வெந்து தணிந்தது காடு

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks

தீண்டாமை

ஆண்டவன் ஆரம்பித்த தீண்டாமை கொடுமை அது. ஆப்பிளை தீண்டியதன் பாவத்தால் ஆதாமுடன் சேர்த்து ஏவாளுக்கும் உணர்வுகள் தந்தது. நிர்வாண உலகில் அம்மண ரக‌சியம் அர்த்தமற்றதாகிற நிமிஷ கணங்களின் அற்புதங்களை கொண்டாடும் தருணத்தில் அவசியமற்ற நாணங்கள் அணைத்துக்கொள்ளும் சூட்டுக்கு எந்த இலையும் மறுப்பு சொல்வதாயில்லை. பூமியில் மனிதனின் முதல் அச்சம் ஏவாளின் சூட்டைக்கண்டுதான். ஏவாளின் சூட்டைக் கொல்ல ஆதாம் ஏவாளை சூடிக்கொண்டான். ஆதாமிற்கு சூட்டின் வசியம் தெரியத்தொடங்கியது முதல் இருவரை சுற்றிலும் வெப்ப மண்டலம் உருவானது. பற்றிக்கொண்டெரிந்தது காடு.

காடு பற்றுதல்

சிகப்புப் பூக்கள் உள்வாங்கிக்கொண்ட நிறத்தின் ஊடே நெருப்புக்கங்குகள் பாய்ந்து சிதறியது. அதிகம் கீழே சிதறியுள்ள சருகுகளினாலேயே மரங்களின் பட்டைகளின் மேல் எரியத்தொடங்குகிறது. காடு பற்றுதல் அதிகம் பயம் கலந்த சுவாரசிய உணர்வு உண்டாக்கும் வல்லமை கொண்டது. காட்டின் விலங்குகள் அலைந்தோடி தண்ணீர் தேடும். வேட்டையாடும் குணம் குறையும். பலவை செத்துப்போகும். அடர்த்தியான பச்சை மரங்களின் மேல் கொழுந்து விட்டெறியும் சிவப்பு நெருப்பு ரத்தகுணத்தை கொண்டதாகிறது. அனைத்தையும் அழிக்காமலும் அணைந்து தொலையாமலும் நின்று எரிகிறது நெருப்பு. நெருப்பு அணைந்தபின் சாம்பல்கள் காற்றின் துணையால் புதிதாய் பூத்த பூக்களின் மேல் அழகாய் பூக்கிறது.

தீக்குளித்த‌ல்

உட‌லில் தீயை வைத்துக்கொண்டு வ‌லியின் உச்ச‌த்தில் அங்குமிங்கும் க‌த்திக்கொண்டு அலைந்ததை நீங்கள் பார்த்த‌துண்டா.. அவ‌ர்க‌ளின் உட‌லில் ப‌ற்றிக்கொண்ட தீ எந்த‌நிற‌த்தில் இருக்கும் உங்க‌ளுக்கு தெரியுமா.. முழுதும் எரிந்து முடிந்துவிடாம‌ல் பாதிப்பிண‌மாக மாறி அர‌ற்றுகின்ற குர‌லின் ச‌ப்த‌ம் உங்கள் செவிகளில் ப‌ட்ட‌துண்டா.. தீக்காய‌ம் என்ற பெய‌ரில் இருக்கின்ற இருட்டுக்க‌ளின் மேல் வ‌டியும் ர‌த்த‌ம் சீழாக மாறி வ‌டியும்போது துடைத்த ‌கர‌ங்க‌ள் இருக்கிற‌தா.. அப்ப‌டி துடைக்கும்போது கொஞ்ச‌ம் ச‌தைக‌ளும் சேர்ந்து பிய்ந்து வருவதை அறிந்ததுண்டா.. ஆஸ்பத்திரியின் அழுக்கு தரையில் வாழையிலையில் படுக்க வைத்திருப்பது ஏன் தெரியுமா.. ஒருவேளை உயிர் தப்பிவிட்டால் நெருப்பு பட்ட இடங்கள் வெளுத்த பழமாக மாறுவதை பார்த்ததுண்டா.. அருகில் நிற்கும்போது கருகிய உடம்பின் வாசனையை நுகர்ந்ததுண்டா.. உடலின் எரிச்சலில் கண்ணீர் கூட நெருப்பாய் எரியும் அனுபவம் உண்டா.. பிளாஸ்டிக் வளையல்கள் கையுடன் உருகி உள்ளே நுழைந்ததை பார்க்க முடியுமா.. கடைசியாக ஒன்றே ஒன்று.. சுற்றிலும் உறவுகள் பார்க்க அவளின் கடைசி ஆசையாக முத்தம் கேட்டால் கொடுக்க முடியுமா....

நான் கொடுத்துவிட்டேன். எனக்கு மேற்கூறிய எதையும் யோசித்துப்பார்க்க வேண்டிய அவசியம் தெரியாமல் அவளது கருத்துப்போன உதடுகளில் மெல்ல ஒத்தடமிட்டு நின்றேன். யாரும் என்னை பிடித்து இழுக்கவில்லை. தடுக்க முயற்சிக்கவில்லை. அவளின் சூடு என் மேல் பரவியது. அவள் அமைதியாக இறந்து போனாள்.

அவள் இறந்ததை உறுதிப்படுத்திக்கொண்டு வெளியேற, பின் நடைபாதையில் தலையை கையால் பிடித்துக்கொண்டு கீழே முழந்தாளிட்டு அமர்ந்திருந்த அவள் அப்பா அவர் போட்டிருந்த செருப்பால் என் கன்னத்தில், தலையில் மாற்றி மாற்றி அடிக்க ஆரம்பித்தார். ரெண்டாவது அடியிலேயே உதடு கிழிந்துவிட்டது. கூட்டம் சேர்ந்து அவரை விலக்கியபின் அவரது எச்சிலுடன் கெட்ட வார்த்தைகளும் என் மேல் விழுந்தது. நான் வெளியேறியிருந்தேன்.

தற்கொலை முயற்சி

சாவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கலாம். ஆனால் எனக்கு தெரிந்த ஒரே வழி தீக்குளிப்பதுதான். கெரசினை தலையிலிருந்து மேலே ஊற்றும்போது அதன் நாற்றம் குடலை பிரட்டும். மூச்சு எரிச்சலாக மாறும். தவறி ஒரு துளி வாய்க்குள் போய்விட்டால் வாந்தி வருவது போன்ற உணர்வு வரும். ஆனால் அவ்வளவு எளிதாக வாந்தியும் வந்து தொலையாது. கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயற்சித்தால் உடலிலேயே எண்ணெய் காய்ந்து தோலில் சிறிது எரிச்சலுடன் கூடிய அரிப்பு ஏற்படும். அந்த நேரத்தில் பற்ற வைத்தாலும் முழுதும் எரியும் வாய்ப்புகள் குறைவு. உடலில் சட்டையின் மேலுள்ள ஈரத்தில் பற்றிக்கொள்ளுமென்றாலும் அணைந்து விடும் அபாயம் அதிகம். ஆகவே உடல் முழுதும் கெரசினை ஊற்றி விட்டு ஈரமாகாத தீப்பெட்டியால் பற்ற வைத்துக்கொள்ளும்போது உடனே எரியத்தொடங்கிவிடும். சட்டைகளில் எதையும் வைத்துக்கொண்டு எரிந்து போவதில் லாபம் இல்லை. ஆகவே அவளது புகைப்படம் மட்டும் பையில் வைத்துக்கொள்வது நலம்.

கொஞ்சம் காதல் குறிப்புகள்

அவள் தலையில் வைத்த அந்த சிகப்புப்பூ எனக்கு எப்போது நெருப்பை ஞாபகப்படுத்தும்.

நெருப்பைக்கண்டு சிறிய வயதில் எழுந்த பயம் இன்னும் மறையாமல் இருக்கும் மனதில் அவள் மட்டும் எப்படி இருக்கின்றாள் என்பதை அறிய முடியவில்லை. நெருப்போடு விளையாடும் அவளது விரல்கள்..

நெருப்பை விரலால் தொட்டு பிடித்து அசைத்து கிள்ளி விடுகின்ற நேரங்களில் சுடரும் அவளுடன் இணைந்து குழந்தையாய் மாறி விட்டது போலத்தான் தெரிகிறது எனக்கு.

காற்றை அணைத்து விட்டு சுடரை எரியச்சொல்லும் அவளிடம் நெருப்பு பிரியத்தின் முதல் கடவுள் ஆவது எனக்குள் பொறாமைத்தீயை வளர்க்க உதவுகிறது. ஆனாலும் அக்னியின் மேல் அச்சம் குறைந்த பாடில்லை அவள் மேல் கொண்ட காதல் போலவே..

நெருப்பில் உருகிய மெழுகுத்துளிகளில் விரல் பொட்டு வைத்து அந்த சூட்டால் என் மீது பதித்து சென்ற ரேகைகள் இன்னும் பத்திரமாய் உடைந்து விடாமல் பாதுகாக்கின்றேன்.

ஏக்கங்களை பற்றிய குறிப்புகளில் எனது காதல் ஏக்கமாய் எட்டிப்பார்த்து விட்டு ஒளிந்து கொள்கிறது. அவள் மேலான என் காதலை போலவே. அல்லது அணைந்து காற்றடித்தால் பற்றுகின்ற தீயைப்போல.

காற்றை சுவாசிப்பது போல எளிமையாக காதல் யாசிப்பது கிடைத்துவிட்டால் இதயத்திற்கு மரியாதை தந்திருக்க மாட்டார்கள். மூச்சை விட ஆழமாக உள்நுழைந்து ரத்த நாளங்களை வெடிக்க வைக்கும் அளவு சக்தி கொண்டது காதல்.

கடைசி நிகழ்வு

அவளை மீண்டும் எரிப்பதற்கு தயாராகிக்கொண்டிருந்த மாலை நேரத்தில் என்னை வேறு ஒரு உறவுக்காரரின் வீட்டிற்கு அனுப்புவதற்கான பணியில் மும்முரமாகிக்கொண்டிருந்தார் என் அப்பா. அவளது சாதிக்காரர் வட்டாட்சியராய் இருந்த சவுகரியத்தால் மரணத்தின் காரணம் தீராத வயிற்று வலியாக மாற்றி எழுதப்பட்டிருந்தது. ஏதோ நிகழப்போகிறது என்ற பயத்தின் காரணமாய் தெருவின் அனைத்து ஜன்னல்களும் சாத்தப்பட்டிருந்தன. என்னை எல்லோரும் கொஞ்சம் மறந்திருந்த அந்த ஐந்தாவது நிமிடத்தின் அடுத்த நொடியில் நான் வீட்டின் படியிறங்கி அவளது வீட்டை நோக்கி சென்றேன்.

அவளின் இறப்பை நேரில் கண்ட அதிர்ச்சியில் இருந்த அவள் அம்மாவை சாமியாடியிடம் கொண்டு போயிருந்தனர். அவள் வீட்டினும் நுழைந்ததை யாரும் பார்க்கவில்லை. நேராய் அவள் தீக்குளித்திருந்த அறைக்கு சென்றேன். சுவரெங்கும் கரியாக அவள் படிந்திருந்தாள். எனது தற்கொலை முயற்சியை நான் ஆரம்பித்தேன். பற்ற வைத்த தீக்குச்சியின் நெருப்பில் அவள் முகம் தெரிந்தது. உதடுகளை காண முடிந்தது. மெல்ல அவள் உதடுகளை மீண்டும் கவ்வ ஆரம்பித்தேன்.

அரை மணி நேரத்திற்குள்ளாகவே வெந்து தணிந்திருந்தது காடு.