குட்டிக்கரணம்

. வியாழன், 28 நவம்பர், 2019
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks

என்னைக் கண்டால் எல்லோருக்கும் இளக்காரம் தான் போலிருக்கிறது. அகலமான கடைவீதியில் இத்தனை கூட்ட நெரிசலில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு, மனைவியின் பழுதான செல்போனை சரிபார்க்க வந்தவனின் தோளில் இந்த வேதாளத்தை அமர வைத்திருக்கிறானே இந்த கடவுள். இவனை என்னவென்று சொல்ல! எல்லாம் என் நேரந்தான் என நொந்து கொள்ளதான் முடியும்.

யாரேனும் அவசரமாக, ஆறும் ஆறும் எத்தனை என்று கேட்டாலே, படபடப்பாக மூன்று விடைகள் கூறி, மூன்றுமே தவறாக சொல்லக்கூடிய வாய்ப்பு அதிகம் இருக்கும் என்னை இப்படி நிறுத்தி வைத்துக்கொண்டிருந்தால் என்ன செய்ய.

சிறுவயதிலிருந்தே எனக்கு பொய் சரியாக பேசவராது. சிறுவயதில் ஏதேனும் குறும்பு செய்துவிட்டு, அதை மறைக்கத் தெரியாமல் சிரித்துக்கொண்டே ஒப்புக்கொண்டு விடுவது என் வழக்கம். அசடு என்று அதற்கு பட்டப்பெயரும் கூட கொடுத்திருந்தார்கள். ஏதேனும் இக்கட்டான சமயத்தில் பொய் சொல்லி விடலாம் என்று முயற்சித்தாலும் இந்த பாழாய்ப்போன சிரிப்பு வந்து கெடுத்துவிடுகிறது. எதிரில் நிற்பவர்களை பேச்சில் கவர்ந்து ஏமாற்றுவது ஒரு திறமையான கலை. தொழில்நுட்பத்தின் உச்சம். அது எனக்கு கைகூடாதது குறித்து எனக்கு எந்தவித வருத்தமும் இருந்ததில்லை . ஆனால் தற்சமயம் ஒரு பொய். திறமையாய் ஒரே ஒரு பொய் சொல்லி தப்பித்துவிட வேண்டும். இல்லையென்றால் சுற்றியிருப்போரில் எனக்குத் தெரிந்தவர் எவரேனும் இதை பார்த்துவிட்டு வீட்டில் சொல்லிவிட்டால் அவ்வளவுதான். இன்றைய இரவு சமையல் என்னைப்பற்றியதாகத்தான் இருக்கும். நல்லவேளையாக வீடு கடைவீதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் தள்ளி உள்ளது. முன்பு தூரம் காரணமாக சலித்துக்கொண்டிருந்தவனுக்கு இன்று சற்று நிம்மதியாக இருந்தது.

நமது மகாஜனங்கள் கூட்டமாய் நின்று பார்த்துக்கொண்டிருக்கும் வித்தை என்னவென்று தெரிந்துகொள்ள கூட்டத்தில் ஒவ்வொரு ஆளாய் தோளால் நகர்த்தி ஒதுக்கி விட்டு முன்னுக்கு வந்தால், முன்னால் நான் மாத்திரமே நின்று கொண்டிருந்தேன். மொத்தமே இரண்டு வரிசை கூட்டமிருந்திருக்காது போல. பின்னாலிருந்து எக்கிப் பார்த்திருந்தாலே, நடுவே என்ன நடக்கிறது என்று தெரிந்திருக்கும். அதைவிட்டுவிட்டு. சரி விடுங்கள். இதை சொன்னால் தலையை சுற்றி மூக்கைத் தொடுவது போலாகிவிடும்.

டப.. டப.. டப.. என்று சுற்றிலும் சத்தம் கேட்டது. சற்று கஷ்டப்பட்டால் என் முட்டிக்காலைத் தொட்டுவிடும் உயரம் கொண்டவன், தன் கழுத்தில் கிடந்த அவன் அளவுக்காக செய்து வைத்தாற் போலிருந்த, அந்த மேளத்தை அடித்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய தலைவன் கையில் வைத்திருந்த கயிறை சுற்றிக்கொண்டே கூட்டத்தைப் பார்த்து கரகோஷத்திற்கு வேண்டி சலாம் வரிசைக்காக குதித்து கால் தரையில் படாமலேயே காற்றில் இரண்டு கரணங்கள் அடித்தான். எனக்கு வயிறை கலக்கியது. தடாலடியாக இந்த பெர்ர்ய மன்சனும் சலாம் போடுவாரு சாம்யோவ் என்று கத்திவிடக்கூடாதென்று மூணு கண் ஆண்டவனை வேண்டிக்கொண்டேன்.

தைரியத்துடன் கூட்டம் விட்டு நகர்ந்து விடலாம்தான். ஆனால் அத்தனை சாமர்த்தியம் எனக்கு ஏது. பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். பெரிதாய் ஒன்றுமில்லை என் தோள் மேல் வித்தை காட்டுபவனின் குரங்கு ஏறிக்கொண்டது. அதை இறக்கிவிட வேண்டும் அதற்குத்தான் இந்த பிரம்மபிரயத்தனம். பல்லி மேல் விழுந்த தோஷம் பற்றியெல்லாம் காலண்டர் படித்து எனக்கு நல்ல மனப்பாடம். கறுப்பு பூனை இடமிருந்து வலம் அல்லது வலமிருந்து இடம் நகர்தலில் வெளியே செல்லாது உள்ளே உட்கார்தல் நியமம். வெளியிலிருந்து உள் நுழைகையில் இப்படியானால், ஒரு தெரு சுற்றிவிட்டு வந்துவிடுவேன். வாசல் விட்டு நகர்கையில் தலை வாயிற்படியில் முட்டினால் தண்ணீர் குடிக்க வேண்டும். எல்லாம் தெரிந்து வைத்திருந்தேன். ஆனால் குரங்குக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை.

வீட்டில் அவசர வேலை இருக்குது என்று பொய் சொல்லிவிடலாம்தான். ஆமாம். பொய்தான். வீட்டில் எனக்கு இப்போது எந்த வேலையும் இல்லை. இன்று விடுமுறை தினம். குழந்தைகள் இருப்பதால் தொலைக்காட்சியின் அருகில் கூட நம்மை அமர விட மாட்டார்கள். அவர்களுக்கான நேரம் இது. சமையலறையில் மதிய சாப்பாட்டிற்கு மனைவி தயார் செய்து கொண்டிருப்பாள். அவளுக்கு தேவையானதையும் நேற்றே வாங்கிக் கொடுத்துவிட்டேன். காலை காப்பி குடித்துவிட்டு, அவளது சப்தம் குறைவாக கேட்கும் கைபேசியை சரி செய்ய கொண்டு வந்ததுதான் இங்கு பிரச்சினையின் ஆரம்பமாக இருக்கக்கூடும்.

நல்லவேளையாக வெயில் அதிகம் இல்லை. உடல் சூடு, பித்தம் ஏறிக்கிடப்பதால் காலை காப்பிக்கு பதிலாக விடுமுறைதானே என்று, கஷ்ட கஷாயத்தை அவளது இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு குடிக்க வைத்துவிட்டாள். அரை லிட்டர் கஷாயத்தை குடித்துவிட்டு கசப்பிற்கு வெல்லத்தை அவளுக்கு தெரியாமல் நாக்கில் தொட்டுக் கொண்டேன்.

குழந்தைகளின் விளையாட்டில் கூட எனக்கு சரியாக விளையாடத் தெரியவில்லை என்று குறைபட்டுக்கொள்ளும் மகளிடம், தந்தை ஒரு குரங்கின் இஷ்டபிடியில் கட்டுண்டு இருப்பதை பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கும். அய்யோ என் ஃபிரண்ட்ஸெல்லாம் என்னை கேலி செய் வாங்க என்று தேம்புவாள். அப்பன் கஷ்டம் அவளுக்கெங்கே தெரியப்போகிறது. கூட்டத்தை திரும்பிப் பார்க்கலாமென்றால் கழுத்தை திரும்பும்போது குரங்கு தலைமேல் வைத்திருக்கும் கைகளால் கீறிவிடுமோ என்று பயத்தால் திரும்பாமலே நின்று கொண்டிருக்கிறேன்.

ஆனால் பயந்ததுபோல அல்ல. ஒரு குழந்தை போலதான் குரங்கு என் மேல் தாவி ஏறியுள்ளது. கடைசியாய் என்னை தூக்க நச்சரித்த குழந்தை யாருடையது என்று யோசித்துப் பார்க்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு உடன் வேலை செய்யும் செல்வராஜின் குழந்தையை பார்க்க புது வீட்டிற்கு போன போது, ஆசையாய் கையில் வாங்கியது நினைவுக்கு வருகிறது. கைக்குழந்தை என்பதால் எந்த சேட்டையும் இல்லாமல் அமைதியாக வந்துவிட்டது. பிடித்த வெள்ளைத்துண்டு பதறாமல் திரும்ப கொடுக்கும் வரை எனக்குதான் பதற்றம் கூடியிருந்தது. வேறு எந்த குழந்தையும் என்னிடம் ஓடி வந்து ஏறியதெல்லாம் இல்லை. என் குழந்தைகளையே ‘அப்பா… பார்த்தா திட்டுவார். கேட்டா உதைப்பார்’ என்று சகதர்மிணி சொல்லி சொல்லி சொந்த பிள்ளை நெருக்கமும் சற்று தொலைவில்தான் இருக்கிறது. அவர்களுக்கு தேவையானதையும் அம்மாவிடம் கேட்டு வாங்கிக்கொள்ளும் சுதந்திரம் கிடைத்திருப்பதால் அப்பாவுக்கு எந்த தொல்லையும் தருவதில்லை என்ற நன்மதியுடன் வளர்கிறார்கள்.

குரங்கை கொண்டு வந்தவன் பாம்பையோ கீரியையோ கொண்டு வந்திருந்து அது என் மேல் தாவியிருந்தால் என் நிலை என்ன ஆவது. சிலர் கரடியைக் கட்டிக்கொண்டுபோகும் காட்சியையும் கண்டிருக்கிறேன். அல்லது யானை, ஒட்டகம். தாங்கக்கூடிய உடலா என்னுடையது.

கண்களை மேலேயுயர்த்தி குரங்கை பார்க்க ஆசைப்பட்டேன். பின் தோளில் அதன் வால் நீண்டு ஜடைபோல முதுகில் கிடக்கும் போல. அவ்வப்போது ஆட்டி ஆட்டி முதுகில் கூச்சத்தை உண்டாக்கியது. கல்யாணமான புதிதில் பெரிய பின்னலைப் போட்டு வந்த மனைவியின் நினைவு. நாளாக ஆக ஜடை சிறுத்துபோன பின்புதான் தெரியவந்தது. அத்தனை நீளம் சவுரிக்குதான் என்று. மாட்டு வால் மாதிரி பெருசா மசுரை வளர்த்து கட்டி தெருவையா கூட்டப்போறா என்று எனக்குத் தெரிந்த பழமொழி கொண்டு என்னை நானே தேற்றிக் கொண்டேன். இருப்பினும் பெரிய பின்னல் இன்னமும் ஒரு கவர்ச்சிதான். மனைவியின் முன்னால்தான் தைரியமாக சொல்லிக் கொள்ள முடியாது.

கூட்டத்திடமிருந்து கைதட்டல் வந்தது. நான் எந்த வித்தையும் காட்டாமல் கை தட்டுகிறார்களே என்று முகத்தைத் திருப்பினால், அந்த முட்டிக்கால் பொடிசுக்கு தங்கை போல ஒருத்தியை மூங்கில் கம்பில் மேலே ஏற்றி, மூங்கில் கம்பை தன் மூக்கின் மேல் வைத்துக் கொண்டிருந்தான். இரண்டு விரற்கடை இடுப்பு தெரிகிற சிறிய சட்டையும் முட்டி மேல் வரை வரும் பூப்போட்ட பாவாடையும் போட்டுக்கொண்டு கீழே நடனமாடிக்கொண்டிருந்தவள் எப்படி மேலே ஏறினாளென்று தெரியவில்லை. எந்த வித்தையையும் இந்த குரங்கு காண வைக்காமல் கெடுத்துவிடும் போலிருக்கிறது. அந்த சிறுமி மூங்கில் கம்பின் மேலே விமானம் போல கைகளை விரித்து அந்தரத்தில் பறப்பது போல சாகசம் காட்டினாள். நேரிடையான சூரிய வெளிச்சம் கண்ணை உறுத்தாமல் காணக்கூடிய அளவு போகும் விமானம்.

மூங்கில் கம்பை திடுமென கீழே விட்டதும், விமானம் சட்டென்று கீழே தலைவனின் கைகளில் வந்து சேர்ந்தது. இதைப்போலவே இன்னும் இரண்டு மூன்று முறை கைதட்டல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

இந்த குரங்கை வைத்து எப்போது வித்தை ஆரம்பிப்பார்கள். இதை இழுத்து போனால் போதுமென்று இருக்கிறது . தலைவனை பார்த்து ஒரு கண்ணசைவில் குரங்கை எடுத்துவிட சொல்லி மன்றாடிவிடவேண்டியதுதான் என்று எண்ணினேன். அதற்குள் அவனே, ‘வா ராஜா. வா.. அடுத்த ஷோ இருக்கு’ என்று தலைமேலிருந்து உதிர்ந்த பூவை எடுப்பது போல குரங்கை எடுத்துவிட்டான்.

அவசரமாக ஏறி விட்டதில் குரங்கின் முகத்தையும் உருவத்தையும் முன்பு சரிவர பார்க்கவில்லை. இப்போது பார்க்க முடிந்தது. குட்டிக் குரங்குதான். மேலே ஏறிய கனத்தை வைத்து அனுமானித்தால் அதிகபட்சம் இரண்டு கிலோவுக்கு மிகாது. என்னால் மனிதர்களையே சரியாக எடை போட முடிவதில்லை. ரகவாரியாக பிரித்துவைக்கும் அரிசி போல ஒவ்வொருவரும் ஒரு ரகம். இதில் குரங்குக்கு எங்கே. தோள் வலி ஏதும் இருக்கிறதா என்று தோளை அசைத்துப் பார்த்தேன். அப்படி எதுவும் தெரியவில்லை .

கூட்டத்தின் மையத்திலிருந்து நகர்ந்து கூட்டத்தாருடன் இணைந்து நின்றேன். கூட்டம் சட்டென்று சற்று வழிவிட்டு விலகி நின்றது. குரங்கைத் தூக்கிய வனாயிற்றே. அந்த ஜம்பத்திலிருந்தே முகவாயை கொஞ்சம் மேலாக்கி வித்தையை பார்க்க ஆரம்பித்தேன். போகும்போது குழுவுக்கு ஐம்பது ரூபாய்க்கு குறையாமல் போட்டுவிட வேண்டியதுதான் என்றும் தோன்றியது. இத்தனை நேரம் என் மேல் ஒட்டியிருந்துவிட்டு குட்டி குரங்கு அதன் தலைவனின் முகத்தைப் பார்க்க ஆரம்பித்தது. எனக்கோ எனது உறுப்பையே அறுத்துக்கொண்டு போய் அவன் முன் நிற்பது போல் இருந்தது. சில நொடிகள் நானும் குரங்கும் வேறல்ல என்ற எண்ணம் தான் உள்ளுக்குள் ஓட ஆரம்பித்தது. என்ன வேண்டுதல் கேட்டோ இங்கு அலைகிறது இச்சென்மம். எல்லாவற்றையும் துறந்து இதனால் ஓடித் தப்பிக்க இயலாதா? குறைந்த பட்சம் அருகிலிருக்கும் உயர்ந்த மரத்தில் ஏறிவிட்டால் கூட இவனை பிடிக்க முடியுமா குழுவால்?

மிகவும் சிறிய குரங்கு. உருவம் சிறுத்த அனுமார். இதை வைத்து என்ன வித்தைக் காட்டுவான். மூங்கில் மேல் ஏற வைப்பானோ, தீயை வளர்த்து தாண்ட வைப்பானோ? குட்டிகரணம் அடிக்க தெரியுமா இக்குரங்கிற்கு. எங்கு வைத்து வித்தை பழக்கியிருப்பான். இதன் தாய் இதை தேடிக்கொண்டிருக்குமா? அனுமனின் அம்சம் ராவணனுக்கு சவால் விட்ட வம்சம். வாலைச்சுருட்டி வித்தை காட்டி அதன் மேல் அமர்ந்ததைப் போல அமர்ந்திருந்தது என் மேல். ஒரு அரை மணி நேரத்திற்கு ராஜ வம்ச பிரதிநிதியாகியிருந்தவன். ஜகஜ்ஜோதியாக என்னை தன் இருக்கையாக்கிக் கொண்டவன். சினிமாவில் குரங்கின் சாகசங்களெல்லாம் நினைவில் கொண்டு வந்து கொண்டிருந்தேன்.

ஒரு சிறிய நாய்க்கு கட்டும் சிவப்பு நிற பட்டை வார் ஒன்றை குரங்கின் கழுத்தில் கட்டி, அதன் மறுமுனையை தன் கையில் எடுத்துக்கொண்டு, குரங்கின் கையில் ஒரு அலுமினிய பாத்திரத்தைக் கொடுத்தான். குரங்கும் தன் வித்தை எதுவென தெரிந்துவிட்டதுபோல, கூட்டத்தில் ஒவ்வொருவர் முன்னும் நின்று காசுக்காக தட்டேந்திக் கொண்டு நின்றது.