முனியாண்டி விலாஸ்

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
 • Agregar a Technorati
 • Agregar a Del.icio.us
 • Agregar a DiggIt!
 • Agregar a Yahoo!
 • Agregar a Google
 • Agregar a Meneame
 • Agregar a Furl
 • Agregar a Reddit
 • Agregar a Magnolia
 • Agregar a Blinklist
 • Agregar a Blogmarks

........
........
உனக்குப் புரிவதில்லை
உன்னைப் பற்றிச் சொல்லாமல்
வலியைப் பற்றி மட்டுமே பேசுமென்
சாத்தியமின்மைகளை

நன்றி- சல்மா
பச்சை தேவதை கவிதைத்தொகுப்பிலிருந்து


ஒவ்வொரு நொடிகளின் நகர்விலும் அவன் வளர்ந்து கொண்டிருப்பதாக தோன்றியது. இது நிச்சயம் நல்லவிதமான செயல் என்று என்னால் நிம்மதிப்படுத்திக்கொள்ள இயலவில்லை. நல்ல நாகரிகத்தின் அடிப்படை அம்சத்தின் முதல் விதியாய் மனிதன் வளர்தலை நியாயப்படுத்தியதிலிருந்து எல்லாம் தொடங்கியிருக்கக்கூடுமென்று நினைக்கத்தொடங்கினேன். வளர்தல் சிந்தனைகள் மையப்புள்ளி குவிவட்டம் கோளவிளிம்பு எல்லாமே தனித்து இயங்கி நீடுயராமல் பக்கவாட்டில் காற்றடைத்தது போல் வீங்கிக்கொண்டிருந்தது. ஒன்றுக்கொன்று இடித்து மோதி நகர்வை விரும்பியதன் காரணமாய் அழிந்தது என்ற வரலாற்றை நான் இனிதான் எழுத ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இதனை நிகழ்வு குறிப்பாக கொள்ள முடிகின்ற நேரமுடிவின் ஆரம்பத்தில் அவன் தனித்திருந்தான். இந்தப்புனைவின் கடைசி மனிதன். இதனாலேயே அடுத்த தலைமுறைக்கான வரலாறாயும் அவனைப்பற்றிய சுய விவர குறியீட்டின் படிமமாயும் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.


பெயர்கள் சூட்டுவதில் இருக்கின்ற சுவாரசியம் மற்றவர்களுக்கானதாக அமைகின்றது. மற்றையோர் இவனது பெயரை உச்சரித்தலில் இவன் மனம் மயங்குவதாயும் இவனது கவனம் சிதறுவதாயும் கொண்ட மனநிலையுடன் ஒத்திருப்பதால் இவனுக்கான பெயரை நான் முன்மொழியவில்லை. பெயர்கள் தங்கள் உரிமைகளை அதிகம் உபயோகித்துக்கொள்ளும் சொல்வழியாக அமைகின்றன. இவனைத்தவிர வேறு யாரும் இல்லாத இடத்தில் இவனுக்கு பெயர் சூட்டுவது எழுத்தின் வழியை திறந்து வைப்பதற்காகவே ஒழிய வேறு எந்த கருமத்திற்கும் இல்லை.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

முன்பு இறந்து போயிருந்த ஒரு கதையை உயிர்ப்பிப்பதற்காக வேண்டி அதில் மூவரை புதிதாய் இணைத்திருந்தேன். ஒரு அழகான பெண்ணையும் (பெண் அழகாக இருக்கிறாள் என்பதை வாசகப்பிரதிகளுக்கு உணர்த்துவதற்கான இணைப்பு வழி இது) இரு முட்டாள் ஆண்களையும் (ஆண்கள் முட்டாள்களாகியிருந்தததை சொல்ல வேண்டிய அவசியம் பெண்களுக்கு உபயோகப்படாவிட்டாலும் பிரதியின் குறியீட்டிற்கான வசியத்தன்மைக்காக எழுதப்படுகிறது) உருவாக்கி விட்டும் அவர்களுக்கான பெயர்களை நான் தரத்தொடங்கவில்லை. அவன், இவன், இவள்தான்..


அந்த அவன் இவள் மேல் மையல் கொண்டு காதலிக்கத்தொடங்க, இந்த இவளோ இவனை விரும்பத் தொடங்கியிருந்தாள். ஆனால் இந்த இவன் தன்னுடைய மூலப்பிரதியில் தான் யாராக இருக்க முடியும் என்ற ஆசையில் முடிவிலாது நீண்டிருந்த எழுத்துக்களில் தன்னைத்தேட தொடங்கியிருந்தான். தனக்கொரு பெயர் சூட்டிக்கொள்ளும் ஆசையில் மாத்திரமே இவன் இத்தகைய நிகழ்வை தொடங்கியிருப்பதாக நான் கருதியதால் இவனது போக்கிற்கு நான் தடை விதிக்கவில்லை. ஆனால் நிகழ்விற்கு எதிர்கோளாக மூலப்பிரதியில் காணப்பட்ட ஒவ்வொருவரின் பிரதிநிதித்துவ இயல்பிலும் செய்கையிலும் இவன் மயங்கி தன்னையும் அதுபோல் மாற்றிக்கொள்ள திருத்தம் மேற்கொண்டிருந்த நிலையில் இவனுக்கான தனித்துவம் என்ன என்பதை இவன் மறந்தான். இவனது இந்த தீவிர தேடுதல்களில் இலக்கிய வாசிப்பாளர்களால் மிகவும் ஆராதிக்கப்பட்டிருந்த அந்த செத்துப்போயிருந்த மூலப்பிரதியில் பிழைகள் ஏற்படத்தொடங்கியது. எழுத்துக்களில் உட்புகுந்து தன்னை தேடுவதும் வரிகளை முன்பின்னாக கலைத்துப்போட்டுச் செல்வதுமாக இருந்த பிரதியின் தன்மைக்கு என்னை காரணம் காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டல்கள் கண்டங்கள் கருத்துக்கள் நிலவத்தொடங்கின.


நான் எதிர்பாராதவிதமாய் இவை நிகழ்ந்தது என்றும் இதற்கான சாத்தியக்கூறுகளின் தன்மைக்கும் இவனின் பிறழ்வுக்கும் எழுத்துச்சிதறலும் அந்த மூலப்பிரதியின் கதாபாத்திரங்களே காரணம் என்றும் நான் சுயவிளக்கம் கூறி எழுதியிருந்த கடிதத்தின் மேல் சாணி பூசப்பட்டு அழகான வண்ணமிகு பூக்கள் வரையப்பட்ட காகித மேலுறையில் சுற்றப்பட்டு பின்னல் முடிச்சுகள் இடப்பட்டு தெளிவான தபால் முத்திரையுடன் அஞ்சல் வழி எனக்கு வந்து சேர்ந்தது.


அந்த மிக நீண்ட பத்தாயிரத்திற்கும் அதிக பக்கங்கள் கொண்ட மூலப்பிரதியின் காவியத்தன்மையில் இவன் அலைந்து திரிந்த பக்கங்களிலும் வரிகளிலும் வார்த்தைகளிலும் எழுத்துக்களிலும் உண்டான பிழைகளை திருத்தும்நோக்கில் நேரும் களங்கத்தை துடைப்பது அத்தனை எளிதாயில்லை. எதிர்நாயகனின் காமத்தன்மையிலும் நாயகனின் காதல் தன்மையிலும் ஈடுபாடு கொண்டிருந்த இவன் தனக்கான சுயமாக இரண்டிலும் மையம் கொள்ளாது போக்குகளின் பாதையில் சென்றிருந்தான். அவை க‌டும் போர்க‌ள் நிக‌ழ்ந்த‌ இடத்தில் மீண்டெழுந்த துரோகங்களையும், த‌லைவ‌ன் த‌லைவியின் மேல் காத‌ல் கொண்டு வெதும்பி நின்றிருந்த‌ தோல்வியில் த‌ன‌து காம‌த்தை பிறிதோர் துணை மேல் ஏற்றி வைத்து துய‌ர் நீக்கிய‌ ப‌டியினையும் இவ‌ன் எழுத்துக்க‌ளில் ஒளிந்திருந்த‌ சூட்சும‌த்தை க‌ண்ட‌றிந்த‌து அதிர்ச்சிய‌ளிப்ப‌தாக‌ இருந்த‌து.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

புனைவின் க‌டைசி ம‌னித‌ன் இன்ன‌மும் அம்ம‌ண‌மாக‌த்தான் அலைந்து கொண்டிருந்தான். உல‌க‌ம் அவ‌னுக்கான‌ மிக‌ப்பெரிய‌ புதிய‌ ப‌ழ‌த்தை ஒத்திருந்த‌து. மிகுத‌ல்க‌ள் தோலென‌வும் காற்றை மாத்திர‌ம் சுவாசித்தும் அவ‌ன் இன்ன‌மும் அலைந்து கொண்டிருந்தான்.மிக‌ப்பெரிய‌ ம‌ண் மூடிய‌ அதிக‌ம் கேடு விளைவிக்கும் காற்றுட‌ன் கொஞ்ச‌ம் ந‌ல்ல‌ காற்றும் சேர்ந்திருந்த‌ அந்த புனைவு உல‌கில் உடைக‌ளுக்கான‌ அவ‌சிய‌மோ நாண‌ம் என்ற‌ பொருள்சொல்லியின் விள‌க்க‌மோ அவ‌ன் அறித‌லுக்கு அத்த‌னை ஒத்திசைந்த‌தில்லை என்ப‌த‌னால் அவ‌னை இன்ன‌மும் நிர்வாண‌மாக‌வே அலைய‌ வைத்துக்கொண்டிருந்தேன். இதிலொரு ந‌ன்மையாக‌ அவ‌ன் விரும்பிய‌ இட‌த்தில் மூத்திர‌ம் விட‌வும் அல்ல‌து சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் மூத்திர‌ம் பெய்துகொண்டே ந‌ட‌க்க‌வும் ப‌ழ‌கியிருந்தான். உடைக‌ள் இருந்திருந்தால் பாழாகியிருக்கும் என‌ நினைத்துக்கொண்டேன். அந்த‌ ம‌னித‌னுக்கான‌ புதிய‌ மொழியை தோற்றுவித்த‌ல் மிக‌ அவ‌சிய‌மாய் இருந்த‌து. இவ‌னுக்கு உப‌யோக‌ப்ப‌டாவிட்டாலும் இவ‌னைப்ப‌ற்றி ப‌டிப்போர் இவ‌னுக்கான‌ மொழிய‌றிவு இருந்த‌து என்று காட்டிக்கொள்ள‌ச்செய்வ‌து ந‌வ‌ந‌ம்பிக்கையை ச‌ற்று அதிக‌ரிக்கும் என்று தோன்றிய‌து.புதிய‌ உல‌க‌ம் புதிய‌ மொழி வித்தியாச‌ எழுத்து. ஆனால் ச‌ற்றுக்க‌டுமையாக‌ ஒரு விச‌ய‌த்தில் நான் கெடுதிய‌ளித்த‌து க‌ட‌வுளைத்தான். அவ‌னுக்கான‌ எந்த‌ ஒரு புதிய‌ க‌ட‌வுளையும் நான் எழுதி வைத்தோ வ‌ரைந்து கொடுக்க‌வோ இல்லை. இந்த‌ கொடுமையின் கார‌ண‌மாக‌வே நான் சாத்தானின் அம்ச‌ம் என்று வ‌ன்ம‌ம் கொள்ள‌ வாய்ப்புக‌ள் நிறைந்திருந்த‌ன‌. க‌ட‌வுளே இல்லாத‌ இட‌த்தில் சாத்தானுக்கு வேலை இல்லை என்றும் நான் நினைத்துக்கொண்டேன்.(தொட‌ரும்)