‌து அறைக‌ளுக்குள் சேக‌ரிக்கின்ற‌ ப‌ழ‌க்க‌ம் நிறுத்துகின்ற‌ ப‌டியாய் இல்லை.

இப்போது புதியதாய் ஜெனிதா. த‌ன்னை தேவ‌தையாக்கிக் கொண்ட‌வ‌ள். என்னுட‌ன் பேச‌த் தொட‌ங்கியிருந்தாள். என‌து ந‌க‌ர‌த்தின் அமைப்புக‌ளை அடிக்க‌டி கேட்டுக்கொண்டிருந்தாள். என்னுட‌ன் வாழும் வில‌ங்குக‌ளுக்காக‌ மிக‌வும் வேத‌னைப்ப‌ட்டாள். ஒருநாள் அத்துமீறிப் பிர‌வேசித்த‌ என‌து ந‌க‌ர‌த்தில் வெளியேறும் வ‌ழி அறியாது சுற்றிய‌லைந்து க‌ளைப்ப‌டைந்திருந்த‌வ‌ளை நான் அவ‌ள‌து ந‌க‌ர‌த்தின் வெளியே விட்டு வ‌ந்தேன். ஆயினும் எப்ப‌டியேனும் என் உத‌வியின்றி ஒரு நாள் என‌து ந‌க‌ர‌த்தில் இவ‌ள் புகுந்து என‌து ந‌க‌ரை அழிப்பாளென்ற‌ ப‌ய‌ம் என‌க்குள் உருவாக‌த்தொட‌ங்கியிருந்த‌து. என‌து ந‌க‌ர‌த்தின் காவ‌லைப் ப‌ல‌ப்ப‌டுத்தும் யோச‌னையில் ஆழ‌த்தொட‌ங்கியிருந்த‌ ச‌ம‌ய‌த்தில்தான் ஜெனிதா த‌ன‌க்கு வால் முளைத்திருப்ப‌தாக‌ கூறினாள்.

வால் முளைத்த‌ தேவ‌தை என்ற‌ சொல் என‌க்கு மிக‌ப்புதிய‌தாய் இருந்த‌து. எங்க‌ள் இருவ‌ரின் ந‌க‌ர‌த்தையும் மேற்பூச்சு வ‌ரை அடைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ ஒரு ம‌ர‌த்த‌டுப்பால் பிரித்து வைத்திருந்த‌ன‌ர். எங்க‌ள் பேச்சுக்க‌ள் ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் ந‌க‌ரை எட்டி அத‌ற்கான‌ ப‌தில் கிடைப்ப‌த‌ற்கான‌ தாம‌த‌சூழ‌ல் உருவான‌ கார‌ண‌த்தின் மூல‌ம் இது. இந்த‌ நிலையில் அந்த‌ தேவ‌தையின் வால் எப்ப‌டி இருக்குமென்று காணும் ஆவ‌ல் என‌க்கு அதிக‌ரித்த‌து. ஜெனிதா என‌து ஆர்வ‌த்தை அறியாத‌வ‌ளாக‌ பேசிக்கொண்டிருந்தாள். சாதார‌ண‌மாய் அவ‌ளால் த‌ரையில் அம‌ர‌ முடியாமைக்கு இந்த‌ வாலே கார‌ண‌ம் என்றாள். வீட்டில் த‌ன‌க்கு வால் முளைத்த‌ப்பிற‌கு அத‌னை ம‌ற்ற‌வ‌ர்க்கு தெரியாம‌ல் ம‌றைத்து வைக்க‌ அந்த‌ வாலை த‌ன‌து வ‌ல‌துதொடையில் சுற்றி க‌ட்டிக்கொண்டு ந‌ட‌ந்த‌தாக‌ கூறினாள். இவ‌ள‌து முய‌ற்சிக்கு இவ‌ள் குடும்ப‌த்தின் பார‌ம்ப‌ரிய‌ உடை பெரிதும் உத‌வியாய் இருந்திருக்கிற‌து. த‌ன‌து வாலின் நீள‌ம் அறிய‌ ஒரு முறை த‌ன‌து உடைக‌ளை க‌ளைந்துவிட்டு நிர்வாண‌மாய் த‌ன‌து வாலின் நுனியை ஒரு தூணில் க‌ட்டிவிட்டு ந‌க‌ர்ந்து சென்று நின்ற‌ இடைவெளியை குறித்துக் கொண்டு விட்ட‌தாக‌ கூறினாள். ஆனால் த‌ன‌து வால் எந்த‌ மிருக‌த்தின் வாலை ஒத்த‌தென்று த‌ன்னால் அறிய‌ முடிய‌வில்லையென்றும் தேவ‌தைக்கு வால் முளைத்த‌ க‌தை வெளியில் தெரிய‌வ‌ரும்போது த‌ன்னை தேவ‌தைக்கூட்ட‌ம் விட்டு வில‌க்கி விடுவார்க‌ளென்று அச்ச‌ம் கொள்வ‌தாக‌வும் தெரிவித்தாள்.

மிக‌ப்பெரிய‌ சாம்ப‌ல் தூவிய‌ வெண்மை நிற‌ இற‌க்கைக‌ள் கொண்ட‌ தேவ‌தைக்கூட்ட‌ம் ந‌டுவே இந்த‌ வால் முளைத்த‌ தேவ‌தை நிச்ச‌ய‌ம் த‌னித்து தெரியும் வாய்ப்புக‌ள் அதிக‌மிருப்ப‌தை உண‌ர்ந்து கொண்டேன். இருப்பினும் இவ‌ளுக்கு உத‌வும் வாய்ப்புக‌ள் ஏதும் இருந்தால் கூறுவ‌தாக‌ கூறியிருந்தேன். அவ‌ள் த‌ன‌து வாலைப்ப‌ற்றிக் கூறிய‌ பிற‌கு அவ‌ள‌து வாலைக்காணும் ஆவ‌ல் என‌க்குள் அதிக‌ரித்திருந்த‌து. த‌ன‌து முதுகெலும்பு கிளைத்து வெடித்து ஒரு நாள் வெளிக்கிள‌ம்பிய‌தாக‌வும் த‌ன்னிச்சையான‌ சுத‌ந்திர‌ முடிவுக‌ள் எடுக்கும் த‌ன்மை உடைய‌தாக‌வும் அந்த‌ வால் இருப்ப‌தாக‌ ஜெனிதா கூறினாள். அத‌னை முத‌லில் வெறுத்து க‌த்தியால் அந்த‌ வாலை வெட்ட‌ முய‌ன்றும் வால் வெட்டுப்ப‌ட‌வில்லை என்றும் க‌த‌றினாள். த‌ன‌து முந்தைய‌ தீராத‌ சாப‌மொன்று வாலாக‌ கிள‌ம்பியிருக்கும் என்று அவ‌ள் ந‌ம்ப‌த்தொட‌ங்கிய‌ பின் வாலுட‌ன் வாழ‌ முடிவு செய்திருந்தாள். ஜெனிதாவின் க‌ண‌வ‌ன் அவ‌ளது வாலைக்க‌ண்டு ப‌ய‌ந்து இவ‌ளை வினோத‌மான‌வ‌ர்க‌ளின் உல‌க‌த்தில் இணைத்தாக‌வும் கூறினாள்.

சில‌ நாட்க‌ளுக்குப்பிற‌கு ஜெனிதா உண‌வு உட்கொள்வ‌தை ம‌றுக்க‌த்தொட‌ங்கியிருந்தாள். அவ‌ளிட‌ம் கார‌ண‌ம் கேட்ட‌போது த‌ன‌து ந‌க‌ர‌த்தின் ச‌ன்ன‌லில் உள்ள‌ ஒரு சிறு ப‌ற‌வை புகுந்து செல்ல‌க்கூடிய‌ அள‌வுள்ள‌ துவார‌த்தின் வ‌ழியே உண‌வு உட்கொள்ளாம‌ல் இளைத்து த‌ப்பித்து தேவ‌தைக்கூட்டத்‌தில் இணைய‌ முடியுமென்று ந‌ம்புவ‌தாக‌ கூறினாள். அவ‌ள் த‌ப்பித்துப்போகும் முன்ன‌ர் அவ‌ள‌து வாலைக்காணும் ஆவ‌லில் அவ‌ள‌து அனும‌தியின்றி அவ‌ள‌து நக‌ர‌த்தின் சுவ‌ராயிருந்த‌ ம‌ர‌த்த‌டுப்பை விர‌ல் ந‌க‌ங்களால் கீறி சிறிய‌ பிள‌வை உண்டாக்கியிருந்தேன். அவ‌ள‌து வாலை எப்ப‌டியேனும் வ‌ரைந்துவிட‌ முய‌ற்சித்து நிற‌த்தை உண்டாக்கும் முய‌ற்சியில் வெற்றிய‌டைந்திருந்தேன்.

அடுத்த‌ இர‌ண்டு இர‌வுக‌ள் க‌ழிந்து அவ‌ளிட‌மிருந்து எவ்வித‌ பேச்சு ச‌ப்த‌மும் என்னிட‌ம் வ‌ந்து சேர‌வில்லை. இற‌ந்துவிட்ட‌தாக‌ வினோத‌மான‌வ‌ர்க‌ளின் உல‌க‌ காப்பாள‌ர் த‌லைவ‌ரிட‌ம் முறையிட்டு அட‌க்க‌த்திற்காக‌ அவ‌ளை தூக்கிச்சென்ற‌போது நான் அவ‌ள் த‌ப்பிச்சென்ற‌தை முழுமையாக‌ ந‌ம்பினேன்.

ஒரு நாள் அதிச‌ய‌மாய் கிடைத்த‌ பெரும‌ழையில் அதிக‌ம் ந‌னைந்து ஈர‌த்துட‌ன் என‌து ந‌க‌ர‌த்தின் உள்ளே ஒரு ப‌ற‌வை நுழைந்திருந்த‌து. சாம்ப‌ல் பூத்திருந்த‌ வெண்மை இற‌க்கைக‌ளுட‌ன் நீண்ட‌ வாலையும் கொண்டிருந்த‌ அந்த‌ ப‌ற‌வை நிச்ச‌ய‌ம் என‌து வால் முளைத்த‌ தேவதையாய்த்தான் இருக்கும் என்ற‌ ந‌ம்பிக்கையில் நானும் என‌து இற‌க்கைக‌ளை உத‌றிக்கொண்டு அத‌ற்கு என் ந‌க‌ர‌த்தை சுற்றிக்காட்ட‌ ப‌ற‌க்க‌த்தொட‌ங்கியிருந்தேன்.