சிருஷ்டி

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks


தனக்குப் பிடித்தமானவர்களுக்கு கனவுகள் பரிசளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள் ஜெனிதா மோசஸ். பிரார்த்தனைக்கு மேரி மாதாவின் ஆலயத்திற்கு தெருக்களில் நடந்து செல்லும்போது எதிரில் தனக்குத் தரப்படும் அத்தனை வணக்கங்களையும் புன்சிரிப்பில் ஏற்றுக்கொண்டு சுமந்து சென்றாலும் அத்தனைப் பேருக்கும் கனவை அவள் பரிசாய் கொடுத்ததில்லை. அவளிடம் கனவைப் பெற்று செல்பவர்கள் அதனை ரகசியமாய் வைத்துக்கொள்ள முடிந்ததில்லை. அவளும் அதனை ரகசியமாய் வைத்துக்கொள்ள சொன்னதில்லை. ஜெனிதாவிடம் கனவு பெற்று செல்பவர்கள் அந்த கனவின் பலன் முழுமையாய் கிடைத்துவிடுகிறது என்று சந்தோஷப்பட்டதை நான் பார்த்திருக்கின்றேன்.

கனவிற்கான பலன் கண்டுபிடிப்பது முன்னாட்களில் சற்று சிரமமாக இருந்திருக்கிறது. பின் ஜெனிதா தருகின்ற கனவினை கொண்டு மற்றவருக்கு கிடைத்த நன்மைகள் பார்த்து பலனை தொகுக்க ஆரம்பித்தனர். தெருவின் கிழக்கு திசைப்பார்த்த ‌மூலையிலிருந்த ஒரு மண்டபத்தில் அழகான ஒற்றைமேசையின் மேல் வைக்கப்பட்ட‌ நோட்டுப்புத்தகத்தில் எல்லோரும் தங்களுக்கு கிடைத்த கனவுகளைப்பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் எழுதி வைக்க ஆரம்பித்தனர். கனவில் தண்ணீர் தேங்கினால், வெயில் அடித்தால், மழை பெய்தால், மிருகங்கள் கண்டால் (ஒவ்வொரு குறிப்பிட்ட மிருகத்திற்கும் குணநலன்களை மாற்றியிருந்தனர்), பூக்கள் மலர்வதால் என்று தங்களுக்கு கிடைத்த கனவுகளின் அடிப்படையில் பலன்களை அனுபவித்தனர். சில கனவுகளில் மோசமான விளைவுகள் ஏற்பட்டு தூக்கம் தொலைகின்ற சமயத்தில் அந்த குறிப்புகளை அழுத்தமாக பெரிய எழுத்துக்களில் எழுதி எச்சரித்தனர். அந்த கனவுகள் கெட்டக்கனவுகள் என்று பெயரிடப்பட்டு அவற்றை ஊரின் எல்லைக்கு வெளியே சென்று கொட்டவேண்டும் என்ற நியதி இருந்தது. சில‌நேர‌ங்க‌ளில் கெட்டக்க‌ன‌வுக‌ள் சிருஷ்டித்து த‌ருகின்ற‌ போதினும் யாரும் ஜெனிதாவை வெறுப்பதாயில்லை.

பிறந்து ஒரு மாதம் வரையிலான குழந்தைகளுக்கு கனவுகள் பரிசளிப்பதில்லை என்று ஜெனிதா கூறியதாகவும் அல்லது குழந்தைகளுக்காக‌ கனவுகளை கொடுக்க நேர்ந்தால் அதில் மிக எச்சரிக்கை கொள்வதாகவும் ஊரில் பேசிக்கொள்வார்கள். சில பெற்றோர் தங்களுக்கான கனவுகளில் நல்ல பலன் கொள்ளும் என்ற நிலையில் மட்டும் சிலநேரங்களில் அதனை தங்களின் பிள்ளைகளுக்கு கொடுத்துவிடுகின்றனர். எனக்கு இதுபோன்று என் தாயிடமிருந்து மூன்று கனவுகள் பரிசாய் மாறி வந்துள்ளன. இது தவிர தேவையின்றி மற்றவர்களின் கனவுப்பரிசினை வேறு யாரும் விரும்புவதில்லை. இது துஷ்ட சகுனங்களுக்கு வழி வகுக்கும் என்றும் சாத்தானுக்கு பிரியமானவர்களாக மாறிவிடுவோம் என்று பயந்தனர். ஒரு முறை ஹோனக்ஸிற்கு கனவின் பலனாக பணம் கிடைக்கப்போவதை அறிந்த மாத்யூ அவனிடமிருந்து கனவை திருடினான். அதன் பின் பலகாலம் மாத்யூ எந்த படுக்கையிலும் தூக்கம் கிடைக்காமல் தவித்து மனம் பிறழ்வுற்று ஒரு நாள் தற்கொலை செய்து கொண்டான். இதன்பின் மற்றவரின் கனவை திருடுதல் பற்றிய அச்சம் அதிகரித்திருந்தது.

ஜெனிதா மோசஸிற்கு கனவுகள் எப்படி கிடைக்கின்றன என்பதைப் பற்றி ஊரில் பல்வேறு கதைகள் உலாவிக்கொண்டிருந்தன. இரவில் நிலவிலிருந்து கனவுகள் அவளுக்கு இறங்கி வருவதாகவும், அவளது வீட்டின் பின்புறமுள்ள நீர்ச்சுனையிலிருந்து கனவுகள் பொங்கி வழிவதாகவும் அதனை ஜெனிதா நீர் பிரிக்கும் சல்லடையில் சலித்து எடுத்து வைத்துக் கொள்வ‌தாகவும், நடுநிசி நேரத்தில் மிகப்பெரிய சிறகுகள் கொண்ட தேவதை ஒருத்தி ஜெனிதாவிற்கு கனவுகள் பரிசளிப்பதாகவும், ஜெனிதாவிடம் அள்ள அள்ளக் குறையாத கனவுகள் கொண்ட மாயப்பெட்டி இருப்பதாகவும் இன்னமும் நிறைய்ய கதைகள் காற்றில் அலைந்து மனிதர்களின் செவிகளில் கேட்டுக்கொண்டிருந்தன. பக்கத்தில் இருந்த மற்ற ஊர்களிலிருந்தும் ஜெனிதாவைப்ப‌ற்றி கேள்விப்ப‌ட்டு கனவுகள் கேட்டு வருபவர்கள் அதிகரித்திருந்தனர்.

ஜெனிதாவின் கண்கள் பெரிதாக இருந்தது. அவளுக்கு ஒப்பனை செய்துகொள்வதில் மிகுந்த விருப்பம் இருந்தது. கன்னத்தில் பூசியிருந்த பூச்சுக்கள் அவள் நிறத்திற்கு ஒப்பாயிருந்தது. அவளவிற்கு அழகானவர்கள் எங்கள் ஊரில் யாரும் இல்லை. நீளமான விரல்கள். அவள் முடியை விரித்துப்போட விரும்பாதவளாக சிறிய வெள்ளை வர்ண ரப்பராலான வளையத்தை முடியை சுற்றி கட்டியிருப்பாள். எப்போதேனும் அதிசமாய் அவளது தலையில் பூவை கண்டால் நிச்சயம் அன்று நல்ல கனவுகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. ஜெனிதா எப்போதும் காலை மறைத்து தரையை தொட்டு நீளும் பெரிய கவுனை உடையாக அணிவதை விரும்பினாள். வண்ண‌ங்கள் தொலைக்கப்பட்டு முழுவதும் வெண்மையாகவும் கறுப்புப்பூக்கள் ஊடாகவும் கொண்டவையாக பெரும்பாலான அவளது உடைகள் அமைந்திருந்தன. அவள் ஏன் வண்ண உடை உடுத்துவதில்லை என நான் அவளிடம் கேட்டபோது அவளது கனவுகள் முழுதும் வண்ணம் தொலைத்த‌வையாக இருந்ததை எடுத்துக்காட்டினாள். தினமும் அவளிடம் கனவு வாங்கிச் செல்பவர்களில் மிக முக்கியமானவனாக நான் இருந்தேன். அவளெனக்கு கனவு பரிசளிக்கும்போது ஒரு மஞ்சள் பூவை கையில் மார்பருகில் வைத்துக்கொண்டு தலையை மார்பு வரை குனிந்து அந்தப்பூவை முத்தமிட்டு பிறகு கனவை பூவின் மேல் மிதக்குமாறு செய்து தருவாள்.

கனவை தன்னிடமிருந்து அவள் பிரித்தெடுக்கும் விதமும் அலாதியானதாக இருக்கும். கைகளை அகல விரித்து நிறைய்ய மூச்சுக்காற்றினை நெஞ்சு வரை உள்ளிழுத்து நிறைய்ய நறுமணங்கள் கொண்டதாக அதை வெளியேற்றுகையில் பஞ்சினை விடவும் மெல்லிய எடை கொண்டதாக உள்ள கனவு காற்றில் மிதந்து வரும். அந்த கனவினை காற்றுடன் இணைத்து கைகளால் குலுக்கி சப்தமெழுப்பி பார்த்து பின் அதை அவளிடமிருந்த அழகான குடுவைகளில் அடைத்து தருவாள். நான் ஒரு கையில் பூவும் மற்றொரு கையில் குடுவையுமாய் அவளது கனவை பத்திரமாய் கொண்டு சென்றிருக்கின்றேன். ஒரு முறை கொடுத்த கனவு அவளிடமிருந்து மீண்டும் திரும்பி வந்ததில்லை. முற்றிலும் புதிதாய் மட்டுமே கனவுகள் அவளிடமிருந்து எனக்கு கிடைத்திருக்கின்றன. விரும்பும் கனவுகளை கொடுக்க மறுப்பவளாகவே அவள் வாழ்ந்து வந்தாள். மற்றையோர் குறிப்பிட்ட கனவை விரும்பி வேண்டும்போதும் அவள் த‌ருகின்ற‌ க‌ன‌வினையே பெற்றுச்செல்ல‌ வேண்டும் என்று க‌ண்டிப்பாய் இருந்தாள். என‌க்கும் அவ‌ள் என‌க்குப்பிடித்த‌ க‌ன‌வுக‌ளை ஒருபோதும் கொடுத்த‌தில்லை. ஆனாலும் நான் அவ‌ளிட‌ம் எதையும் கேட்காம‌ல் அவ‌ள் த‌ரும் முத்த‌த்தையும் க‌ன‌வையும் ஒரு சேர‌ கொண்டு செல்ப‌ன‌வாக‌ இருந்தேன்.

அவ‌ளிட‌ம் கிடைக்கும் க‌ன‌வுக‌ளை எப்ப‌டி உப‌யோகித்த‌ல் என்ப‌து வெகு சுவார‌சிய‌மான‌து. ப‌டுக்கை விரித்த‌ப்பின் குடுவையிலுள்ள‌ க‌ன‌வு க‌ல‌ந்த‌ காற்றை ப‌டுக்கை அடியில் விர‌வ‌ச்செய்ய‌ வேண்டும். ப‌டுக்கையை அதிக‌ம் விரும்புகின்ற‌ க‌ன‌வுக‌ளும் அத‌னுள் புகுந்து கொள்ள‌ நம்மோடு க‌ன‌வுக‌ள் ந‌ட்பாய் கூடும். உப‌யோகித்து முடித்த‌ அல்ல‌து பிடிக்காத‌ க‌ன‌வுக‌ளை ம‌ற்ற‌வ‌ர் என்ன‌ செய்வார்க‌ள் என்று நான் யோசித்த‌தில்லை. ஆனால் நான் என‌க்கு பிடிக்காத‌ க‌ன‌வுக‌ளையும் உப‌யோகித்த‌ க‌ன‌வுக‌ளையும் பக்க‌த்தில் இருந்த‌ ஆற்றில் மீன்க‌ளுக்கு உண‌வாய் கொடுத்துவிடுவேன். காற்ற‌டைத்த‌ க‌ன‌வுக‌ள் த‌ண்ணீருக்குள் மூழ்கும் போது காற்றை குமிழிக‌ளாய் வெளித்த‌ள்ளிவிட்டு கனவுகள் நீரில் க‌ல‌ப்ப‌தை காண்கையில் கொஞ்ச‌ம் வ‌ருத்தமாய் இருக்கும். ஆனால் மீன்க‌ள் க‌ன‌வை உண்ட‌பிற‌கு மேலெழும்பி துள்ளி குதித்து விளையாடுவ‌தைப் பார்க்கையில் ம‌ன‌ம் நிறைவதை உண‌ர்ந்திருக்கிறேன்.

ஒரு நாள் என‌து ந‌ண்ப‌ன் ஒருவ‌ன் ஜெனிதாவிற்கு க‌ன‌வுக‌ள் எப்ப‌டி கிடைக்கிற‌தென‌ தெரிந்து கொண்டேன் என்று சொன்ன‌போது என‌க்கு ஆச்ச‌ரிய‌மாய் இருந்த‌து. இர‌வில் பூக்கும் பூக்க‌ளை ப‌றிக்க‌ச்சென்ற‌போது அவ‌ன் அதை க‌ண்ட‌தாக‌ கூறினான். ஜெனிதாவிட‌ம் ஒரு த‌ங்க‌ம‌ர‌த்தாலான‌ பெட்டி இருந்த‌தாக‌வும் அதனுள் நிர‌ம்பி வ‌ழிகின்ற‌ வெளிச்ச‌த்தில் அதிகமான பல்வேறு க‌ன‌வுக‌ள் மூழ்கிக்கிட‌ப்ப‌தாக‌வும் கூறினான். ஜெனிதா ஒவ்வொரு இர‌விலும் க‌ன‌வுக‌ளை அதிலிருந்து எடுத்து தின்ப‌தாக‌வும் அத‌னை தின்னும்பொழுது முடிகள் விரிந்திருந்த அவ‌ள‌து முக‌ம் விகார‌மாக‌ இருந்த‌தாக‌வும் அழுதுகொண்டே இருந்த‌தாக‌வும் கூறினான்.

அதைக்கேட்ட‌திலிருந்து என‌க்கு அந்த‌ பெட்டியை எடுத்து அதிலிருந்து என‌க்குப் பிடித்த‌மான‌ க‌ன‌வுக‌ளை எடுத்து உப‌யோகிக்க‌ வேண்டுமென‌வும் விருப்ப‌ம் கொண்டேன். அந்த‌ நிமிட‌த்திலிருந்து அந்த‌ பெட்டியிலிருந்து என‌க்காக‌ எந்த‌ க‌ன‌வை எடுப்ப‌து என்ற‌ யோச‌னை அதிக‌ரித்துக்கொண்டே இருந்த‌து. என‌க்கு சாப்பிடுவ‌தில் அதிக‌ விருப்ப‌மிருப்ப‌தால் என‌க்கு மிக‌ப்பிடித்த நெய்யில் சூடாக்கப்பட்டு அதிக‌ மிள‌கு தூவ‌ப்ப‌ட்ட‌ இறைச்சியை உண்ணும் பலன் கிடைக்கும் க‌ன‌வை முத‌லில் எடுத்துக்கொள்வேன் என‌வும் முடிவு செய்து கொண்டேன்.

ஒருநாள் காலையில் கனவு வாங்கச்சென்றபோது அவ‌ள‌றியாத‌ வ‌ண்ண‌ம் பெட்டியை அவ‌ள‌து ப‌டுக்கைய‌றையிலிருந்து கொண்டு வ‌ந்து நான் என‌து அறையில் யாருக்கும் தெரியாத‌ வ‌ண்ண‌ம் ஒளித்து வைத்தேன். உப‌யோகிப்ப‌த‌ற்கான‌ நேர‌ம் என்ப‌து வீட்டில் அனைவ‌ரும் உற‌ங்கிவிட்ட‌பின்தான் என்று தெரிந்திருந்த‌தால் பொறுமையாய் இர‌வு வ‌ர‌க்காத்திருந்தேன். ஆனால் அந்த‌ இர‌வில் யாரும் உற‌ங்க‌வில்லை. கார‌ண‌ம் அன்று மாலையே ஜெனிதா மோச‌ஸ் இற‌ந்திருந்தாள். அவ‌ள் இற‌க்கும்போது பெருத்த‌ ச‌ப்த‌ம் போட்டு மாடியிலிருந்து கீழே விழுந்த‌தாக‌வும், அந்த சமயம் வானிலிருந்து ஒரு ந‌ட்ச‌த்திர‌ம் உதிர்ந்து விழுந்த‌தாக‌வும், ப‌ற‌வைக‌ள் அவ‌ள் உட‌ல்மேல் வெளிச்ச‌ம் ப‌டாத‌வாறும் அவ‌ள் மேல் உதிர்ந்த‌ காற்று அவ‌ளை விட்டு பிரியாத‌வாறும் பாதுகாத்துக்கொண்டிருந்த‌தாக‌வும் எல்லோரும் கூறின‌ர். என‌க்கு அவ‌ளை மீண்டும் பிண‌மாய் காண‌ ப‌ய‌மாக‌ இருந்த‌தால் அட‌க்க‌த்திற்கு நான் செல்ல‌வில்லை.

ஒரு வார‌த்திற்குப்பின் மிகுந்த‌ ச‌ந்தோஷ‌மாக‌ நான் ஜெனிதாவின் க‌ன‌வு த‌ரும் த‌ங்க‌ப்பெட்டியை திற‌ந்தேன். பெட்டியின் மேலார்ந்த‌ உள்புற‌த்தில் ஒரு அழ‌கான‌ கண்ணாடி அமைக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. உள்ளே அதிக‌ அள‌வு க‌னவுக‌ள் மித‌ந்து கொண்டு இருந்த‌ன‌. என‌க்கு அதிலிருந்து க‌ன‌வுக‌ளை எப்ப‌டி பிரித்தெடுப்ப‌து என்று தெரிய‌வில்லை. எத்த‌னை முய‌ன்றும் என் கைக‌ளில் க‌ன‌வுக‌ள் சேர‌வில்லை. வெகுநேர‌ம் முய‌ற்சித்து பின் ஆத்திர‌த்துட‌ன் அந்த‌ பெட்டியை காட்டிற்கு செல்லும் வ‌ழியில் பிரிகின்ற‌ த‌னியான‌ பாதையில் நான் விளையாடும் இட‌த்திலுள்ள‌ ம‌ர‌க்கோடாலியால் வெட்டி உடைத்தெறிந்தேன். க‌ன‌வுக‌ள் பெட்டியிலிருந்து வ‌ழிந்து பெருகி காற்றில் மித‌ந்து வானை நோக்கி சென்ற‌ன. உடைந்த‌ சில்லுக‌ளாகியிருந்த‌ க‌ண்ணாடியில் என் உருவ‌ம் சாட்சியாய் மீத‌ம் இருந்த‌து. மிச்ச‌த்தை அள்ளி த‌ண்ணீரில் க‌ரைக்க‌த் தொட‌ங்கினேன்.

அத‌ற்குப்பிற‌கு சில காலம் ஊரில் யாருக்கும் க‌ன‌வுக‌ள் வ‌ருவ‌தில்லை என்று குறைப்ப‌ட்டு கொண்டிருந்த‌ன‌ர். பிற‌கு அவ‌ர‌வ‌ர்க‌ளே க‌ன‌வுக‌ளை உண்டாக்கிக்கொள்ளும் வித்தையை அறிந்து கொண்ட‌ன‌ர். முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று உருவம் கண்டு பின் உறங்கச்செல்லும் போது வற்றாத ஊற்றாக கனவு வருவதாக நம்பத்தொடங்கினர். ஆனால் அதிலும் தேர்ந்தெடுத்த கனவுகள் எடுக்கின்ற ரகசியத்தை அவர்களால் அறிய முடியவில்லை. ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கான‌ ப‌ல‌னை விட‌ அதிக‌ வ‌ள‌ர்ச்சி கொள்வதாக‌ க‌ன‌வு காண‌ தொட‌ங்கிய‌தால் ஊரில் பொறாமை உண்டாக‌த்தொட‌ங்கிய‌து. பின்பு க‌ன‌வில் ப‌லனுக்கானதாய் அறிவ‌து குறைய‌த்தொட‌ங்கி ம‌ற்ற‌வ‌ர் அழிவ‌த‌ற்காக‌ க‌ன‌வுக‌ள் காண‌த்தொட‌ங்கின‌ர். ஒருவர் கனவில் மற்றவர் குறுக்கிடுவது அதிகரித்தது. உலகம் அழியும் நாளுக்கான அறிகுறி இது என ஒரு பெரியவர் அழுதுகொண்டிருந்தார். சிறிது கால‌த்திற்குப்பின் ம‌க்க‌ள் க‌ன‌விற்காக‌ உற‌க்க‌ம் தொலைத்து ப‌க‌லிலும் க‌னவுக‌ளை காண‌ ஆசைப்ப‌ட்டு முற்றிலுமாக‌ த‌ங்க‌ளை ம‌ற‌ந்திருந்த‌ன‌ர். அல்லது பொய்யான கனவுகளை கதைகளாக அதிகம் பேசத்தொடங்கினர்.

எப்போதாவ‌து என‌க்கு ஜெனிதாவின் ஞாப‌க‌ம் வ‌ரும்போது ம‌ட்டும் நான் உண‌வாய் கொடுத்த‌ மீன்க‌ளிட‌மிருந்து சில‌ க‌ன‌வுக‌ளை வாங்கி அவ‌ள‌து பிம்ப‌த்தை பார்த்துவிட்டு மீண்டும் க‌ன‌வுக‌ளை மீன்க‌ளுக்கே கொடுத்து விடுகின்றேன். பிறகு நான் இறக்கும் வரை புதிதாய் ஏதும் கனவு காண விரும்பாதவனாகவே இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.