கண்ணாடி கொத்தும் பறவை

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
 • Agregar a Technorati
 • Agregar a Del.icio.us
 • Agregar a DiggIt!
 • Agregar a Yahoo!
 • Agregar a Google
 • Agregar a Meneame
 • Agregar a Furl
 • Agregar a Reddit
 • Agregar a Magnolia
 • Agregar a Blinklist
 • Agregar a Blogmarks


வெயிலின் கண்கள்

புவியில் உணவிற்கான வாழ்க்கைப்பயணத்தின் முதற் சக்கரம் சுழலத்தொடங்கியிருந்தது. ஆதாம் சிறுவிலங்குகளை வேட்டையாடி கொல்லக்கற்றுக்கொண்டான். பெரிய மிருகங்களை அச்சப்படுத்தி விரட்டத்தெரிந்திருந்தது. ஏவாள் அழகாக இருந்தாள். ஆதாம் உணவின் ருசியை அனுபவித்து உண்ணத்தொடங்கினான். பச்சைநிற இலைகளுக்கு மத்தியில் மறைந்திருந்த பழங்களை தேடத்தொடங்கினான். ப‌ற‌வைக‌ளின் திசையில் கிடைக்கும் இனித‌ண்ணீரை ப‌ருகினான். ஏவாள் அழ‌காக இருந்தாள். ஆதாம் பெரிய‌தாய் ச‌ப்த‌மெழுப்பி அது எதிரொலித்த‌லை கேட்டு ர‌சித்தான். நெஞ்சு விரிவ‌டைய‌த் தொட‌ங்கியிருந்த‌து. கைக‌ளின் ப‌ல‌ம் உண‌ர்ந்தான். ஏவாள் அழ‌காக இருந்தாள்.

அந்த குகை மிகப்பெரிய பாறைகளால் சூழப்பட்டுள்ள‌தாய் இருந்தது. உள்ளே நுழைவதற்கான வழி சற்று வளர்ந்திருந்த மரத்தினால் குறுகி இருந்தது. ஆதாம் வாசலை பெரிதாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தான். ஒரு பக்கம் பருத்ததும் மறுபக்கம் கூர்மையும் கொண்டிருந்த, மிருகங்களின் தோலை சதைகளிலிருந்து பிரிப்பதற்கான‌ உபயோத்தில் இருந்த அந்த கல் அவனுக்கு மரம் அப்புறப்படுத்தலுக்கு அத்தனை உதவியாயில்லை. ஆனாலும் ஆதாம் சோர்வடையாமல் முயற்சித்துக்கொண்டிருந்தான்.

ஏவாள் குகையினுள்ளே தன் அழகை அறியாமல் உள்ளே குகையை விட அதிகமாய் பெரிதாய் விரவியிருந்த இருட்டை வாசித்துக்கொண்டிருந்தாள். இருட்டின் மறுபுறம் புதிய உலகம் இருக்கும் என்று அவள் நம்பிக்கொண்டிருந்தாள். ஆதாம் மற்றும் ஏவாளுக்கு முழுமையாய் வியர்வை உடையாக மாறியிருந்தது. சிறிது அதிகம் சென்ற நேரத்திற்கு பின் செதில்களாகி உரிந்திருந்த‌ பட்டைகள் பிரிந்த‌ மரத்தின் பகுதியிலிருந்த ஒரு கிளை மண் தொட்டது. குகையினுள் வெளிச்சம் ஒற்றைப்புள்ளிச்சீராக‌ ஏவாளை எட்டிப்பார்த்தது. ஏவாள் மெதுவாக இருட்டிலிருந்து வெளிச்சம் நோக்கி நகர்ந்தாள்.

பாறையை தடவி சிதறிய வெயிலின் மிச்சம் பாதை தவறாமல் ஒற்றைக்கோட்டோவியமாய் மண்ணில் கிடத்தி மகிழ்ந்தது வெளிச்ச‌ப்பொட்டை. ஏவாள் வெளிச்சத்தை கையில் தாங்கினாள். விரலின் இடுக்குகளின் வழியே புதிதாய் சிகப்புப்பூ பூத்திருந்தது. ஏவாள் மகிழ்ச்சியுற்றாள். வெயில் பிளவுகள் தாண்டி விழ விரும்பவில்லை. ஏவாள் அந்த வெளிச்சத்தை விரல்களால் சிறு சிறு பின்னல்களாக மாற்றத்தொடங்கினாள். முடிவில்லாது நீண்டு விழுந்து கொண்டிருந்தது ஒளி. பின்னல்கள் போர்வையாய் ஆனது. பெரியதாய் மிகப்பெரியதாய்.

ஒற்றைத்திசையெதிர்த்து முடிவிலியாய் தொடர்ந்த வெளிச்சப்புள்ளி, ஏவாள் உதடு குவித்து கொடுத்த முத்தத்தில் அறுந்தது. வெளிச்சச்சிதறல்கள் காற்றின் வெளியில் மிதத்தலை ஆதாரம் கொண்டு விர‌வி நின்றது. மிகுதி அறியாது மீத‌ம் கொண்டிருந்த‌ அத்த‌னை வெயிலும் சிதைவின் வ‌ழி ஒட்டி நின்ற‌ முத்த‌த்தின் எல்லைத்தொட்டு தாண்டாம‌ல் சேரத்தொடங்கிய‌‌து. ஏவாள் வெளிச்ச‌ப்பின்ன‌லை போர்த்திக்கொண்டு இருட்டினுள்ளே சென்று க‌ல‌ந்தாள். வெளிச்ச‌த்தின் குளிர்ச்சியால் ஏவாளுக்கு அதிக‌ம் குளிர்ந்த‌து. குகையின் இருட்டு அவ‌ளுக்கு வ‌ழி ஒதுக்கி ஒதுங்கி நின்ற‌து. ஏவாள் திரும்பி பார்க்காம‌ல் முன்னே சென்று கொண்டிருந்தாள்.

ஆதாம் குகையினுள் வ‌ந்து பார்த்த‌போது வாச‌ல் த‌ள்ளி அதிக வெளிச்ச‌த்தை தாங்கிக்கொண்டு நின்றிருந்த‌து ஏவாளின் முத்த‌ம். குகையில் ஏவாளை தேடி கிடைக்காம‌ல் குவிந்திருந்த வெளிச்ச‌த்தில் தேட‌சிதைவுக‌‌ளில் ஏவாள் பிம்பத்தின் மிச்சங்கள் சித‌றிக் காண‌ப்ப‌ட்ட‌ன‌. கோப‌த்துட‌ன் ஆதாம் த‌லைக்கு மேல் வெயில் தாங்கிய‌ முத்த‌த்தை க‌ல்லால் சிதைத்தான். முத்த‌ம் உடைய, வெயில் பிள‌வின் வ‌ழி வ‌ழிய‌த்தொட‌ங்கி பிர‌வாக‌மாய் ஆதாமை ந‌னைத்து மூழ்க‌டித்த‌து. ஆதாம் உருகி உறைந்து நின்றான். வெயிலின் மூர்க்கத்தில் ஏவாளின் முத்தம் தொலைந்து போயிருந்தது. ஏவாள் திரும்பி வந்தபோது வெயில் சுமந்த ஆதாமின் கண்கள் மட்டும் காணக்கிடைத்தன. அதிக வெளிச்சத்திலும் கண்களின் பிரகாசத்தில் ஏவாள் மட்டுமே தெரிந்தாள். ஏவாள், ஆதாமின் கண்களுக்குள் தன்னை ஊடுருவியபோது ஆதாமின் முகம் தெரிந்தது. வெயில் பட்டு மினுமினுத்த ஆதாமின் கண்களை எடுத்துக்கொண்டு ஏவாள் மீண்டும் வெளி நடந்தாள்.

சப்தவெளிகள்

ஜெனிதாவிற்கு மீண்டும் மீண்டும் அந்த சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. தன் மௌனத்தை கலைக்க அவன் செய்த மாயம் என்ற எண்ணத்தில்தான் இவ்வளவு நேரமும் படுக்கையிலிருந்து நகராமல் அவள் இருந்தாள். ஆனால் நேரமாக ஆக சப்தத்தொனி மாறியிருந்தது விசித்திரமாயிருந்தது. அவனிடம் அவளுக்கு காதலை விட அதிகமாய் பயம் இருந்தது. காதலித்து விடுவோமோ என்ற பயம் அதிகரித்திருந்தது. நேராக எழுந்து அவனருகே சென்றாள். அந்த கண்ணாடியில் அவளது உருவம் தவிர்த்து அவன் நின்றிருந்தான். அவனையும் தவிர்த்து ஏதேனும் பிம்பம் கிடைக்குமானால் அது வெளிச்சத்தினுடையதாக இருந்தது. எத்தனை முயன்றும் அவன் மேல் விழுகின்ற வெளிச்சத்தை இவளால் தவிர்க்க இயலவில்லை. மெதுவாய் மிக மெதுவாய் வெயில் அந்த கண்ணாடியை கொத்தி அவனை இரையாக்கத் துடித்தது.

வெளிகளின் சப்த தரிசனங்கள் தொலைவுகளை குறைத்தல் குறித்த அனுபவக்கூறல்கள் காதல் பாதையின் எல்லைக்கோடான மறுகரையாக தோன்றியும் நீளும் வார்த்தைகளுடன் அவதானித்தலும் பின்னர் உருவெடுத்தலும் முற்றாய் முறை தீர்ந்து அவனை அவளை அவனை அவளை மீண்டும் அவனை அவனை அவனை மட்டும் இணைக்கச்செய்து பிணைப்பில் உள்ள சங்கிலியாய் இருந்தது.

ஜெனிதாவுக்கு அவன் மேல் காதல் வந்தது. அவனை பார்ப்பதை தவிர்த்தாள். ஜெனிதா அவனை காதலிக்க ஆரம்பித்து விட்டாள். அவன் எங்கும் அவள் கண்களுக்கு தெரிய ஆரம்பித்தான். அவனிடம் பேசுவதற்காக மௌனத்தின் துணை கொண்டு வார்த்தைகளை சேர்க்க ஆரம்பித்திருந்தாள். மனங்கொள்ளாத அளவு வார்த்தைகள் சேர்ந்திருந்தது. மனத்தில் நிலைகொள்ளாத வார்த்தைகள் மேலும் மேலும் உடல் முழுவதும் சூழத்தொடங்கின. அவளைச்சுற்றிலும் சொல்லாத வார்த்தைகள் சூழ்ந்து கொண்டன. சாப்பிடும்போது, தும்மும்போது, முகம் கழுவும்போது வார்த்தைகள் நழுவுதல் கண்டு வேதனையுற்று செயல் மறந்திருந்தாள். அதி தீவிர மௌனம் கொண்ட அவள் அறை முழுவதும் வார்த்தைகள் நிறைந்து விட்டன. அவளது மூடப்பட்ட அறைக்கதவை வார்த்தைகள் முட்டி மோதி திறக்க முயற்சித்தன.

சுயம்புகளான வார்த்தைகள் மொத்தமும் ஒன்றையொன்று உடைத்து இறக்கும் தருவாயிலும் ஜெனிதாவால் கண்கலங்கி பார்க்க முடிந்ததேயொழிய தனது வார்த்தைகளை காப்பாற்ற முடியவில்லை. உள்ளடங்கிய பழைய வார்த்தைகள் வெளியேறிய வார்த்தைகளுடன் கொண்ட காதலில் புதிய வார்த்தைகள் பிறந்திருந்தது. முடிவற்ற பொழுதாய் தொடங்கியிராத போர்க்குணமும் ராட்சச படிமமும் கொண்ட வார்த்தைச்சிதறல்கள் புதிய சந்தேகங்களை அவளுள் கிளப்பியது. ஜெனிதாவின் மௌனத்தை சுற்றி சுழலும் அதிக சப்தவெளிகளை கேட்ட அவளது தாயார் மயக்கம் கொண்டார். ஜெனிதா கையில் கிடைத்த வார்த்தைகளை அள்ளிக்கொண்டு வாசல் தாண்டுகையில் மிச்ச வார்த்தைகள் அவளைத்தொடர முடியாது தவித்தன. வாசல் நின்று வார்த்தைகளை வான் நோக்கி வீசுகையில் அத்தனையும் அவனுக்கான வசவுகளாக மாறியிருந்தது எப்படியென்று எவராலும் அனுமானிக்க முடியவில்லை. அபரிமித காதல் அர்த்தமற்று மரித்துப்போயிருந்தது. ஜெனிதா மனப்பிறழ்வுற்றவளென முடிவு செய்து கொடுத்திருந்த அவளுக்கான தனியறையில் சப்தங்கள் கிடைக்காத வண்ணம் செய்ய யாராலும் முடியவில்லை. சப்தவெளிகளில் அவளது பாதை தெளிவானதாக இருந்தது. அங்கும் அவன் இருந்தான் வெளிச்சத்தையும் கூட சேர்த்து அழைத்துக்கொண்டு...

நான் மட்டும் கடைசியாய் சப்தமாய் அவளிடம் சொல்லிவிட்டு வந்தேன், "லவ் பண்ணா சொல்லித்தொலைங்கடி!"