முந்தா நாள் செத்துப்போனவனின் நண்பன்

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks

உலகின் மிகச்சிறந்த கதையை இன்னும் வாசிக்கவில்லை அல்லது அதை நான் இன்னும் எழுதவில்லை.
-பயனற்ற குறிப்புகள்.

உடல் அழுகிக்கொண்டிருந்தது என்று கேட்டிருந்ததை நான் இன்றுதான் நேரில் பார்த்தேன். செத்துப்போய் தூக்கில் தொங்கும்போதும் அல்லது தூக்கில் தொங்கி செத்துப்போன பின்பும் சிவண்ணாவின் லுங்கி மடிப்புகள் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. வழக்கமான லுங்கியின் கட்டம் வைத்த கோடுகள் இப்போது ஈரத்தில் புதிதாய் மின்னிக்கொண்டிருந்தன. நாக்கைக் கடித்தபடி இருந்தது பற்கள். அதிசயமாய் சட்டை போடாமலே செத்துப் போயிருந்தார் சிவண்ணா. வயிறு பெருத்து தொங்கியிருந்தது. மார்பில், கம்மாங்கட்டையில் முடிகள் கொசகொசத்திருந்தன. கைகள் விறைத்து தொங்கியிருந்தது, விரல்கள் மடங்கிய நிலையில் இருந்தன. முகத்தில் பருக்கள் காய்ந்திருந்த வடுக்களில் ஈக்கள் அமர்ந்து பறந்து இடம் மாறி அமர்ந்து கொண்டிருந்தது. சிவண்ணாவின் பக்கத்து வீட்டில் தங்கியிருந்த குமார் தொங்கிக் கொண்டிருந்த சிவண்ணாவின் காலை மெலிதாய் திருப்ப விரல்கள் கால் சதைகளில் அழுந்தி உள்ளே சென்றது. என்னால் தாங்க முடியாத நாற்றம் மனதைத் தாக்கியபோது வெளியில் ஓடிவந்து வீட்டின் இடப்புறம் இருந்த கல்லின் அருகில் குத்துக்காலிட்டு அமர்ந்து வாந்தி எடுத்தேன்.

(o)

என் வாழ்வில் முதல் தற்கொலையைப் பார்த்தபோது எனக்கு ஆறு வயது. தெற்குச் செட்டித் தெருவிலிருந்து நைநா கடைக்கு அப்பாலுள்ள ரயில்வே லைனைத் தாண்டித்தான் டீக்கடைக்கு சென்று காலையில் பாவாவிற்கு டீ வாங்கி வர வேண்டும். காலை எட்டு மணி வாக்கில் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் பாசஞ்சர் வண்டிக்காக ரயில்வே லைனை மூடிவிடுவர். வேகமான அதிர்வுகளுடன் தாண்டிச்செல்லும் தொடர்வண்டி சாலையை குலுக்கிக்கொண்டே நகரும். பாதுகாப்பு என நினைத்து அந்த வயதில் ரயில்வே கேட்டின் கம்பிகளை எவர்சில்வர் தூக்கு வைத்திருக்கும் கையாலும் இறுகப் பிடித்துக் கொண்டிருந்தது ஞாபகம் உள்ளது.

வெள்ளைத் துப்பட்டாவுடன் கையில் குழந்தையுடன் நின்றிருந்த அவள் பாசஞ்சர் ரயில் வந்தபொழுது குறுக்கில் விழுந்தாள். எதைப்பற்றிய கவலையும் இல்லாமல் சதைத்து அரைத்துவிட்டு ரயில் சென்றிருந்தது. வெள்ளைத் துப்பட்டியின் ஒரு சிறிய துண்டு ரத்தத்தில் சதைகளில் நனைந்து சிவப்பாய் என்னருகில் விழுந்தது. அலறியடித்துக் கொண்டு வீடு நோக்கி ஓடியிருந்தேன். அன்றிலிருந்து ஒரு மாதத்திற்கு வீட்டிற்கு டீ வாங்கிக்கொண்டு வருவதற்காக பாவாவே கடைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தார். அவள் யார், எந்த ஊர், ஏன் செத்தாள், குழந்தையையும் சேர்த்து ஏன் சாகடித்தாள் எந்தக் கேள்விகளும் அப்போது எனக்கு யாரிடமும் கேட்கத் தோணவில்லை. இப்போது யோசிக்கும்போது குழந்தை மாத்திரமாவது சாகாமல் இருந்திருக்கலாமோ என்ற பரிதாபம் மிஞ்சுகிறது.

(o)

உடல் இருந்த நிலையை வைத்து சிவண்ணா செத்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கும் என்று எல்லோர் மத்தியிலும் பேசப்பட்டது. தற்கொலை செய்துக் கொண்டதால் போலீசாருக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்திருப்பதாக குமார் சொல்லிவிட்டு, கதவை உடைத்து உள்ளே பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்த சிவண்ணாவைப் பார்த்த கதையை நைட்டி அணிந்து வெளியில் நின்றிருந்த பெண்களிடம் சுவாரஸ்ய பேச்சுடன் அளந்து கொண்டிருந்தான். சூழ்நிலைக்கு பொருத்தமின்றி குமாரின் அசாதாரண தைரியம் கலந்த சிரிப்புடன் பேச்சு வெளிவந்துக் கொண்டிருந்தது. அவனை ஒரு நாயகனாக்கிக் கொள்ளும் பொருட்டாக அமைந்த பேச்சென்று எனக்கு அது தோன்றியது.

சிவண்ணா தற்கொலை செய்து கொண்ட காரணமாக வேலையில் பிரச்சினை, உடல் நலமின்மை, கடன் தொல்லை, துரோகச் செயல்கள் என்று வரிசையாக வாய்கள் மென்று கொண்டிருந்தன. ஒரு வாயிலிருந்து பேச்சோடு பேச்சாக ஊரில் தங்கியிருக்கும் சிவண்ணாவின் மனைவியின் நேர்மை பற்றிய கேள்வியும் எழுந்தது.

(o)

செட்டித்தெருவின் நடுவில் உள்ள சந்தில் நுழைந்து இரண்டு நிமிட தூரத்தில் வரும் அரசாங்க மருத்துவமனைக்கு அருகில் கறிக்கடைகளுக்காக கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில்தான் ஆடு அறுப்பது வழக்கம். விசேஷங்களைப் பொறுத்து வெட்டப்படும் ஆடுகளின் எண்ணிக்கை கூடும். சாதாரணமாய் நான்கு ஆடுகள் வரை வெட்டப்படுவது வழக்கம். ஜஹாங்கீர் கடையில் தான் நான் எப்போதும் கறி வாங்குவேன். விடியற்காலையில் கறி வாங்கச் சென்றுவிட்டால் தழைகளைத் தின்று நிற்கும் ஆடுகளை கயிறு அறுத்து இழுத்துப்போகும் சாகுலைக் காணலாம். அந்த அரைமணி நேரக் கணக்கில் நான்கு ஆடுகளையும் வெட்டி குடல் அறுத்து சுத்தம் செய்து நான்கு துண்டங்களாக மாமிசங்களை இரும்புக் கொக்கியில் ஏற்றிவிட்டு சைக்கிளில் ஏறி சென்றுவிடுவான். தலையை வெட்டியபின் கிடைக்கும் ரத்தத்தை மண் சட்டியில் பிடித்து கடைக்குள் கொண்டு சென்று வைக்கச் சொல்லி நான் வேடிக்கைப் பார்க்க நின்றிருந்தால் என்னிடம் சொல்லுவான். ஒரு ஆட்டிற்கு நான்கு மண் சட்டிகள் ரத்தம் கிடைக்கும். வெட்டிய ஆட்டின் தலையில் உள்ள கண்கள் மூடமுடியாத ஒரு அமானுஷ்ய சூழலை வேடிக்கைப் பார்ப்பதாக எனக்குப் படும். சுற்றிலும் கறி வாங்க வந்தக் கூட்டமும் அந்தக் கண்களை பார்த்துவிட்டு எடைத்தராசில் வைக்கப்படும் இறைச்சியின் தரத்தை சோதித்து மாற்றச் சொல்லி அடம்பிடிக்க ஆரம்பித்து விடும். உத்திரத்தில் கயிற்றால் கட்டப்பட்டு தொங்க விடப்பட்ட இரும்புக் கொக்கிகளில் தொங்கும் ஆட்டின் தொடைச்சதைக்கறி உயிரற்ற பின்பும் மெலிதாக துடித்துக் கொண்டிருக்கும். இறப்பு நேர்ந்த அந்த நிமிடம் மனதில் கிடைக்கும் வலி, ஜஹாங்கீர் மாமிசத் துண்டுகளாக்கி காய்ந்த வாழைமரப் பட்டையில் நேர்த்தியாய் மடித்துக் கட்டிக் கொடுக்கும்போது மதியம் சாப்பிடப்போகும் அவசரம் அந்த நிமிடத்தில் தொடங்கியிருக்கும்.

(o)

சிவண்ணா குடியிருந்தது வாடகை வீடு. நான் தங்கியிருந்த வீட்டிற்கு எதிரில்தான் சிவண்ணா தங்கியிருந்தார். எங்களுடையது ஒரே காம்பவுண்ட் கொண்ட தீப்பெட்டி வடிவத்தில் கட்டப்பட்ட அடுக்கு வீடுகள். எப்போதாவது டாஸ்மாக்கில் எதேச்சையாக சந்திக்கும்போது அவருடைய புன்னகை பெரியதாக இருக்கும். மற்ற நேரங்களில் வீட்டின் எதிரில் கண்கள் பார்த்தாலும் என்னுடைய தலையசைப்பிற்கும் பதில் கொடுத்தது இல்லை. அவருடைய அறைத் தோழனாக இருந்த மெடிக்கல்ரெப் பிரசாத், அவனுடைய திருமணத்திற்காக கோவை சென்றிருந்த சமயத்தில் இதுபோன்று நடந்திருக்கிறது. விஷயம் தெரிந்ததும் பிரசாத்திற்கு போன் செய்து சிவண்ணாவின் வீட்டுத் தொலைபேசி எண் வாங்கி குமாரிடம் கொடுத்து தகவல் சொல்லச் சொல்லியிருந்தேன். எனக்கு இது போன்ற விஷயங்களில் அத்தனை சாமர்த்தியம் இல்லாததால் குமார் கவனித்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில், கூட நூறு ரூபாய் தாளும் போன் செலவுக்காக கொடுத்திருந்தேன். காலையில் சாப்பிடாத வயிற்றுடன் வாந்தியெடுத்ததால் தலைவலி அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. மெல்ல எழுந்து சேட்டன் கடையில் வாய் கொப்பளித்து துப்பி முகத்தையும் கழுவி டீயைப் போடச் சொல்லிவிட்டு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். சேட்டனும் என்னிடம் துக்கம் விசாரிக்கும் கவலைப் படிந்த முகத்துடன் சிவண்ணாவைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். சிவண்ணா இவனிடம் ஏதும் டீ பாக்கி வைத்திருக்கக்கூடாதே என்ற கவலையில் உதட்டைப் பிதுக்கி என் சோகத்தை ’ப்ச்’ ஆக்கிவிட்டு டீ குடிக்க ஆரம்பித்தேன்.

(o)

வண்ணத்துப்பூச்சியை பிடிப்பதை விட வெகு எளிது தட்டான்களைப் பிடிப்பது. தென்னை மட்டையிலிருந்து பிரித்த மெல்லிய ஈர்க்குச்சிகளை இரண்டு எடுத்துக் கொண்டு பர்மாக்காரர்கள் வீட்டிற்கு பின்புறமுள்ள அதிகம் காடுபோல சிறிய மஞ்சள் நிறப் பூக்கள் வளர்ந்திருக்கும் செடிகளைச் சுற்றிக் கொண்டிருக்கும் தட்டான்களை காற்றின் திசையை கணித்து காற்றின் திசையோட்டத்துடன் வேகமாய் ஈர்க்குச்சியை வீச நிச்சயம் இரண்டு தட்டான்களாவது மாட்டிக்கொள்ளும். ராணித்தட்டான் எனப்படும் அளவில் பெரிதான பயமுறுத்துகின்ற நீலக்கண்கள் உடைய தட்டான்கள் மேல்தான் எங்கள் கவனம். அதனுடைய கண்ணாடி போன்ற இறக்கைகள் மெல்லிய நீலம் கலந்து பெரியதாகவும் வால் நீண்டும் இருப்பதால், கறுப்பான அடிக்கடி மடங்கித் துடித்துக் கொண்டிருக்கும் வாலில் நூலைக் கட்டி விடும்போது பட்டத்தை விட அதிக லாவகமாய் பறந்துக் கொண்டிருக்கும். நூலின் நுனி எனது கையில் இருப்பதால் செடியில் அமர விடாமல் இழுத்துக் கொண்டு பறக்க வைத்துக் கொண்டிருப்பேன். அலுத்துப்போகும்போது நூலை விட்டுவிட்டு வீட்டிற்கு செல்லும்முன் தட்டானின் ஒருபக்க இறக்கையை துண்டித்து விட்டுப்போதலின் குரூர சிந்தனை எந்த வடிவத்தினனாய் என்னைக் காட்டிக்கொண்டிருந்தது என்று இப்போது யோசிக்கிறேன். வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கைகளைப் பிடித்தவுடன் பிசுபிசுவென்று விரல்களில் ஒட்டிக்கொள்ளும் வண்ணத்தினூடே வண்ணத்துப்பூச்சி செத்துப்போவதை காணச்சகியாததால்தான் நான் வண்ணத்துப்பூச்சி பிடித்தலிலிருந்து தப்பித்துக்கொண்டிருந்தேன் என்று எண்ணும்போது நான் மிகவும் இரக்க சுபாவமுள்ளவனாக இருந்திருக்கக்கூடுமென்ற நம்பிக்கை என்னை நிம்மதியாக்கியது.

(o)

நாங்கள் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரரான முதலியாருக்கு செய்தியை யார் அனுப்பி வைத்தார்களோ தெரியவில்லை. நிச்சயம் குமார் போன் செய்திருக்க மாட்டான். ஏனென்றால் முதலியாரின் கோபம் பிரசித்தி. மூன்றாம் தேதி வாடகை நான்காம் தேதி ஆனால்கூட அவரது பார்வை அசிங்கமாய் திட்டிவிட்டுப் போவது போல் இருக்கும்.

அவருடைய பழைய அம்பாசிடர் காரில் வந்து இறங்கி, காலை தரையில் கீழே வைக்க ஆரம்பித்த நொடியிலிருந்து கெட்டக்கெட்ட வார்த்தைகளால் சிவண்ணாவைத் திட்ட ஆரம்பித்தார். செத்துப் போனவருக்கு இருந்த துக்கத்தை விட முதலியாருக்கு அதிகம் துக்கம் இருந்திருக்க வேண்டும். முதலியாரின் வார்த்தைகளை சிவண்ணா கேட்டிருந்தால் இன்னொருமுறை தூக்கில் தொங்கியிருந்தாலும் தொங்கியிருப்பார்.

”மசுராண்டிகளா.. சாவுறதுக்கு என் வூடுதான் கெடச்சாதாடா உனக்கு.. சாவப்போற நாயி. வேற எங்கயாச்சும் போய் கடலு ஆத்துல வுழுந்து தொலைக்க வேண்டியதுதானே. இப்ப இங்க வந்து செத்து என் எழவெடுத்துறிக்கியேடா.. “ முதலியாரின் வார்த்தைகள் தடித்து அவருடைய கோபம் வாடகைக்குத் தங்கியிருந்த எங்கள் மீதும் பாய்ந்தது. அவரது திட்டுக்களை வாங்கியபடி நான் அவருக்கு பின்னால் நின்றிருந்தேன்.

”இந்த நாயி வூட்டுக்கு போன் செஞ்சுட்டீங்களாடா”

குமார் பம்மியபடி மெதுவாக முதலியார் காதருகில் சென்று, என்னிடமிருந்து தொலைபேசி எண்ணை வாங்கி தகவல் சொன்னதாக சொன்னான். அதற்குபிறகு என்னைத் தேடிய முதலியார், நான் அவர் பின்னால் நின்றிருப்பதைக் கண்டு முகம் முழுக்க வெறுப்புடன் காரில் அமர்ந்து சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டார்.

இப்போது தங்கியிருக்கும் மற்றவர்கள் உயிருடன் எத்தனை நாட்கள் இந்த வீட்டில் இருப்பார்கள் என்ற அச்சம் முதலியாருக்கு வந்திருந்ததை என்னால் உணர முடிந்தது. அதைத்தாண்டிய இன்னொரு கவலை போலீசார். தற்கொலை நிகழ்ந்த வீட்டில் இன்னொருவருக்கு வாடகை பிடித்துக் கொடுப்பதென்பது அத்தனை எளிதான விஷயம் கிடையாது. இதற்காக சிறப்புத் தள்ளுபடியாய் வாடகை குறைக்க வேண்டி வரலாம். அதிகம் வாடகை குறைத்தாரென்றால் நானே தங்கிக் கொள்ளவும் முடிவு செய்து கொள்வேன்.

(o)

ஒட்டன்சத்திரம் தாண்டியுள்ள பள்ளப்பட்டியின் அருகிலுள்ள இடையார்கோவிலில் செந்திலின் வீட்டிற்கு போனபோது அவர்கள் கொல்லையில் அலைந்துக்கொண்டிருந்த இரண்டு கோழிகளைப் பிடிக்க முடிவு செய்து ஜெயித்தேன். முன்னெப்பொழுதும் இல்லாத வழக்கமாக செந்திலம்மா சொன்னதற்காக, கோழியின் கழுத்தைத் திருகிக் கொன்றுவிட்டு அதன் இறக்கைகளை, உடல் முழுவதும் ஒட்டியிருந்த சிறகுகளைப் பிய்க்க ஆரம்பித்தேன். சில நிமிடங்களுக்குப் பின் என்னைச் சுற்றிலும் கோழிச்சிறகுகள் காற்றில் பறந்தும் உதிர்ந்தும் என்மேல் ஒட்டியும் இருந்தன. சைவச்சாப்பாடுகளால் கழிந்த இரண்டு நாட்களுக்குப் பின்பான கோழிச்சோறு என்பதால் அன்றைய மதிய உணவில் கோழியின் ருசி அதிகரித்திருந்தது.

(o)

போலீசார் என்றதும் ஜீப்பில் இன்ஸ்பெக்டர் வருவார், கமிஷனர் வருவார், ஆம்புலன்ஸ் வரும் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம் மிஞ்சியது. இரண்டு கான்ஸ்டபிள்கள் மாத்திரம் ஆளுக்கு ஒரு சைக்கிளில் வந்து இறங்கினர். உள்ளே சென்று தொங்கிய சிவண்ணாவின் முகத்தைப் பார்த்துவிட்டு உதட்டைபிதுக்கிக் கொண்டு வெளியில் வந்து முதல்கட்ட விசாரணையை குமாரிடமிருந்து ஆரம்பித்தனர். வீட்டில் அதிக நாற்றம் வீசியதால் கதவை உடைத்துப் பார்த்ததாகவும் கதவை உடைக்கும்போது அருகில் இருந்த நண்பனையும் கோர்த்துக் கொண்டான்.

”ஏன்யா செத்துப்போயிருக்கான்னு தெரிஞ்சு என்னா மசுருக்கு கதவை உடைச்ச.. இது கொல கேசா இருந்தா.. உன்னைத்தான் உள்ள தூக்கி வைப்போம் முதல்ல. அத தெரிஞ்சுக்க” கான்ஸ்டபிள் ஏகமாய் எகிறிக் கொண்டிருந்தார்.

விசாரணை செய்யாமல் ஒதுங்கியிருந்த இன்னொரு போலீஸ், முதலியாரிடம் குசுகுசுத்துவிட்டு குமாரை அதட்டிக் கொண்டிருந்தவரையும் அழைத்து மீண்டும் வீட்டிற்குள் சென்று வந்தார். குமார் வியர்த்து வழிந்திருந்தான். கதவு உடைக்கும் சாட்சியத்தில் அவனது நண்பனாக காட்டப்பட்டவன் முகத்தில் சுரத்து இல்லை.

மீண்டும் வெளியில் வந்த போலீசாரின் கண்களில் நான் எடுத்து வைத்திருந்த வாந்தி பட்டது. கடுகடுப்புடன் “எந்த கம்னாட்டிடா இங்க இந்த மாதிரி அசிங்கம் எடுத்து வச்சது” என்று கத்தினார். எல்லோரின் கண்களும் என்மேல் தடவி குற்றவாளியாக்கிய போதும் யாரும் பேசவில்லை. அதிகம் கத்திக் கொண்டிருந்த அந்த போலீஸ்காரர் காரமாய் எச்சில் துப்பிவிட்டு சைக்கிள் அருகில் சென்று நின்று செல்போனில் பேச ஆரம்பித்தார்.

சிவண்ணா ஏன் செத்துப் போனார் என்று அப்போது வரை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் எனக்கும் அப்போது செத்துப்போகலாம் போல இருந்தது.