ஆதாம் தேசத்து அடிமைகளும்... ஏவாளின் சாவிகளும்...

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks

இருந்தும் இல்லாமல் போவதன் அர்த்தங்களை அறிவதற்கான முயற்சியில் இறங்கியபோது நனைந்துவிடக்கூடாதே என்ற அச்சத்தில் கழற்றி வைத்துவிட்டு வந்த வெட்கத்தை எடுத்து மாட்டிக்கொள்ள தேடும்பொழுதுதான் தெரிய வந்தது; வெட்கத்துடன் சேர்ந்து சில அச்சங்களும் எங்கோ புதைந்து போனது... வெட்கமில்லாத அச்சம் அவளை அணைத்துக்கொள்ள முயல்வதை அறியாமல் என்றோ விடியப்போகும் பொழுதுக்காக காத்திருக்கும் அத்தனை இரவுகளின் ஸ்பரிசத்தையும் துணைக்கழைத்து பார்வை தாண்டும்தூரம் போயும் மரக்காடுகள் பரவி நின்ற குளிரில் வெண்ணிற புகையாய் மூச்சு தாண்டுவதும் முடிவை தேடுவதுமாய் நகர்ந்த காலத்தின் பூக்களில் தளும்பி நின்ற மகரந்ததாட்களை மணம் கொண்டு நுனி ருசித்த காற்றின் நாவு ஈரம் சுமந்தது.

தூண்டுதல்களின் ஆவல் அத்தனையையும் ரசிக்க வைக்கிறது. மரக்காடுகள் தாண்டி மனிதக்காடுகளின் வசம் சேர்ந்தாள் அவள். அவனும் பார்த்து நின்றான்.

ஒப்பீடுகளும் அளவீடுகளும் அறியாத அவளிடம் நீ அழகு என்றான் அவன். வெட்கம் இழந்தவளாதலால் தலைகுனிய இயலாமல் பதில் மறுத்தாள்.

காட்டிலிருந்து வந்தவளை நோக்கி நீ என் மனையாள்... என்றான்.

அப்படியென்றால்... கேட்டாள்.

கேள்வி கேட்டவளை இறுக்கி அணைத்து கணவனாகினான்.

சந்தோஷத்தில் வானம் தொட எகிறி குதித்தவளை பூமி ரசிக்கவில்லை.

வெட்கத்தை அவளிடம் பூட்டினான். சாவிகள் அற்ற உலகத்திலே அச்சங்கள் மறுபடி ஏறிக்கொண்டன. அவள் மனிதக்காட்டினுள்ளே விதைகளை தருகின்ற முதல் மரமானாள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மெல்ல அவள் உடல் வெளிறத்தொடங்கியிருந்தது. நொடிப்பொழுதில் நிகழ்ந்த காலமாற்றமாக காட்டுப்பூக்களின் வாசனைகள் அவள் எலும்பு வரை துளைத்து நொறுக்கியது. வித்தியாசம் தேடும் மனநிலை நைந்து போயிருந்தது. கால்களின் வழியே பூமி துளைத்து நெஞ்சு வரை வளர்ந்து பாரமாய் அமர்ந்தது போல் இருந்தது. மனம் அவனை நினைத்து நிலைகொள்ளாது அலைந்தது.

"இந்தா! இந்த சாவியை பத்திரமாய் வைத்துக்கொள் " சூனியக்காரி என்று ஊராரால் அழைக்கப்பட்ட அந்த கிழவி ஈயத்தால் செய்யப்பட்ட சாவிவை நீட்டியபோது அவள் குழப்பமடைந்தாள். சூனியக்காரி மற்றும் சூன்யங்களைப் பற்றிய கதைகளுக்கு குறைவில்லாத ஊரில் பிறந்த அவளுக்கும் செவிவழி விழுந்த கருத்துக்களின் மேல் கவனம் சென்றது. இவளது சிந்தனையிலும் நுழைந்த கிழவி சொன்னாள். "பத்திரமா வச்சுக்கோ. இது உனக்கான சாவிதான். எல்லோர்கிட்டயும் ஒரு சாவிய கொடுத்துட்டேன். இது உனக்கு எப்ப வேணா தேவைப்படும்".

கிழவியின் பேச்சு புதிதாக பேசக் கற்றுக்கொண்ட குழந்தையினுடைய குரலை ஒத்திருந்தது. ஆனால் குரலின் நடுக்கம் எரிச்சலூட்டுவதாக இருந்தது அவளுக்கு.

"ஆனா எதுக்காக இது.. எனக்கு!" சூனியக்காரியாக கருதப்பட்ட கிழவி பழைய உடைகளை தமது பாரம்பரியத்துக்கு ஒத்திராத வகையில் அணிந்திருந்தது அவளுக்கு எரிச்சலூட்டுவதாக இருந்தது. ஆனாலும் கிழவியை தவிர வேறெதையும் யோசிக்காத அளவில் அவளது சிந்தனைகள் வேலியிடப்பட்டிருந்தன. அவள் மிகவும் கஷ்டப்பட்டு சிந்தனை வளையத்தை உடைத்தாள். யோசனைகள் அளவில்லாத துக்கத்துடன் காற்றின் திசையில் மிதந்து சென்றன. 'அவன்..... அவன்.... ' சிறிதும் எதிர்பாராத வகையில் வேலி மீண்டும் முளைத்திருந்தது.

"இது உனக்கு ரெண்டு விஷயத்துல உபயோகப்படும். முதல்ல உன்கிட்ட சொல்ற பொய்களை இதவச்சு நீ தொறந்து உண்மைய தெரிஞ்சுக்கலாம். ரெண்டாவது ரொம்ப முக்கியமானது"

சுற்றுமுற்றும் பார்த்த கிழவி மெல்ல அவள் காதருகில் சென்று கிசுகிசுத்தாள். "நீ சொல்ற பொய்களை இது பாதுகாக்கும். அப்படியும் உண்மை தாண்டுறா மாதிரி இருந்தா இது உருகி உன்னை காப்பாத்தும்."

சாவிகளின் கவர்ச்சி அவளை எடுக்கத்தூண்டுவதாக அமைந்திருந்தது. கைகளால் மெல்ல அதை வருடியபோது உடல் சிலிர்த்தது. அவள் முகத்தின் பிரகாசத்தில் கிழவி மகிழ்ந்தாள்.

"இனிமே இந்த சாவிகளைப் பத்திதான் உலகமே பேசும். இதை தயாரிக்க ஏவாள் பட்டபாடு யாருக்கும் தெரியாது. எந்த பூட்டுக்களும் இதன் முன் செல்லாது. இந்த சாவிகளால் ஆதாமினமே பிரமை பிடித்து அலையும். இது உனக்கான புதிய ஆயுதம். பத்திரப்படுத்து."
உடைகளின் மறைவில் சாவிகள் ஒளிக்க அவள் முயன்றபோது கிழவி தடுத்து சாவிகளுக்குரிய இடத்தில் அதனை வைத்தாள். கிழவி சாவி வைத்த இடத்தை பார்த்து வியந்த அவள் ஆச்சரியத்துடன், "இந்த சாவிகளின் பெயர் என்ன? இதை ஏன் இங்கு ஒளித்து வைத்தாய்?" என்றாள்.

திரும்பிப்போகும் நோக்குடன் கிளம்பிய கிழவியை அவள் கேள்வி தடுத்தது.

பெருமிதத்துடன் கிழவி கூறினாள், "இது ஏவாளின் சாவிகள்.!! ஏவாள் வர்க்கத்தினரின் கண்களை விட சாவிகளை ஒளித்து வைக்க சிறந்த இடம் வேறு ஏதும் கிடையாது. இதை விட பாதுகாப்பும் உனக்கு கிடையாது"

அவள் கர்வத்துடன் இமைகளை மூடி திறந்து ஏவாளின் சாவிகளை ஈரமாக்க அந்த சூனியக்கார கிழவி காணாமல் போயிருந்தாள். கிழவியின் பெயரை கேட்க மறந்ததற்கு அவள் வருந்தவில்லை. அவன் நடந்து சென்ற திசையின் காற்றை மீண்டும் ஒருமுறை நாசியிழுத்து உடலெங்கும் பூசிக்கொண்டாள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தலை வலிப்பது போலிருந்தது அவனுக்கு. சிகரெட் பிடித்தால் தலைவலி குறைவதுபோல இருக்கும். ஆனாலும் புகைத்தலை ஒத்திப்போட்டான். சோம்பலாய் கரை மீது ஏறத்துடிக்கும் அலையை மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருந்தான்.

நேற்று அவள் கூறிய வார்த்தைகள் கரையை அரிக்கும் அலையைப்போல மனதை அரித்துக்கொண்டிருந்தது.

"அப்ப நீ என்னை விரும்புனது. நாம ரெண்டு வருஷமா லவ் பண்றது. இதெல்லாம் பொய்ன்னு சொல்ல சொல்றியா" அவனால் இன்னும் நம்ப முடியவில்லை.

"புரிஞ்சுக்க முயற்சி செய்ப்பா. இன்னும் நான் உன்னை லவ் பண்றேன். ஆனா நீ இப்ப இருக்கற நெலமையில... என்னால இன்னும் ரெண்டு வருஷம் கூட காத்திருக்க முடியும். ஆனா எனக்கு பின்னாடி என் தங்கச்சி அவளையும் யோசிக்க வேண்டியிருக்குது. கோபம் வரும்தான். இல்லைன்னு சொல்லல. அதுக்காக நீயும் இப்படியே இருந்துடாதே. உனக்குன்னு வேற யாராவது பொறந்திருப்பாங்க, அது நானில்லைன்னு நெனைச்சுக்க."

கோபத்துடன் கத்திய அவன் மேல் அத்தனை பேரின் பார்வைகளும் நிலைத்து நின்றது. அவளுக்குள் பொங்கிய கோபத்தை அடக்கிக்கொண்டு அடிக்குரலில் அவனருகில் மெல்ல கூறினாள். "அண்ணன்னு சொல்லி அசிங்கப்படுத்துறதுக்குள்ள போயிடு." ஏவாளின் சாவிகள் சூட்டுடன் காணப்பட்டன.

தனிமையில் அவனுக்கு சிரிப்பு வந்தது. ஆதாமின் வாரிசு தனியே சிரித்துக்கொண்டிருந்தான். ஏவாளின் சாவிகளைத்தேடி பொங்கி வந்த கடலலைகளுக்குள்ளே ஓடினான்.