யாமம் - விமர்சனம்

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks

இரவு கரும்பசுமை அதிகம் கொண்டிருக்கும் மேய்ச்சலுக்கு ஏற்ற ஒரு பெரிய விரிந்தவெளி. பகல்களின் செயல்கள் இரவுகளில் கனவுகளாக விதைக்கப்பட்டு முளைக்கிறது. அவள்’களின் சிரிப்பு, கோபம், முறைப்பு, சுளிப்பு, பேச்சுக்கு ஏற்றாற்போல் கனவு விளைகிறது. கனவுகள் பட்டுப்போகவும் துளிர்விடுவதற்குமாக மற்ற ஏதோவொரு பகல்கள் உதவுகின்றன. இரவு கனவுகளையும் விருப்பங்களையும் இச்சைகளையும் அதிகம் சுரந்து கொண்டே இருக்கின்ற அபூர்வ சுரபியாக இருக்கிறது. கனவுகளைப் பற்றி அறியா வயதில் மறுநாளைய பகலில் முந்தினம் கிடைத்த கனவுகளைப் பகிருதலில் அதிகம் கதைகள் கலந்திருந்தது. அதிகம் விலங்குகளை பழக்குபவனாக கிடைத்த கனவுகளின் பலனைப்பற்றிய தேடுதல் இருந்ததில்லை. பதின்ம வயதுகள் நிச்சயம் கனவு வருமென்றும் கனவில் அவள் அல்லது அவள்கள் இருக்க வேண்டுமென்பதையும் விதியாக்கிக்கொண்டன. உறங்குவதற்கு முன் இவள் கனவில் வருவாள் என்று நிச்சயப்படுத்திக்கொண்டு போர்வை இழுத்து மூடிக்கொள்ளுதலில் பலன் கிட்டியிருந்தது. இரவுகளில் வரும் கனவிற்கும் பகலின் நிகழ்விற்கும் என்னிடம் ஒரே ஒரு வித்தியாசம்தான். இரவுகளில் நான் நானாக இருந்திருக்கிறேன். பகல்களில் நான் என்னை மாற்றி முகமூடிகளுக்குள் பூட்டிக்கொள்கிறேன். இன்றுவரை ஏதாவது கனவுகளில் திடுக்கிட்டு எழச்செய்யும் இரவுகளைத்தவிர மற்ற எல்லா தினங்களிலும் எவளோ ஒருத்தி வந்து தொலைந்து கொண்டே இருக்கின்றாள். எவளுமில்லாத கனவுகளும் நினைவுகளில்லாத இரவுகளும் மிகக்கொடுமையானது.

-சென்ஷி


நெடுங்குருதியில் உடலின் எல்லா அங்குலத்திலும் வெயிலை பரவவிட்டுச் சென்றிருந்த எஸ்.ராமகிருஷ்ணன், யாமத்தில் அலையவிட்டிருப்பது இருளை. இரவை. கருமையை மற்றும் சில மனிதர்களை. இம்மனிதர்கள் அனைவரும் இறந்த கால சரித்திரத்தில் அறியப்படாத அல்லது பாடப்படாத கதாபாத்திர தன்மையை கொண்டிருக்கிறார்கள். தியாகம் அல்லது துரோகம் என்பதன் அர்த்தம் தெரியாத மாயவலையில் ஏதோ ஒரு மூலையில் சிக்கிக்கொண்டு தன்னைத் தானுண்ணும் விலங்கு ஆகிறார்கள்.

அப்துல் கரீமின் கனவில் தோன்றும் அல் அசர் முசாபர் என்னும் பக்கீரின் அசரீரியிலிருந்து தொடங்கும் கதை வெள்ளையர்கள் இந்தியாவில் வியாபார நிமித்தம் வந்து பாரதத்தின் பிரஜாதிபதியாகிய சூழலின் நிகழ் புனைவுகளை தக்ளி நூலாக தனக்குள் செலுத்திக் கொள்கிறது. வெள்ளையர் வருகையால் உருவான பட்டணத்தில் வாழ்ந்த சிலரின் கதை.

வாசனையைப்போன்று காமமும் அரூபம் தான். சின்ன சிலிர்ப்புகளால் தன்னை உற்சாகப்படுத்திக்கொள்வதை காமத்தின் பங்கிற்கு நறுமணம் முக்கியமானது. நூலின் பெயர் யாமம் என்று வைத்தது இரவின் மடியில் எனக்கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. யாமம் என்பது நாவலில் மிகமுக்கியமான அரிதான வாசனைப்பொருளான அத்தரின் பெயராகக் குறிப்பிடப்படுகிறது. காமத்தின் வாசனையில் யாமத்திற்கும் முக்கியப்பங்கிருக்கிறது போல.

யாமம் எனப்படும் வாசனைமிக்க நறுமணப்பொருளான அத்தர் தயாரிப்பதை தனது குடும்பத்தொழிலாகக் கொண்ட அப்துல் கரீமிற்கு முதலிரண்டு மனைவிகளான ரஹ்மானி, வகீதாவால் வாரிசு இல்லாததால் மூன்றாவதாய் சுரையாவை திருமணம் செய்து கொள்கிறார். அத்தர் தொழிலை அடுத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டியது ஆண் வாரிசுதான் என்ற பக்கீரின் கண்டிப்பான வாக்கிற்கு மூன்று பெண்களாலும் கருச்சுமை உண்டாக்க இயலாமல் போக, முதல் மனைவி ரஹ்மானி ஒரு பெண்குழந்தைக்கு தாயாகிறாள். ஆண் வாரிசு இல்லாத கவலையால் தனது மனதை குதிரைப்பந்தயத்தின் மேல் திருப்பும் கரீமிற்கு முதலில் கிடைக்கும் வெற்றி இறுதிவரை நிலைக்காததால் கடனாளியாகி மனைவியர், சமூகம் முன் தோன்றவியலாமல் காணாமல் போகின்றார். வெவ்வேறு குணாம்சம் கொண்ட மூன்று மனைவியரும் சமூகச்சூழலில் வாழ்வை நகர்த்துகிறார்கள். யாமம் எனப்படும் குணாம்சம் மிக்க அபூர்வ நறுமணம் கொண்ட அத்தர் அழிந்து போகிறது.

தாயின் மறைவிற்கு பின் நங்கை சித்தியின் அரவணைப்பில் வளரும் பத்ரகிரி தனது தம்பி திருச்சிற்றம்பலத்தை கணிதத்தில் மேற்படிப்புக்காக லண்டன் அனுப்பி வைக்கின்றான். திருச்சிற்றம்பலம் தனது மனைவி தையல்நாயகியை, தனது அண்ணன் மற்றும் அண்ணி விசாலாவின் பாதுகாப்பில் தங்க வைக்கிறான். காமம் கை மீறிப்போகும் ஒரு பொழுதில் பத்ரகிரியும் தையல்நாயகியும் இணைகிறார்கள். இவர்களின் உறவு தெரிந்து விசாலா தனது குழந்தையுடன் பிரிந்து தாய்வீடு செல்கிறாள். தையல்நாயகிக்கு குழந்தை பிறக்கும்போது அவள் தன்னுடைய பாதுகாப்பின்மை பற்றிய அச்சத்தை பற்றிக் கொள்கிறாள். பத்ரகிரியை பிரிகிறாள். பத்ரகிரி தனித்து தனது நங்கை சித்தி வாழ்ந்த வீட்டில் புகுந்து கொள்கிறான்.

லண்டனிற்கு படிக்க சென்ற திருச்சிற்றம்பலம், லண்டனின் நாகரீக பழக்கத்திற்கு பயந்து தனித்து திரிகிறான். அங்கு அச்சுக்கலை பயில வந்த சற்குணம் லண்டன் பழக்கத்திற்கேற்றவனாய் இருப்பது திருச்சிற்றம்பலத்துக்கு ஆச்சரியமூட்டுகிறது. ஆனால் சில நாட்களில் சற்குணம் போக்கில் மாறுதல் ஏற்பட்டு அவன் ஆங்கில கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக போராடத் தொடங்குகிறான். போராட்ட முடிவில் சற்குணம் சிறை செல்ல, திருச்சிற்றம்பலத்தின் கணிதத்திறமை வெள்ளையருக்கு புலப்படுகிறது. விடுமுறையில் திரும்பும் திருச்சிற்றம்பலம் நிகழ்வுகள் அறிந்து தனது அண்ணியை சென்று பார்க்கின்றான். தனது இறுதிகாலம் வரை இனி அண்ணனின் குழந்தைக்காகவும் அண்ணிக்காகவும் வாழ முடிவெடுக்கின்றான்.

உறவினர்களிடம் ஏற்படும் சொத்து தகராறால் மதராபட்டணத்தில் நீதிக்காக காத்திருக்கும் கிருஷ்ணப்ப கரையாளர், ஒரு நாள் தனது சினேகிதியான எலிசபெத்தை அழைத்துக்கொண்டு மேல்மலைக்குச் செல்கிறார். அங்கு ஏற்படும் மனமாற்றத்தில் சொத்துக்களை தனது உறவினர்களின் பெயரில் எழுதி வைத்து விட்டு தனக்குச் சொந்தமான மேல்மலையையும் எலிசபெத்தின் பெயருக்கு எழுதி வைக்கிறார்.

ஆத்மதிருப்தி அல்லது தனது ஆன்மா பற்றிய கேள்விகளின் பதில் தேடி நீலகண்டம் என்ற நாயின் பின்னால் அலையும் பண்டாரம் தனது பயணங்களின் நடுவில் காமமுற்று ஒரு பெண்ணைத் தாயாக்கி தனக்கு எந்த பிள்ளை பிறந்தது என்று அறியாமல் மீண்டும் நடக்கத்தொடங்கும் நாயின் பின்னால் சஞ்சலத்துடன் நடந்து ஜீவமுக்தி அடைகிறார்.

புனைவு நாவலின் ஓட்டங்கள் சற்றும் மட்டுப்படாது தேர்ந்தெடுத்த களத்தின் ஊடாய் நகர்த்துவதும் அப்போதைய காலகட்டத்தின் அறிமுக நிகழ்வுகளை அசலாய் கொடுப்பதும் எஸ்.ராவின் பாணி. இதிலும் அது கொஞ்சமும் குறையாமல் விறுவிறுப்பை கூட்டுகிறது.

மிகச்சிறந்த நாவல் என்ற அளவில் என்னால் இதை சொல்ல முடியுமா என்று தோணவில்லை. வாசிப்பு அனுபவத்திற்கேற்ற சுவையான புனைவுக்கதை எனும்வகையில் யாமம் நிச்சயம் வாசிக்கலாம்.