நாகேஷ்

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
 • Agregar a Technorati
 • Agregar a Del.icio.us
 • Agregar a DiggIt!
 • Agregar a Yahoo!
 • Agregar a Google
 • Agregar a Meneame
 • Agregar a Furl
 • Agregar a Reddit
 • Agregar a Magnolia
 • Agregar a Blinklist
 • Agregar a Blogmarks


இருத்தலின்றி தவித்தலில் நிர்ணயிக்க முடிவதில்லை சோக அளவுகள். நீட்டி குறைத்து வெட்டி ஒட்டி எங்காவது உங்களைப்பற்றிய செய்திகள் எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கும். மீள்வதற்காக பழகிய பழக்கத்தில் வீழ்ந்தபின் மீள்வது கடினமென சொல்லிவிட்டு குடித்து விட்டு வைத்திருந்த கோப்பையில் மிச்சமிருக்கிறது இன்னும் ஒரு துளி. கடல் சேருகின்ற நதிகளாய் கலைஞனாய் தனித்து நின்ற மிச்சத்தின் கடைசித்துளி ஆவியாகி அரூபம் கலந்தது.

நகைச்சுவைத்தவன். நகைச்சுவையில் மிச்சத்தினையும் நகைச்சுவையாய் மாற்றிக்காட்டி உச்சம் என்பதறியாமலே நின்றிருந்த இடத்திலிருந்து எல்லோரையும் கூட்டிக்கொண்டிருந்தவர்.

சாவு செத்துப்போகாத நேரத்தில் இன்னொரு வைரத்தை தனது மணிமுடியில் செருகிச் சென்றிருக்கிறது. கிரீடம் ஜொலித்தித்துக் கொண்டிருக்கும். ஆனால் அங்கு எவரது அரசாட்சியிலும் நீங்கள் மட்டுமே வியக்க வைக்கும் விதூஷகன். இறகுகள் சேர்ந்திருக்கும் எல்லா தேவதைகளும் உங்கள் நகைச்சுவைக்கு மெல்லிய புன்னகையை அடக்க மாட்டாமல் முத்துக்களாய் சிதறிக்கொட்டுவர்.

நாயக பிம்பங்களுக்கு மத்தியில் மெலிந்த உருவத்தினால் அனைவரையும் ஒதுக்கி வைத்து தனித்து திரை முழுக்க பரவி நின்றிருந்த அந்த ஆளுமையிலும் உங்களுக்கான இருக்கைக்கு இனி எந்த போட்டியும் இருக்கப் போவதில்லை. ஏனென்றால் உங்களுக்கான தனித்த இருக்கையை நீங்களே எல்லா நேரத்திலும் உடைத்தெறிந்து சென்றிருக்கிறீர். எந்த பாத்திரத்தில் நிரம்பினாலும் அளவுகோல்கள் என்பது மற்றவரை சிரித்து தளும்ப வைப்பதில் மாத்திரம்தான் உங்கள் கவனமும் இருந்தது.

தருமியாய், செல்லப்பாவாய், சுந்தரமாய், மாதுவாய் பத்தாம்பசலித்தனமாய் மாறுமிந்த வேடப்பொருத்தங்களில் நான் என்றும் நாகேஷை தேடியதில்லை. நடிப்பை கடமையாய் கொண்டவரிடையே தர்மமாய் கொண்டிருந்தவர்.

உங்களைப்பற்றிய குறிப்புகள் எங்கும் கிடைக்கக்கூடும். ஆனால் குறிப்புகளில் வாழ்ந்தவரில்லை நீங்கள். சிறு குறிப்புகளில் உங்கள் வாழ்வை எழுதி தீர்த்துவிடும் சக்தி எங்கள் யாரிடமும் இல்லை. சேகரித்து வைத்திருந்த முத்தை இழந்து வாழ்வு முடிக்கும் சிப்பியாய் தனித்து மிதக்கிறார்கள் உங்கள் ரசிகர்கள்.

நினைவுகள் தாகம் தீர்க்கும் சக்தி கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையில் நேற்று உங்கள் திரைப்படத்தை பார்த்து அழுதுக்கொண்டிருந்தேன். உங்கள் நடிப்பை பார்த்து சிரிப்பதை மாத்திரம் விரும்பியவர் நீங்கள். இந்த இடத்திலும் உங்களை தோற்கடிக்க விரும்பாமல் படத்தை பாதியில் அணைத்து விட்டேன். எழுத்துக்களில் உங்களைப்பற்றிய நினைவுகளை என்னால் முழுமையாக்க முடியாத சோகத்திலேயே முற்றுப்பெறாமல் முடிந்து போன வாழ்க்கையின் கடைசிப்பக்கத்தை அவசரமாய் தள்ளி புத்தகம் மூடும் ரசிகனாய் உங்களின் ஆன்மா சாந்தியடைய என்னால் பிரார்த்தனை மாத்திரம் நிச்சயம் செய்யமுடியும்.
ஓய்வெடு எங்கள் தலைவா.. உனக்கான அன்பு கலந்த அஞ்சலிகள் எல்லாரிடமிருந்தும் உன்னை வந்து சேர்ந்து கொண்டிருக்கும்.