என்னைப் போலும் ஒருவன் இருக்கலாம்!

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
 • Agregar a Technorati
 • Agregar a Del.icio.us
 • Agregar a DiggIt!
 • Agregar a Yahoo!
 • Agregar a Google
 • Agregar a Meneame
 • Agregar a Furl
 • Agregar a Reddit
 • Agregar a Magnolia
 • Agregar a Blinklist
 • Agregar a Blogmarks

உங்கள் நண்பருடன் தனியாக பேசிக் கொண்டிருக்கையில் உங்களைத் தாண்டிச் செல்லும் இன்னொரு நண்பர் “என்னடா! எங்க குண்டு வைக்கலாம்ன்னு பிளான் செய்யறீங்களா?” என்று சிரித்துக்கொண்டே உங்களை நோக்கி கேள்வி எழுப்பிவிட்டு நகரும்பொழுது உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்?

நமக்கான அடையாளம் இல்லாத ஊரில் தங்கியிருக்கும்பொழுது வேலையில் புதிதாக சேர்ந்த சமயத்தில் தங்கியிருக்கும் அறை நண்பனிடம் ஏற்பட்ட சிறிய சச்சரவில் ”எனக்கு உங்களையெல்லாம் கொஞ்சம் கூட பிடிக்காதுடா” என்று கூறி அறையின் வெளியே தள்ளி கதவைப் பூட்டிய அனுபவம் இருக்கிறதா!

மேலே சொன்ன இரண்டு விஷயங்களும் எனக்கு நடந்திருக்கின்றன. முதலில் சொன்னது எனது சொந்த ஊரிலும், இரண்டாவது டெல்லியிலும். மேற்கண்ட வார்த்தை முத்துக்களை உதித்தவர்கள் என்னுடன் பழகியவர்கள்தான். மேலும் நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள்.

முஸ்லீம் என்ற தனித்த அடையாளத்தினால் எனக்கு விளைந்த இந்த நிகழ்வுகள் சுட்டிக்காட்டும் பொருள் என்னவென்பது உங்களால் உணர முடிகிறதா நண்பர்களே! இந்த சம்பவம் எனக்கு மாத்திரம்தான் நடந்திருக்குமென்று என்னால் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் சொல்ல முடியும். என்னைப் போல இன்னொருவனுக்கும் இதே மாதிரி இல்லாத அவமானங்களும் தனித்த மதத்தின் பெயரால் நிகழ்ந்திருக்காது என்று நம்புகிறீர்களா!

(o)

பொதுவாக இந்து முஸ்லீம் பிரச்சினையை பேசும் படங்கள் குறிப்பிட்டு விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே தமிழில் வந்திருக்கின்றன. பிரச்சினையை மையப்படுத்தும் பொழுது நல்லவர், கெட்டவர் என்ற நியாய அளவிலான மதிப்பீடுகள் மக்களின் மனதில் நிகழ்த்துகின்ற சுட்டிக்காட்டல்கள் விமர்சன ரீதியில் சற்று அதிகப்பாதிப்பை கொண்டு விடும். அதைத்தாண்டியும் இந்த வகையான திரைப்படங்களை முன்னெடுத்துச் செல்லும் இருவர் இயக்குனர் மணிரத்னமும், கமலும் தமிழக அளவில் முக்கியமானவர்கள். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவருக்குமே பிராமண அளவிலான பார்வை கொண்ட விமர்சனங்கள் எழுவது வாடிக்கையாக இருந்து விடுகிறது.

கதையைப் பற்றிய மதிப்பீடுகளை ஒத்திவைத்துவிட்டு பதிவுகளில் எல்லோருமே திறமையாக கையாண்ட ஒரு மதிப்பீடு திரைக்கதையைப் பற்றியதுதான்.

ஹிந்தி திரைப்படத்தில் எந்த மதம் என்று தெரியாத அளவில் அமைந்திருந்த நஸ்ருதீன் ஷாவின் பாத்திரத்தை ஏற்றுள்ள கமல் வசனம் மூலமாக தான் முஸ்லீம் அல்ல என்பதை திறமையாக வெளிக்காட்டியிருப்பார். குறிப்பிட்டு சொல்ல வேண்டிய வசனமாக கமலின் மனைவி கதாபாத்திரத்தில் வீட்டுக்கு வேண்டிய பொருட்களை வாங்க செல்லிடபேசியில் பேசும்பொழுது வீட்டுக்கு வருவதைப் பற்றி விசாரித்த பின் கிண்டல் தொனியில் ‘இன்ஷா அல்லாஹ்வா’ என்று கூறுவார். கமலும் பின் ‘இன்ஷா அல்லாஹ்’ என்று பதிலுரைப்பார். ( இன்ஷா அல்லாஹ் - அல்லாஹ் விரும்பினால் என்று அர்த்தம்).

இதன் மூலம் கமல் சுட்டிக்காட்டிக் கொள்வது அவர் முஸ்லீம்களின் நண்பராய் இருப்பவர் என்பதுதான். அவர்களுடைய வழக்கத்தில் சற்று ஊறுபவர் என்ற கருத்தாக்கத்திலேயே படத்தை கொண்டு சென்றிருக்கின்றனர்.

சமூக அளவில் விமர்சனங்கள் எதிர்மறையாக எழும்போது அதில் சாதீய முத்திரை அல்லது அறிவு ஜீவி பட்டம் கொடுத்து விடுவது பதிவர்கள் அளவில் சகஜமாகிக்கொண்டு வருகிறது.

பொதுப்புத்தி பார்வை என்ற அளவில் எழுகின்ற விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் அல்லது அதில் கிடைக்கின்ற நுண்ணரசியல் தன்மை விளங்காமல் படைப்பாளியின் படைப்புச் சுதந்திரத்தில் தலையிட்டு கால் வைத்து உதைப்பதாக எண்ணிக்கொள்ளும் புத்திசாலிகளும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

சினிமாவை சினிமாவாக பார்க்கச் சொல்லும் விமர்சகர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது இதைப் பார்க்கின்றவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் பற்றியே. படத்தில் கமல், பாம் வைத்த காரணமாக விளக்குவது கருவறுத்தல் - எத்தனைப் பேருக்கு இந்த வசனத்தின் ’மூலம்’ விளங்கியிருக்கும் என்று தெரியவில்லை. மாத்திரமில்லாது ஊடகத்தின் கண்ட காட்சியே கமலின் மனதை பாதித்து அவர் கோபமுற காத்திரமாய் அமைகிறது. டிவியை விட பலம் வாய்ந்த ஊடகமாய் விளங்கும் சினிமாவின் தாக்கம் தீவிரவாதி என்பவன் முஸ்லீமாக மாத்திரமிருப்பதற்கான சாத்தியக்கூறுகளை நிலை நிறுத்துவதன் பின்னணிகள் அபாயமானதாக வெளிப்பார்வைக்கு உங்களுக்கு படாமலிருக்கலாம். ஆனால் இதன் முந்தைய மோசமான அனுபவங்களால் பாதிக்கப்பட்டிருந்தவன் என்ற முறையில் இதை நிச்சயம் எதிர்ப்பவர்கள் மீதும் சாணி பூசும் அவலநிலை இன்னும் இருக்கிறது என்பது வருந்தக்கூடியதுதான்.

ஹிந்தியின் மூலத்தை அப்படியே பிரதிபலித்து கமலின் பாணியிலான சற்று அதிகப்படியான திரைக்கதை, வசனங்கள் சுட்டிக்காட்டுதலில் மிக முக்கியமானது நாயக சார்புத்தன்மை. முஸ்லீமின் நண்பர் என்ற அளவிலான வசன அமைப்பு மிக நேர்த்தி. ஆனால் மனதை நெருடுதல் கோவை குண்டு வெடிப்பை பற்றிய செய்தியையும், பெஸ்ட் பேக்கரி கொலைகளையும் தொட்டுச்செல்லும் சார்புத்துவத்தில் பெஸ்ட் பேக்கரியில் பாதிக்கப்பட்டு மூன்றாம் மனைவியை இழக்கும் முஸ்லீம் தீவிரவாதியின் குரலை நகைச்சுவையாய் மிதித்து செல்கிறது ஒரு ஹிந்து தீவிரவாதியின் குரல். (தீவிரவாதத்தில் மதம் பிரிக்க எனக்கு மனமில்லை. ஆனால் சினிமா சுட்டிக்காட்டுவது கமல் தேர்ந்தெடுத்து இருப்பது ஹிந்து தீவிரவாதியையும்தான் என்பதாக இருக்கிறதால் அவரது குரலை பதிவு செய்தல் அவசியமாகிறது).

(o)

சினிமாவை சினிமாவாகப் பார். இதனாலெல்லாம் உங்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடாது என்று குதிப்பவர்களுக்காக. உங்களை விட எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. இதனால் ஒன்றும் நிகழ்ந்துவிடாது என்று. ஆனால் குறிப்பிட விரும்புவது கமல் சுட்டிக்காட்டியதை நீங்கள் காண விரும்பவில்லை என்பதாக இருக்கலாம் அல்லது கமல் அப்படியெல்லாம் நினைக்காதவராக நீங்கள் நம்பலாம்.

டெல்லியில் தனித்து ரோட்டில் நின்றபோது என்னை அரவணைத்து தனது வீட்டில் தங்க வைத்து தனது தம்பியை விட அதிகப் பாசமாய் என்னுடன் பழகிய நண்பர் சுவாமிநாதன் ஒரு பிராமனர். இன்னும் பதிவுலகில் என்னுடன் நெருங்கிப் பழகும் பதிவர்களில் பலர் என் மதத்தை சேர்ந்தவர்கள் இல்லை.

பார்வைகளை சுட்டிக்காட்டவே இந்தப் பதிவே தவிர, மற்றவர்களின் நிறை குறைகளை எடுத்துக்கொள்ளுவதற்கல்ல..

(o)

படத்தில் ரசிக்கக்கூடிய அம்சமாக நான் கருதியது மோகன்லால்.. மோகன்லால்.. மோகன்லால். எல்லா இடத்திலும் ஆளுமை என்பதற்கான அர்த்தத்தை நடையில் பார்வையில் பேச்சில் நிரூபித்துக் காட்டியிருக்கும் மிகச்சிறந்த நடிகர். இவருக்கும் தலைமைச் செயலாளர் லக்‌ஷ்மிக்கும் இடையில் நடக்கும் அதிகாரம் பகிர்தல் பற்றிய வசனங்கள் சபாஷ் போட வைக்கின்றன.

துடிப்பான இளம் இன்ஸ்பெக்டர்கள், சிகரெட் பிடிக்கும் தொகுப்பாளினி, மனைவியிடம் அடிவாங்கி கேஸ் கொடுக்க வரும் அப்பாவி கணவன் மற்றும் கமலின் தொலைபேசி மூலம் அவர் இருப்பிடத்தை கண்டுபிடிக்க வரும் ஐஐடி மாணவர் என்று தேர்ந்து எடுத்து கொடுத்த பாத்திரங்கள் நல்ல தொகுப்புச் சித்திரங்கள்.

இசையில் ஸ்ருதி ஹாசன் முதல் படத்திலேயே தனது இருப்பை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். ஹிந்தியை விட தமிழில் காட்சிகளின் வெளிச்சம் துல்லியமாக இருக்கிறது.

(o)

உன்னைப் போல் ஒருவன் - ஹிந்திப்படத்தைப் பார்க்காதவர்கள் - நிச்சயம் பார்க்கலாம். பாடல்கள் இல்லாமல் விறுவிறுப்பான ஒன்றரை மணி நேர சுவாரஸ்யம் நிச்சயம்.

ஹிந்தி படம் பார்த்தவர்கள் - மீண்டும் ஒருமுறை வெட்னஸ்டே பார்த்துவிடலாம்.

(o)

இந்தத் திரைப்படத்தில் கமல் ஏற்று நடித்த பாத்திரத்தில் நாசர் நடித்திருந்தால் இத்தனை விமர்சனப்பார்வைகள் வந்திருக்குமா என்று கேள்வி மனதை அரிக்கிறது.

வந்திருக்கும் விமர்சனப்பதிவுகளில் நான் சிறப்பானதாக கருதியது திரு. ஆழியூரானின் பதிவைத்தான்.

கமலை அதிகம் நேசிக்கும் ரசிகனாக எனது பார்வையில் இந்தப்படம் நிச்சயம் கமலின் மோசமான பட வரிசையில் முதலில் இருக்கிறது. சாரி கமல்ஜி!

(o)