**ஒரு கணம்**

. சனி, 13 பிப்ரவரி, 2016
 • Agregar a Technorati
 • Agregar a Del.icio.us
 • Agregar a DiggIt!
 • Agregar a Yahoo!
 • Agregar a Google
 • Agregar a Meneame
 • Agregar a Furl
 • Agregar a Reddit
 • Agregar a Magnolia
 • Agregar a Blinklist
 • Agregar a Blogmarks


அலங்கரிக்கப்பட்ட தீப்பெட்டிகளை மேலே அடுக்கி வைத்திருப்பது போன்ற கட்டிடத்தின் ஆறாவது தளத்தின் ஒரு அடுக்கில் தங்குதல் என்பது சாதாரண விசயமாகிப் போனபொழுது உயரங்கள் மீதான கவர்ச்சியும் பயமும் ஒரு சேர வந்து சேர்ந்தன. சிகரெட் புகைக்காய் கண்ணாடித் தடுப்பை விலக்கி பாதத்திலிருந்து தொடை வரை மாத்திரம் உயர்ந்திருக்கும் சுவரின் கீழ் விரிந்திருக்கும் நகரைப் பார்க்கையில் அடிவயிற்றைக் கீறி எழும் பய உணர்ச்சிக்கு ஆட்பட்டு கால்கள் பின்னுக்கு நகர்ந்துவிடுகின்றன. தினம் மாறும் நாட்களின் வரிசை தவறாது நகர்ந்துக்கொண்டே இருந்தது. வீடு அலுவலகம் இசை திரைப்படம் புத்தகம் வரிசை மாற அனுமதிக்கவில்லை. புகைத்தலின் அளவு மிகுந்து உணவருந்தும் எண்ணம் குறைவானது.

எல்லாம் நேற்று மாலை வரை மாத்திரமே..

நேற்றைய மாலை மிக அற்புதமானதாய் இருந்தது. நரகம் மீண்டு வாழ்தலுக்குத் திரும்பையில், நின்று திரும்பி பார்க்க வைத்ததும் பதிலுக்கு சிரித்த அந்த குழந்தையின் சிரிப்பு சிறிது தூரம் நகர்த்தியது. இயக்கத்தில் பின்னுக்கு நகர்ந்த கடைகளின் பிம்பங்கள் என்னை சூழவில்லை. குழந்தை சிரிப்பு மாத்திரமே. ஒரு இசையைப் போல மிருதுவான சாப்பிட உகந்த ரொட்டியைப் போல வெளிர்ந்த நீலம் பிரதிபலிக்கும் உட்கடலின் நீரைப் போல சூட்டினைப் பொருட்படுத்தாது வியர்வை துடைக்க வீசும் காற்றைப் போல. நிச்சயமாய் என் வசத்தில் இல்லை. இத்தனை சந்தோசத்தை எதிர்கொள்ள தயாராய் இல்லை. ஆனால் உள்ளுக்குள் பொங்கிக் கொண்டிருந்ததை அழுகையாகவோ சத்தமாகவோ ஏதாவது ஒரு உணர்வில் வெளிக்கொண்டுவிட வேண்டுமென்ற ஒரு உத்வேகம் மாத்திரம் சூழ்ந்திருந்தது. லிஃப்டை பயன்படுத்தாது உற்சாகமாய் வாயில் காற்றை ஊதிக்கொண்டு படிகளைத் தாவி ஏறினேன். நேற்றிருந்தவன் இல்லை. இன்று காலை வரை இந்த உத்வேகம் இல்லை. அறைக்குள் நுழைந்தேன். அந்த சிரிப்பை எங்காவது பத்திரப்படுத்தி வைக்க வேண்டுமென்ற ஆவல் அடங்காமல் துளிர்விட்டுக் கொண்டிருந்தது. இச்சை ஒரு சிகரெட்டில் அடங்கிவிடுவதாக இருக்காது என்ற போதும் சிகரெட் பெட்டியைத் தூக்கி வழக்கமாய் புகைபிடிக்கும் இடத்திற்கு வந்தேன். அறைக்குள் நுழைந்ததும் சிதறடிக்கும் ஷூக்களையும் சாக்ஸ்களையும் கழற்றாதது உறுத்தவில்லை. ஒரு சந்தோசம் என்னை சுற்றிப் பீடித்துள்ளது. இந்த கணத்தை இந்த கணத்தில் வாழவேண்டும் என்பது மாத்திரமே அவசியமாகப் படுகிறது. சிகரெட் புகை தலைக்கேறி போதையை நிலைபடுத்த முயன்ற அந்த விநாடி நாளையைப் பற்றிய நினைவு வந்ததால், சிகரெட்டை உதடுகளின் பிளவில் பிடித்துக்கொண்டு, சுவரின் மேல் ஏறி வலதுகாலால் சுவரை உந்திப் பறந்தேன்.