ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளி, ஆடுதுறை

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks

பெயர் : ஆடியபாதம்

வகுப்பு: 1 அ

சிறப்பு: உயிரெழுத்து, மெய்யெழுத்து முதல் எண்களை எழுதுதல் வரைக் கற்றுக்கொடுத்தவர். யாரையும் அடித்துப் பார்த்தது இல்லை. ஆனால் தவறாது ஆசிரியருக்குரியவராக ஒரு பிரம்பு எப்பொழுதும் மேசையில் இருக்கும். இவர் உறங்கும் சமயங்கள் எங்களுக்கு சற்று பொழுது போகக்கூடிய வகையில் அமைந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

இவரது மகள் வள்ளி டீச்சரிடம் மேல் நிலைப்பள்ளியிலும் பயின்றது சிறப்பான ஒன்று.

}{

பெயர்: மாணிக்கம்

வகுப்பு: 2 அ

சிறப்பு: மாணவர்களிடையே சேமிக்கும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சிறுசேமிப்பு அட்டையை உருவாக்கியிருந்தார். 105 கட்டங்கள் கொண்ட சீட்டு அது. குறைந்த பட்ச கட்டணம் பத்து பைசா. 100 கட்டங்களுக்குள்ள பணமாக பத்து ரூபாய் கிடைக்கும். சீட்டு தொலைந்து போனால் அதற்கு தனியாக 50 பைசா கொடுத்து சீட்டின் நகல் கொண்டு புது சீட்டு பெற்றுக்கொள்ளலாம். நான் படித்த 5 வருடத்தில் நான்கு முறை இவரிடம் சீட்டு கட்டியதுண்டு. இரண்டு முறை சீட்டு தொலைந்த அனுபவமும் இருக்கிறது.

தண்டனை முறை: வலது கையின் ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரலின் இடையே மொத்தமான அவரது இங்க் பேனாவை வைத்து விரல்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு மாவாட்டுவது போல பேனாவை அசைப்பார். வலி உயிர் போகும். முதன்முதலில் குச்சியால் அடிக்காமல் வன்முறை அல்லது வலியை வேறு விதத்தில் அறியச்செய்தவர்.

குற்றம்: பள்ளிக்கூட பாடங்களை ஒழுங்காக செய்யாதது முதல் நண்பர்களுடன் விளையாட்டுச் சண்டை இழுப்பது வரையிலான குற்றங்களுக்கு மேற்குறிப்பிட்ட தண்டனை கிடைத்திருக்கிறது.

}{

பெயர்: தண்டாயுதபாணி

வகுப்பு: 3 அ

சிறப்பு: சிரித்த முகம். எப்பொழுது இவரது நினைவுகள் வந்தாலும் இவரது புன்னகை மாத்திரம்தான் மனதில் பசுமையாய் தங்கியிருக்கிறது. மாணவர்கள் எத்தனை சிரமம் கொடுத்தாலும் மூங்கில் பிரம்பை மேசையில் தட்டுவதை மாத்திரமே பழக்கமாய் கொண்டவர். மாணவர்களை அடிக்காமல் இருந்ததாலேயே மனதில் நெருக்கமாகியவர்.

பள்ளியில் பணி புரிந்த நினைவாய் பிரிவுபசாரத்தில் பள்ளிக்காக இவர் வழங்கிய மணி அடிக்கும் கனமான வெண்கல(?!)த் தட்டு எங்களுக்கு பிடித்தமான ஒன்று. அதற்கு பின்பு தண்டவாள இரும்பு பாளத்தில் டொங்கு டொங்கென்ன்ற சத்தம் தீர்ந்து போய் இனிமையான இசையாக இருந்தது.

}{

பெயர்: கண்ணன்

வகுப்பு: 4 அ

சிறப்பு: இவரும் சிறு சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர். மாணிக்கம் வாத்தியார் சிறு அளவில் என்றால் இவரது அதை விட சற்றுப் பெரிது. குறைந்த பட்சம் 50 பைசா. ஆஜானுபாகுவான உடலமைப்பு கொண்ட இவரை கண்டு நிறைய்ய பயந்தது உண்டு.

தண்டனை முறை: பள்ளிக்கூடத்தின் கூரையை தாங்கிக்கொண்டிருக்கும் மூங்கில் சாரத்தில் தொங்க விட்டு கோடு போட பயன்படுத்தப்படும் கறுப்பு ரூலர் தடியால் முட்டிக்கு பின் பக்கம் ஆடுகால் சதையில் அடிப்பார். இது பள்ளிக்கூடத்தில் நான் வாங்கிய அதிக பட்ச தண்டனை.

குற்றம்: பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு நாகப்பழம், எலந்த பழம் தேடிச் செல்வது. மற்றவரின் தோட்டத்தில் அனுமதியின்றி புகுந்து பழங்களை பறித்து ஓடியது. பள்ளிக்கு பக்கத்தில் இருக்கும் வாய்க்காலில் மீன் பிடிக்க சென்றது. வகுப்புகளை முற்றிலுமாய் புறக்கணித்தது. தனியே சுற்றுவதில் இன்பமில்லையென்று துணைக்கு ஜாகிரையும் ரமேஷையும் சேர்த்து அழைத்துக் கொண்டு சுற்றியது. வீட்டில் தண்டித்தலில் திருந்தாத ஜென்மமென்று முடிவு செய்ததால் கிடைத்த தண்டனை இது.

o0o

பெயர்: சரஸ்வதி

வகுப்பு: 4 ஆ

சிறப்பு: என்னுடைய இன்னொரு அம்மா.

ஸார், டீச்சர்ன்னாலே அடிப்பாங்கங்கற நினைப்பை அடிக்காம மாத்தினவங்க. வகுப்பு முடியும் அரைமணி நேரம் முன்னாடி மாணவர்களை ஏதும் கதை சொல்ல சொல்லி அதை எல்லோரையும் கேக்க வைப்பாங்க. பெரும்பாலும் தெனாலிராமன், பீர்பால், முல்லா கதைகளை சிறுவர் மலரில் படிச்சுடறதால அதை அப்படியே ஒப்பிச்சுட்டு போயிருக்கேன். எங்க குழுமத்துல இருந்த ஏழு நண்பர்களை அறுந்த வால்கள்ன்னு பட்டம் வைச்சு கூப்பிட்டிருக்காங்க.

அரசு பணி காரணமா கண்ணன் சார் அதிகமா சுற்றுலா போயிடுறதால ரெண்டு வகுப்பையும் சேர்த்து கவனிக்க வேண்டிய சூழல் வந்தது. அது எங்களோட பொற்காலம்.

’ஏண்டா என் உயிரை வாங்குறீங்க!’ பிள்ளைகள் ஏதேனும் அதிகம் சப்தம், சச்சரவு போடும்போது சொல்லும் வார்த்தைகள். படிக்கின்ற அத்தனை பேரையும் ஆசிரியர்கள் பொறுப்பில் வைத்துக்கொள்வதாக நினைக்கும் பெற்றோரிடையே இன்னொரு தாயாக அத்தனை பிள்ளைகளையும் கண்ணும் கருத்துமாக பாடம் சொல்லிக்கொடுத்து வளர்த்தவர்.

பள்ளி முடிந்த பிறகும் தெருவில் படித்த மாணவ, மாணவிகளை கண்டால் நின்று இரண்டு வார்த்தை நலம் விசாரிக்கும் பழக்கம் இன்னும் இவரிடமிருந்து விடுபடவில்லை.

தனிப்பட்ட விதத்தில் என்னை ஒவ்வொரு இடத்திலும் நேர்த்தியாக்க நினைத்தவர். அவர் விருப்பப்பட்ட விதத்தில் நான் இருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால் என்னுடைய எல்லா உயரங்களிலும் இவருடைய ஆசிகளும் இணைந்துதான் வருகிறது. என்னிடம் சின்னச்சின்ன விசயங்களில் உணர்ச்சி வசப்படக்கூடிய பழக்கம் மாத்திரம் இவரால் மாற்ற முடியவில்லை.

நான் என்றும் நன்றிக்கடன் பட்டவர்களுள் மிக முக்கியமானவர் சரஸ்வதி டீச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர். குடும்பத்தில் ஒருவனாக நினைத்து பழகியவர்களை அத்தனை சீக்கிரம் என்னால் மறக்க இயலாது. இப்பொழுது வலையுலகம் விரிந்து விட்ட சூழலில் எங்கேனும் இதை அவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ வாசித்தால் அவரது ஆசிர்வாதங்களுக்காக இன்னும் ஒரு மாணவன் இருக்கின்றான் என்பதை தெரியப்படுத்தி விடுங்கள்.

}{

பெயர்: நமச்சிவாயம் (தலைமை ஆசிரியர்)

வகுப்பு: 5 அ

சிறப்பு: வீட்டுப் பாடங்களை பள்ளியில் அமர்ந்து உடனுக்குடன் செய்வதில் விருப்பமற்றவர். வீட்டில் சென்று பொறுமையாக அமர்ந்து எழுத வேண்டும் என்ற அறிவுரை எங்களுக்கு எப்பொழுதும் எட்டியதில்லை. தலைமையாசிரியரின் வகுப்பில் படித்ததால் மற்றவர்களுக்கு இல்லாத சில சிறப்புகள் மாணவர்களாய் எங்களுக்கு கிடைத்தது. தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழையலாம். அறையை ஒட்டியுள்ள மாடிப்படியின் அறையின் சாவி எங்களிடம் இருந்தது. எங்களது பொழுது போக்கவும், அலங்காரப்பொருட்கள் சேகரிக்கும் களஞ்சியமாக அது இருந்தது.

தண்டனை: காதை பிடித்து திருகுவது மாத்திரமே. அதிகம் கோபம் கொண்டால் தோப்புக்கரணம் அல்லது முட்டி போட சொல்வது உண்டு.

குற்றம்: பக்கத்து வகுப்புப் பெண்களை கேலி செய்தல், சில்லுக்கோடு எனப்படும் விளையாட்டில் குறுக்கில் புகுந்து கோட்டை அழித்தல் அல்லது சில்லுக்கல்லை தூக்கி ஓடி விடுதல்.

}{

பள்ளிக்கூடத்தில் சமையல் மேற்பார்வையாளராக இருந்தவரின் பெயர் ஞாபகம் வரவில்லை.

எனது நண்பனான கிருஷ்ணனை தினமும் மதியம் பாட்டு பாடச்சொல்லி ரசிப்பார். அதிக முறை கேட்டு ரசித்த பாடல் என்றெல்லாம் இல்லை. ஒரே பாடல்தான் பாட சொல்லி திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருப்பார். அது “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே”

}{

நினைவுகள் சேகரித்து வைத்திருப்பதில் என்ன சந்தோசமென்று தெரியவில்லை. இருப்பினும் எழுத ஆரம்பிக்கையில் பீறிக்கிளம்பும் நினைவலைகளில் சோகம் எதுவும் இல்லை. சந்தோசமும் இப்போதைய வாழ்வு பற்றிய அலுப்பும் மாத்திரம் தான் மிஞ்சுகிறது.