காத‌ல்சொல்லிக‌ள்

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks

இருப்பிடம் தொலைத்தலை சுவாரசியமாக்கிக்கொள்ளுதலைப் போன்ற சநீதங்கள் பற்றுதல்களில் அவளுக்கு ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை. 'நான்' எனப்படுதலையே அங்கீகாரத்தின் உச்சதம் எண்ணப்படுகையில் இருக்கின்ற எனக்கெல்லாம் அவளது அங்கீகார மறுப்பு நிச்சயம் அலுப்பைத்தான் மேலும் மேலும் உண்டாக்கி என்னை என்மேல் பரிதாபப்பட வைக்கின்றது. எனக்கான நிலைமறுத்தல்களின் நம்பிக்கைக்கொள்ளுதலில் அவள் ஓவியம் வரைந்து மேல் துப்பிய எச்சிலை துடைக்கும் செயலில் ஓவியம் அழியும் சாத்தியம் உள்ளது. அவள் என் மேல் வரைந்த பிம்பங்களில் எனது மெய்ப்பிரதியை தூய்மையாக்குதலில் ஈடுபாடு காட்டுதலும் பிரதிகளின் நகல்களுக்கு அவளது பெயரை வைத்துக்கொண்டாடுவதும் காதல் தோல்வியுற்ற குடிகாரனின் வாயிலிருந்து மிச்சப்பட்ட எச்சில் மண்ணில் விடுவித்தலிற்கு நிகரானது.

பின்னிரவுகள் எனப்படும் விடிகின்ற பொழுதிற்கு அல்லது நான் இயல்பாய் எழும்பொழுதிற்கு மாறுபட்டு தூக்கம் கலைகின்ற சமயங்களுக்கும் நான் அவளை நிச்சயம் காரணம் சொல்ல முடிகிறது. அவளைப்பற்றிய மாறுபட்ட பல சிந்தனைகளின் மையப்புள்ளி எதன் மீதும் நிலைகொள்ளாது கண்ணின் அருகை மைத்தொட்டு நிரப்பிய இரவு உலகமாய் விரிகின்றது. அந்த சமயத்தில் கிடைக்கின்ற வார்த்தைகளை அவளுக்கான கவிதைகளாக மாற்றி அதனை மீண்டும் திரும்பி படித்துப்பார்க்கையில் எழுத்துக்களின் வன்மையில் அவள் மீதான என் காதலை விட அவள் என்னை விரும்பியிருக்கின்றாள் என்ற நம்பிக்கையே உச்சமாய் இருக்கின்றது.

அக்கவிதைகள் எனது காதல் தோல்விக்கான மாறாது அவளது காதலை நான் ஏற்றுக்கொண்ட அற்புதக்கணத்திற்கான மாறுபாடின் துவக்கமாய் இருக்கின்றது. அற்புதக்கணங்கள் கிடைத்தல் அரிது என்று நிச்சயம் எனக்கு தெரிந்திருப்பதால் அந்த துவக்க நிமிடங்களை, வினாடிகள் உட்பட பத்திரப்படுத்தி வருகின்றேன். அவளுக்கு என்றாவது எனது வாழ்த்தாக நான் அதை அனுப்பி வைக்க வேண்டும். வழக்கம்போல உள்ளுக்குள் சிரித்துவிட்டு நகர்ந்து செல்வாள் என்று எனக்கு தெரியும் என்ற எண்ணம்தான் நான் அதை அனுப்பதலை தாமதப்படுத்துகின்றன.

மூன்றாம் பரிமாணப்பார்வைகள் கொள்வதற்கான கருத்துக்களம் எங்கள் இருவருக்குமான பொதுத்தளமாக அன்று மாறியிருந்தது. சமூகப்பார்வை என்பதை தவிர்த்தலில் இருக்கின்ற நியாயங்கள் அவளுக்கு ஏற்புடையதாயில்லை. ஒரு தேவதையாக எனது காதலியை உருவகப்படுத்திய அதிர்வுகள் அவளைப் பாதிக்கின்றன. வழமையான சிந்தனைகளில் நான் மூழ்கிக்கிடப்பதாகவும் அதில் மிதக்கின்ற அசுத்தங்களில் எனது பங்கும் இருப்பதாக குற்றம் சொல்லுகின்றாள். எழுந்து செல்லும் யவனியின் ஈரத்துணியில் தெரிகின்ற அங்கத்தில் மிச்ச உடம்பில் அவளுக்கு வால் இருக்கின்றதா என்று நான் தேடுகிறேனா என்று எனக்காக ஒரு ஒற்றனை நியமித்தலில் அடுத்த கட்டமாய் அந்த ஒற்றனின் பணி விசுவாசம் நம்புதலுக்குரியதாயோ போற்றுதலுக்குரிய நியதிகள் இல்லாமல் இருந்ததாலோ மீண்டும் அந்த ஒற்றனை வேவு பார்த்தலுக்கு அவளே கிளம்பி வந்திருந்தாள். வேவு பார்த்தலின் விதிகளில் எனது இயல்பு இயக்கங்கள் பாதிப்படைந்திருந்தன. ஒற்றைப்பெண்ணொருத்திக்காகவும் உலகம் இயங்கும் என்ற நம்பிக்கையின் ஆதாரங்கள் இன்னும் பழுதடையாத காரணத்தில் நான் கொண்ட பிடிவாதத்திற்காக என்னை வேவு பார்த்தவனிடம் எனக்கான காதலை சுமந்து செல்ல‌ தூதுவ‌னாக்கினேன். அவ‌ன் அத‌ற்காக‌ வ‌ர‌வில்லையென்றும் த‌ன‌து ஒற்றுத்தொழிலுக்கு ஏற்ப‌ட்ட‌ இழ‌ப்பாக‌வும் இதைக்க‌ருதி ம‌ர‌ண‌த்தை நாடினான். என‌து காத‌லிற்காக‌ இழ‌க்க‌ப்ப‌ட்ட‌ முத‌ல் உயிர் இது என்ப‌தால் இத‌னை ப‌திவு செய்த‌லும் வ‌ர‌லாற்றில் அவ‌னை ஏற்றி வைத்த‌லிலும் முக்கிய‌க்கார‌ணியாக்கிக் கொண்டிருக்கின்றேன்.

இந்த இடத்தில் 'அவன்' என்பது நானாக என்னிடம் பிரித்திருந்த பிரதியின் நகல் என்பது இங்குத்தெரியப்படுத்த வேண்டியது அவசியம்.

அவளுக்குப்பிடித்தவனாய் நான் நடிக்க வேண்டிய கடினங்களின் இடையூறாக நகலின் பிரதியை உண்டாக்கியிருந்தேன். எனது பிரதியை அதனது நகல் ஒற்றுப்பார்த்து அவளுக்கு நல்லவிதமாய் எந்த விவரமும் சொல்லாதது ஏன் என்பதை அறிவதற்காக மேலும் பிரதியையும் நகலையும் பிரதியின் நகலையும் நகலின் பிரதியையும் நகலின் நகலையும்...... இப்ப இங்க நான் காணாம போயிட்டேன்டி..

மூன்றாம் அடுக்கில் மிச்ச‌ம் தொங்கிய‌ அந்த‌ கொத்துப்பூவின் வாச‌ம் அவ‌ளுக்கு பிடித்திருக்காது என்ற‌ எண்ண‌ம் அது ப‌றிக்க‌ப்ப‌டாம‌ல் இருப்ப‌தால் ம‌ட்டுமே.

மேலுள்ள‌ வ‌ரிக‌ளை ச‌ரியான‌ வ‌ரிசையில் அடுக்கிப்பார்த்தால் ந‌ல்ல‌ க‌விதை கிடைக்க‌க்கூடும். க‌விதை எழுத‌லின் சாத்திய‌க்கூறு விதிக‌ள் என்னிட‌மிருந்து தொலைந்து விட்ட‌ப‌டியால் என‌து வ‌ரிக‌ள் இடைவெளி தொலைந்து ஒன்றுட‌ன் ஒன்று ஏறி மிதித்து சாகும் நிலையில் இருக்கின்ற‌ன‌. அப்ப‌டியே விட்டு விடுவ‌து புதுக்க‌விதை ஒன்று கிடைக்காம‌லிருக்க‌ வ‌ழி செய்யும்.