நினைவில் நனைதல்!

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
 • Agregar a Technorati
 • Agregar a Del.icio.us
 • Agregar a DiggIt!
 • Agregar a Yahoo!
 • Agregar a Google
 • Agregar a Meneame
 • Agregar a Furl
 • Agregar a Reddit
 • Agregar a Magnolia
 • Agregar a Blinklist
 • Agregar a Blogmarks

நினைவுகள் சலனமற்று ஓடிக்கொண்டிருக்கும் நதியை ஒத்திருக்கின்றது. அடி ஆழங்களில் அமைதியினைக் கொண்டிருந்தாலும் மேலே கரையோரத்தில் கிடைக்கும் அத்தனையையும் சுமந்துக்கொண்டு நகர்கிறது. நகர்வு சாத்தியப்படுகிற நேரங்களில் அத்தனையும் நதி வழியில் சென்றுக்கொண்டே தான் இருக்கிறது.

எனது நினைவோட்டத்தில் மிதந்து தப்பித்த நதியானது இன்னொரு இடத்தில் மற்றொருவரின் நினைவுகளில் சேகரமாகியோ அல்லது சிற்றலைகள் எழுப்பியோ விட்டு விடுகிறது. இப்படி ஒவ்வொருவருக்குமான நினைவு நதியின் பயணத்தில் நகர்வுகள் சாத்தியப்படுதலினாலேயே நதியின் தூய்மை பாதுகாக்கப்பட்டு வருவதாக நம்புகிறேன்.

பதிவில் எழுத ஆரம்பித்த கதைப்பற்றிக் கூற சந்தனமுல்லையும், கவிஞர். பா.ராஜாராமும் தொடர் பதிவிற்காக அழைத்திருந்தனர்.

நண்பர்கள், உறவுகள், கோபங்கள், வருத்தங்கள், சங்கடங்கள் மற்றும் நிறைய சந்தோசங்களை வாரித்தந்த பதிவுலகத்தைப் பற்றிய நினைவோட்டங்களை எழுதுதலை விட வேறு மகிழ்வுகள் இருக்காது என்பதால் எழுத உடனே ஒப்புக்கொண்டிருந்தேன்.

(o)

சென்னையில் வேலையில் இருந்தபோதே குமுதம், விகடன் இணையத்தளங்களை தாண்டி வாசித்த ஒரே தளம் திண்ணை மாத்திரமே. ஜெயமோகனுக்காக மாத்திரம் எட்டிப்பார்க்க ஆரம்பித்து, மனம் விடாமல் தினமும் எல்லோரையும் வாசித்துக் கொண்டிருப்பேன் (கடலை வாங்கின பேப்பரையை திருப்பி திருப்பி படிக்கற பய நான்). பெரும்பாலான இலக்கிய’வாதிகளின் சங்கமம். அறிவியல் புனைகதை போட்டி, கவிதை, கட்டுரை, விமர்சனம், கதைகள் வாசித்து மீதமிருந்த நேரத்தில் பக்கப்பட்டையில் எட்டிப்பார்க்க, அங்கிருந்த தனி இணைப்பு மரத்தடிக்கு கொண்டு சென்றது. சிறுகதைகள் என்றாலே வெகுஜனப் பத்திரிக்கையில் வருவதுதான் சிறப்பானதாக சுவாரஸ்யமானதாக இருக்கும் என்ற எண்ணத்திற்கு அடி கொடுத்தது அங்கு தொகுக்கப்பட்டிருந்த சிறுகதைகள். அங்கிருந்த அத்தனைக் கதைகளையும், கவிதைகளையும் வாசித்து மகிழ்ந்தேன். அதில் முக்கியமான இருவர் மீனாக்ஸ் (இப்ப எங்க தலைவா இருக்கீங்க?!) மற்றும் குந்தவை வந்தியத்தேவன் (மோகன்தாஸ்). சற்றும் சலிப்பை ஏற்படுத்தாத மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டிய கதைகளை படித்து ரசித்த காலம். தாமதியாமல் அவர்களுடைய மடல் குழும இணைப்பில் இணைந்து கொண்டேன். அங்கு அப்போது ரசிக்கும்படியாக அதிகமாய் சுவாரஸ்ய மொக்கை போட்டுக் கொண்டிருந்தது அண்ணாச்சி ஆசிப் மீரான். :-). மேலும் தமிழ்மணத்தின் அத்தனை பெரிய தலைகளும் மரத்தடியில் தான் எழுத்துக்களில் வசீகரித்துக் கொண்டிருந்தனர்.

டெல்லி போய் வேலையில் சேர்ந்தபின், கீற்று இணையதளம் மூலம் சில சிற்றிலக்கிய இணைய இதழ்கள் வாசிக்கக் கிடைத்தன. தபூசங்கர் கவிதைகளை இணையத்தில் தேடியபோது யாஹுவின் அப்போதைய பிரபலமான ஜியோசிடிஸில் கொண்டு போய் விட்டது. அங்கும் நண்பர் மோகன் தாஸ் தன்னுடைய இளவயது(?!!) புகைப்படத்தில் மிரட்டியவாறு கொடுத்த இணைப்பில் தபூ சங்கரின் சில கவிதைகள் கிடைத்துவிட, மேலும் அங்கு இணைப்பு கொடுத்திருந்தவற்றை தடவித் தடவியத் தடவலில் தேன்கூடு அறிமுகம் கிடைத்தது.

அங்கு முதலில் கண்ணில் பட்டது வவாச (வருத்தப்படாத வாலிபர் சங்கம்). வடிவேலுவை துணையாய் கொண்டு அவருக்கு மசாலா தடவி ஊற வைத்து வறுத்து எடுத்துக் கொண்டிருந்தார்கள். சிரிப்பு சிரிப்பு சிரிப்பு மாத்திரமே.. வேறு ஏதும் தோண வைக்காமல் அந்த இணைப்பை சேமித்துக் கொண்டு தினமும் ஏதும் புதிய இடுகை வருகிறதா என்று தேடுவதே வேலையாகியது. பெரும்பாலும் சினிமா சார்ந்த பதிவுகளை மாத்திரம் மேய்வதிலும், கட்டுரைகள், புத்தக விமர்சனங்களைப் படிப்பதுமாக காலம் நகரத் தொடங்கியது.

(o)

வவாசவிற்கு வருகின்ற பின்னூட்டங்களில் என்னாலும் பங்கு பெற முடியாதபடி ஜிமெயிலின் சேவை இன்னொருவரிடமிருந்து அழைப்பு பெற்றால்தான் உள் நுழைய முடியும் என்றிருந்ததால் டெல்லியில் எனக்கு பக்கத்து சீட்டில் அமர்ந்து பணிபுரிந்த (யோசிக்க வேண்டிய விசயம் இது!) நண்பர் ஒருவரிடம் கடன் பெற்று (எனக்கு புது அக்கவுண்ட் வந்ததும் உனக்கு ரெண்டு இன்வைட் அனுப்பிடுவேன்.. ஓக்கே!) புது இணைப்பு கிடைத்து புனைப்பெயரில் ஆரம்பிக்க முடிவு செய்து புதிய பெயராய் செந்திலின் துணை கொண்டு சென்ஷியை சூட்டிக்கொண்டு (ஹப்ப்பாடி.. ரொம்ப பெருசா இருக்குது. அடுத்த பாராவுக்கு போயிடலாம்).

இன்றுவரை அதிகம் யோசித்தும் நான் யாருக்கு முதல் பின்னூட்டம் போட்டேன் என்ற நினைவு இல்லை. ஆனால் தொடர்ச்சியாய் வாசிப்பிலும் பின்னூட்டங்களிலும் மாத்திரமே காலம் நகர்ந்து கொண்டிருந்தது. (ஆனால் டோண்டுவுக்கு முதல் பின்னூட்டம் போட்ட பதிவு இன்னமும் ஞாபகத்தில் இருக்குது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........! )

தனித்தளம் இருந்தால்தான் பதிவு ஆரம்பிக்க முடியும் என்ற எண்ணத்திலும் அப்போதைய சில பதிவுகள் மூலம் மண் விழுந்திருந்ததால் ப்ளாக்ஸ்பாட் பற்றி அறிந்ததும் உடனே விழுந்த மண்ணில் ஒரு விதையை நட்டு விட்டேன். 2006, செப்டம்பர் மாதம் 12ந்தேதி.

காதலன் என்ற பெயரில் உண்டாக்கிக் கொண்ட பதிவில் முதலில் ரெடிமேடாக இருந்த கவிதையை ஏற்றுவது என்ற முடிவில் எப்போதும் மறக்காமல் இம்சித்துக்கொண்டிருந்த ஒரு கவுஜையை ஏற்றியாச்சு.

உறக்கத்திற்கு
காரணம் தெரியவில்லை
நான்
உறங்காததன் காரணம்
நீ! (அடடே.. ஆச்சரியக்குறி.. ரேஞ்சுதான் நான்.)

இதற்கு வந்த முதல் (ஒரே ஒரு) பின்னூட்டம் நாட்டாம ஷ்யாமிடமிருந்து. பிறகு தொடர்ந்து மெயிலில் கிடைத்த புகைப்படங்களையும், எழுதி வைத்திருந்த கவிதைகளையும் ஏற்றுவதிலும் பின்னூட்டங்கள் இடுவதில் காலம் நகர்ந்து கொண்டிருந்தது.

(o)

பாலபாரதி - வலையுலகில் என் முதல் தோழர். விடுபட்டவை என்ற பெயரில் செய்தித் தொகுப்புகளையும், காதல் கவிதைகளிலும் மற்றும் தொழில் நுட்ப பதிவு(?!)களிலும் புகுந்து வந்து கொண்டிருந்தவர். தேன்கூடு மாத்திரமே கதியாயிருந்த எனக்கு தமிழ்மணத்திற்கு வரச் சொல்லிய மூவரில் முதலாமவர் (மற்ற இருவர் பொன்ஸ் அக்கா மற்றும் சேதுக்கரசி (சேதுக்கரசி - இப்ப எங்க இருக்கீங்க?)). . சற்று மனக்கஷ்டமான நிகழ்வுகளில் நான் முதலில் மனதைப் பகிர்ந்து கொண்டது பதிவர்களில் இவரிடம் மட்டும்தான். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பதில் தல, மனதைக் கவர்ந்தவர்.

பாகச என்ற அகில உலக புகழ் சங்கத்தில் தல பாலபாரதியை கலாய்க்க டெல்லியில் ஆளில்லாமல் இருந்ததால் போட்டியின்றி என்னை நானே தேர்ந்தெடுத்துக் கொண்டு தலயை கலாய்க்க ஆரம்பித்ததில் நட்பு வட்டம் பெருகியிருந்தது.

தமிழ்மண கருவிப்பட்டையை இணைத்துக் கொடுத்த பொன்ஸ் அக்கா, டெம்ப்ளேட்டை அழகாய் மாற்றிக் கொடுத்த தங்கை மைபிரண்டு மற்றும் தமிழ் பிரியன் மூவருக்கும் இங்கு நன்றிகளை தனியாக சொல்லிக் கொள்கிறேன்.

(o)

பதிவர் என்று தெரியும் முன்பே சந்தித்து அறிமுகம் ஆகியிருந்த நண்பன் வினையூக்கி மற்றும் தேசிய பதிவர் சந்திப்பில் டெல்லியில் முதன்முதலில் சந்தித்த இரு சகோதரிகள் மங்கை மற்றும் முத்துலட்சுமி (அப்போ அவங்க லட்சுமியிலேந்து முத்து லட்சுமி ஆகியிருந்தாங்க!) பதிவுலகில் நான் புத்துணர்வுடன் பதிவுகளிட அதிகம் ஊக்கம் தந்தோருள் மிக முக்கியமானவர்கள். இவர்களுடன் நான் என்னை புதிதாக உணர வைத்த கும்மிக் குடும்பத்தினருக்கும் எனது நன்றிகள் எப்பொழுதும் சேரும்.

(o)

இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்களின் பெயர்கள் மிகவும் அதிகம். ஒரு இடுகைக்குள் அடங்காதவையாகவே இருக்கின்றன. ஒருவரைச் சொல்லி ஒருவரை விடுதல் எனக்குள் மனக்கஷ்டங்கள் தரக்கூடியவை என்பதால் மற்ற எவரையும் குறிப்பிட விரும்பவில்லை. அன்று பதிவு எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை என்னை ஆதரிக்கும், இன்றும் பதிவுகளில் புதிதாய் களமிறங்கி அசத்திக் கொண்டிருக்கும் பதிவர்கள் அனைவரும் என் நண்பர்கள்தான். முகம் பார்க்கவில்லை என்பதால் அன்பு மலராதா என்ன?

(o)

வலையுலகம் முன்பு போல இல்லை. குறிப்பிடத்தகுந்த சில எண்ண ஓட்டங்களே திரும்பத்திரும்ப பிரதிபலித்துக் கொண்டிருந்த நேரத்தில், சென்னையின் பதிவர் பட்டறை மூலமாகவும் வெகுஜன ஊடகங்கள் மூலமாகவும் பதிவு எழுத ஆரம்பித்த அனைவரும் ஏதோவொரு வகையில் தனக்கான பிம்பத்தை அழுத்தமாக தங்கள் பதிவுகளில் அடையாளப்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். இவ்வகையில் முன்பை விட பதிவுலகம் இப்பொழுது மிகவும் சிறப்பானதாக இருப்பதாகவே நம்புகின்றேன்.


சங்கடங்களும், சச்சரவுகளும் எப்பொழுதும் இருப்பவைதான். ஆனால் தற்போதைய பதிவர் சண்டைக்கு முன்பு முற்றிலும் சிற்றிலக்கிய சச்சரவு நேரும் செய்திகளில் வாசிக்கும் கைகலப்பாகத்தான் எண்ணியிருந்தேன். ஜியோவ்ராம் சுந்தர் அவர்களுக்கு நிகழ்ந்த மனக்கஷ்டத்திற்கும் உடல் உபாதைக்கும் ஆறுதல் வார்த்தைகள் மாத்திரம் போதுமானதாக இருந்துவிடக் கூடுமா? இனியும் எவர்க்கும் இதுபோல் நிகழாதிருக்கும் என்ற நிலை மாத்திரமே நிம்மதிக்குரியதாயிருக்கும்.

வாதத்திறமை கொண்டு விவாதம் செய்பவர் மத்தியில் விதண்டாவாதம் ஏற்படுத்தி கலைத்துச் செல்பவர்கள் எல்லா காலத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். விமர்சனப் பார்வை என்பது இன்னும் முழுமை அடையாத ஒன்றாகவே பதிவுலகத்தில் இருப்பதாக நினைக்கின்றேன். அதுவும் காலப்போக்கில் வாசிப்பு இன்பம் முழுமை அடையும் சமயத்தில் அடுத்த கட்ட நகர்வில் கிடைத்துவிடும் என்று தோன்றுகிறது.

(o)

வலையுலகத்தில் நான் அறியாமல், என்னுடைய கோபத்தினாலும், பழகுதல் தன்மையாலும் என் மேல் மனக்கசப்பும், மனவருத்தமும் உண்டானவர்கள் பலர் இருக்கக்கூடும். இச்சமயத்தில் அவர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். நேற்று படித்த வாசகம் இன்னும் மனதை விட்டு நீங்காமல் தொந்தரவு செய்து கொண்டே இருக்கின்றது.

சின்னச் சின்ன விஷயங்கள் சந்தோஷத்தைத் தரும். ஆனால் சந்தோஷம் சின்ன விஷயம் இல்லை (நன்றி: சஹாரா தென்றல்). எத்தனை சத்தியமான வார்த்தை! சந்தோஷம் மாத்திரம் நமக்கான நிரந்தர சொத்தாக இருக்கட்டுமென்று வேண்டிக் கொள்கின்றேன்.

மோகன்தாசின் பதிவுகளைப் படித்து பதிவு எழுத ஆரம்பித்த என்னைப் பார்த்து ஒருவர் பதிவு எழுத ஆரம்பித்ததாகக் கூறியது மனதுக்கு சந்தோஷம் தந்திருந்தது. என்னுடைய சகோதரன் எனது இடுகைகளைப் படித்துவிட்டு அவராகவே ஒரு பதிவினை ஆரம்பித்து விட்டார். முழு அளவிலான எழுத்துப்பயணத்தை இன்னும் தொடங்காமல் இருக்கின்றார்.

(o)