பிடித்த கவிதைகள் - 5

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
 • Agregar a Technorati
 • Agregar a Del.icio.us
 • Agregar a DiggIt!
 • Agregar a Yahoo!
 • Agregar a Google
 • Agregar a Meneame
 • Agregar a Furl
 • Agregar a Reddit
 • Agregar a Magnolia
 • Agregar a Blinklist
 • Agregar a Blogmarks

எனக்கான கேள்வி
உன்னிடத்திலும்
உனக்கான பதில்
என்னிடத்திலும்
யாரிடமும்
எதுவும் இல்லையென
பாவித்துக் கொண்டிருக்கிறோம்.

===============================

செத்துப்போன மாட்டைத்
தோலுரிக்கும்போது
காகம் விரட்டுவேன்
வெகுநேரம் நின்று வாங்கிய
ஊர்ச்சோற்றைத் தின்றுவிட்டு
சுடுசோறெனப் பெருமைபேசுவேன்.
தம்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் மறைத்து கடந்துவிடுவேன்
அப்பாவின் தொழிலும் ஆண்டுவருமானமும்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடிவாங்குவேன்.
தோழிகளற்ற
பின்வரிசையி லமர்ந்து
தெரியாமல் அழுவேன்.
இப்போது
யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்
பறச்சி என்று.

=====================================

யோனிகளின் வீரியம்

பலகோடி ஆண்டுகள்
கழிந்தொரு பரிணாமத்தில்
உபயோகமற்று
உன்குறி மறைந்துபோகும்
அக்கணத்தில் புரியும்
உன் சந்ததிகளுக்கு
எம் யோனிகளின் வீரியம்.

====================================

கைநிறைய கவிதைகளோடு
உன்னிடம்
வந்து கொண்டிருக்கிறேன்
எண்ணமுடியாத முத்தங்களோடு
நீயும் எதிர்ப்படுகிறாய்
ஒரு முத்தமிடலில்
பல கவிதைகளும்
ஒரு கவிதையில்
பல முத்தங்களும்
கைநழுவிப் போகின்றன.

====================================

மெல்லிய
புலால் நாற்றம் வீசுகின்ற
நானும்
தசைகளை முற்றாகப்
பிய்த்தெடுத்த எலும்புகள் தொங்கும்
என் வீடும்
கொட்டாங்கச்சியில் தோலைக்கட்டி
பறையொலி பழகும்
விடலைகள் நிறைந்த
என் தெருவும்
ஊரின் கடைசியில் இருப்பதாக
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்
முதலில் இருப்பதாக.

====================================

ஏவாளின் கனியும் ஆதாமின் அறுவடையும்

திருப்தியான கூடலின் லயத்தோடு
பறவைகள் சதா சப்தித்துக் கொண்டிருந்தன
பருவப்பீய்ச்சல்களிலும் உறுப்புகளின் இச்சையற்று
விலங்குகள் அலைந்து திரிந்தன.
அழைக்கப்படாத மரங்களின் காம்புகள்தோறும்
தளர்ந்த முலையின் சாயலையொத்த பழங்கள்.
வெளிச்சத்தின் நிழலில் ஒளி அமர்ந்திருந்த
அவ்விடம் மிகவசீகரமாய் விளங்கிற்று.
அதனை நிர்மாணித்தவன்
சுனைகளின் அடைப்பைச் சரிசெய்யப் போயிருந்தான்.
நஞ்சுக்கொடியின் முதல்சுவையை அலகிலேந்தி
அவளை ரகசியமாய் சமீபித்தது
வேறு எப்படியும் உருக்கொள்ள இயலாத ஸர்ப்பம்.
விரகத்தின் வேர்வை அவனுள் அரும்பத்தொடங்க
அவனுக்குப் பழக்கினாள்
தன்கனிகளைச் சுவைக்கும் உடல்நுட்பம்
அதன்பின் காமத்திற்கான அறுவடை
அவனுக்கென்றாகிப் போனது.

=================================

ஆசிரியர் : சுகிர்தராணி
தொகுப்பு : இரவு மிருகம்
காலச்சுவடு பதிப்பகம்

=================================