சபிக்கப்பட்ட உலகம் முழுவதும் முகம் பார்க்கும் சின்னஞ்சிறிய
கண்ணாடிகளால் ஆனது. தன்னைத்தானே நேசிக்கத் தொடங்க கண்ணாடி
தருகின்ற பிரச்சாரங்கள் இதன் சாபங்களாய் போனது. ஊரின் மனநிலைகளில்
உடைந்த கண்ணாடி துண்டுகள் ஆயிரம் கதைகளை காட்டும் வல்லமை கொண்டது.
வாழ்வின் ஒரு துளி தொடக்கத்திலிருந்து ஆரம்பமாகும் தண்ணீரின்
பிரதிபலிப்பை விட வல்லமையாக கண்ணாடி மாறியிருக்கிறது. ஆதாம்
வம்சத்தினர் ஏவாளினத்திற்கு அடுத்தபடியாக பாசம் வைத்திருப்பது
கண்ணாடியின் மேல்தான். ஏவாள் வர்க்கத்தினரோ ஆதாமிற்கு முன்பிருந்தே
கண்ணாடியை தெரிந்து வைத்திருப்பது போல் கண்ணாடியை காணும்போது ஆண்களை
மறந்து போகிறார்கள். உலகின் அத்தனை நிலைக்கண்ணாடிகளும் உடைந்து
நொறுங்கி அழிந்தபின்பு பெண்களின் இயல்புக்கு மாறாக பொறாமை மறைந்து
போகும். உண்மையாய் மற்றவரை நேசிக்கத்தொடங்குவர். ஏவாளின் அழகை எவளும்
அறியாதவரை ஆதாமுக்கு கவலையில்லை. கண்ணாடி ஒரு போதை மருந்து.
பார்வைகளின் மூலம் தன்னைத்தானே விழுங்கிச்சாப்பிட்டும் பசி அடங்காத
விபரீத போதை. மனிதனின் பார்வை ருசியை அதிகம் அனுபவித்த பெரிய
விருந்துக்காரன். கண்ணாடியை முதலில் கண்டுபிடித்தவன் ஒரு
மிகப்பெரிய சூனியக்காரனாயிருந்திருக்க வேண்டும். கண்டிப்பாய்
சூனியக்காரிக்கு இத்தனை தைரியம் கிடையாது. தன் பிம்ப சிறையில் ஆயுள்
முழுதும் மாட்டி அதனுடன் வாழ துடிக்கும் தைரியம் எந்த சூனியக்காரிக்கும்
கிடையாது. விட்டு விலகாது, விலக நினைக்காது, தூங்கும்போதும்
திரும்பிப்பார்க்கச் சொல்லும் செயலை செய்யவைக்கும் அத்தனை மோசமான
சூனியக்காரனின் ஒத்திகை அது. அதிலும் மிக வெற்றிகரமாக நிறைவேற்றி
முடிக்கப்பட்ட கொடூரமான நிகழ்வின் முதல் பகுதியில் கண்ணாடி
உருவானது. மனிதன் அழத்தொடங்குவதைக்கூட கண்டு ரசிக்கத்
தொடங்கினான். முகக்கண்ணாடியின் ரசம் தீர்ந்து உதிர்ந்து போகும் நேரத்தில்
வெளிப்புறத்து காட்சிகள் தெரிய ஆரம்பிக்கிறன. ஆனால் அதற்கு முன்பே மனிதன்
கண்ணாடியை மாற்றி விடுகின்றான். உண்மையை அருகில் காணும் தைரியம் ரசத்தோடு
பொய்யாய் கலக்கிறது. கண்ணாடி மீது எச்சில் துப்பும் மனநிலையில் இருந்த
எல்லோருமே அதை தனது சோகமென சொல்லிக்கொண்டு வாழ்கின்றனர். நீரில் மிதந்த
மனிதன் நிலம் ஏறிச்செல்வதை காணப்பிடிக்காத நீர்மூலமே கண்ணாடியாக
மாறி கொடுமைப்படுத்த தொடங்கியிருக்கக்கூடும் எனவும் தெளிவான
நீரோடையில் முகம் காணும் தாமரையை காண்கையில் நினைக்கத்தோன்றுகிறது.
நீரின் சலன இயைபுகள் அமைதிப்படும் வேளையில் மீன்கள் நீந்துதலை
தியானமாக்குகின்றன. அதற்கு கண்ணாடிகளைப்பற்றிய கவலைகள் இல்லை.
மனிதர்களிடம் மாட்டி கண்ணாடிப்பெட்டிகளில் அடைபடாதவரை.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
அவளுக்கு அந்த நிகழ்வு புதிதாக இருந்தது. அழகாயிருக்கிறோமா என்ற
கேள்விக்குறியை சந்தேகக்குறிப்பாக காண முயன்றதின் விசித்திரம்.
சித்திரத்தன்மை குறியீடுகள் கண்ணைக்கவர வைத்த கடைசி நிகழ்வின் முதல்
அத்தியாய முயற்சி தடைபட நேர்வது கண்டு விழிகள் விரிந்தன. பிரதிநிழல்
கிடைக்காமல் இருப்பது ஆரம்பமான நேரத்தில் நீர்த்தயலியலான பாதரசம்
தீர்ந்துபோனதாய் தோணவைத்தது. மெல்லிய காற்றின் அலைச்சலை கணுக்காலுயர
திரைகள் எட்டிப்பிடித்து ஏமாந்து திரும்பி சென்றது பிம்பமாய் மாறி சேமித்து
மறைந்தது. அந்தநாளின் முதல் அச்சம் அங்கு ஆரம்பமாக தொடங்கியிருந்தது.
இருந்தும் ஒருமுறை நிச்சயம் செய்துக்கொள்ளும் நோக்கில் மீண்டும் பார்க்க,
ஆம்..! சத்தியமாய் அந்தக் கண்ணாடியில் அவளைக் காணவில்லை. அவளை மட்டும்
காணவில்லை.
ஜெனிக்கு ஆச்சரியம் பயமாக முளைவிடத்தொடங்கியிருந்தது. தினமும் தன் அழகை பார்க்கின்ற நிலைக்கண்ணாடி இன்று தன் உருவம் தொலைத்து நின்றது வருத்தமாகவும் இருந்தது. சப்தமில்லாமல் கண்ணாடியை உறுத்துப்பார்த்துக்கொண்டிருந்
காணாமல் போனவர்களின் பட்டியலில் இணைக்கவியலாத பிரதிநிழலை தேட எந்த முயற்சியைக்கொள்வது. எதிரில் தன் உருவத்தை காணவில்லை. கடலென்றும், மலையென்றும், மலரென்றும், கயலென்றும் உருவகப்படுத்திக்கொண்டாடிய தன் அசைவுகளை காணவில்லை. தன் கண்கள் ஏமாற்றாத தொலைவில் உள்ள பிம்பத்தை காணவில்லை. நேற்றிரவு தனக்குத்தானே கொடுத்துக்கொண்ட முத்தத்தில் மயங்கி ரசம் அதர பிம்பத்தை நழுவவிட்டிருந்தால் மீண்டும் எடுத்து ஒட்ட வைக்க இயலுமா என்று எண்ணம் தோன்றி புன்னகையைப் பெற்று மறைந்து சென்றது.
கண்ணாடியின் அருகில் நகர்ந்த ஜெனியின் கண்களுக்குள் புகை மண்டலம் தோன்றி மறைந்த உணர்வு ஏற்பட்டது. பிடிமானமாக கண்ணாடியை பிடிக்கப்பார்த்த அவள் கைகள் சட்டென்று பின்வாங்கிக்கொண்டது. காரணம், அவள் கைகள் கண்ணாடியை தாண்டி உள்நுழைந்து சென்றது. ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள தன் வலக்கையின் வெண்டை விரல்களில் ஆள்காட்டி விரலை கண்ணாடியில் மெல்லத்தொட நகத்தில் ஆரம்பித்து முதல் கணு, இரண்டாம் கணு தாண்டி விரல் உள்ளே சென்று கொண்டிருந்தது.
மாயங்கள் பற்றிய கதைகள் அறிவியலுக்கெட்டாமல் அறிவிலேற்றிக் கொண்டாடிய வயதுகளில் உருவம் கண்ணாடி தாண்டி ஊடுருவி சென்றது அவளது அறிவிற்கெட்டியது. கண்ணாடியில் பிம்பம் தொலைத்த அதிர்ச்சி தொலைந்து போய் கண்ணாடி பிம்பத்தை ஒளித்து வைத்துள்ளதோ என்று தோண வைத்தது. விரற்கடை அளவுகள் தாண்டி சென்ற மாயக்கண்ணாடியில் உள்ளே நுழைந்து பார்த்தால் மாய உலகம் ஏதும் இருக்குமோ என்று எண்ணினாள்.
கார்த்திக்கிடம் இந்த ஆச்சரியத்தை பகிர்ந்து கொள்ள நினைத்து ஜெனி, கார்த்தி தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த அறைக்குள் பறந்து சென்றாள்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
"சீக்கிரம். வார்த்தைகள் தீர்வதற்குள் நிகழ்வுகளை முடிக்க வேண்டும்"
"நாம் இப்போது எதற்காக இங்கு வந்தோம்"
"தெரியவில்லை. ஆனாலும் நம்மை தனிமையில் விடுவதே இவனது வேலையாகி விட்டது"
"இவனது செய்கை எனக்கு மடத்தனமாக படுகிறது."
"இருக்கலாம். ஆனால் இவன் காதலிப்பவன். இவர்கள் எப்போதுமே இப்படித்தான்"
"நம்மை ஏன் இங்கு வரவழைத்தான்"
"இது எனக்கு சம்மந்தமில்லாத கேள்வி"
"பிறகு உன்னிடம் நான் என்னதான் கேட்பது"
"அமைதியை விட சிறந்த பாஷையை நீ அனுபவித்ததுண்டா"
"நீ இப்படியே பேசிக்கொண்டிருந்தால் மௌனம் எனது பாஷையாகிவிடும்"
"வேண்டாம். இந்த உலகத்தின் அமைதியிலிருந்துதான் எனக்கு விடுதலை வேண்டும்.
உன்னிடமிருந்து அல்ல"
"என்னிடம் நீ என்ன எதிர்பார்க்கிறாய்"
"எதையும் எதிர்பார்க்காததுதான் காதல் என்று உன்னிடம் இதுவரை நான்
சொன்னதில்லைதான்.. இப்போது உணர்கிறேன்"
"தனிமையில் இப்படித்தான் பேசியே பொழுதை கழிக்க எண்ணமா"
"உன் கண்கள் என்னை பேசவிடாமல் செய்ய முயற்சிக்கின்றன. அதிலிருந்து தப்பிப்பது பெரும் பாடாய் உள்ளது"
"நான் கண்களை இப்போது மூடிக்கொள்ளப்போகின்றேன்"
"அது உனக்கு மிகவும் சிரமம். உனது கண்கள் என்னை தேடுவதை உணர முடிகிறது"
"ஆரம்பித்துவிட்...."
"ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா"
"எந்த சப்தம்"
"முற்றுப்புள்ளி வைக்கும் சப்தம்" என்று கூறியவாறே அவசரமாய் அவளை இறுக்கி அணைத்து உதட்டில் முத்தத்தை தொடங்.... .
நான் தள்ளி அமர்ந்து முடிவிலாது நீளும் அந்த முத்தத்தை ரசிக்கத் தொடங்கினேன்.