நிறப்பிரிகைகள்

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks

"உயரங்களைப் பார்த்து பயங்கொள்ளக்கூடாது. அது நம்மை அடுத்த எல்லைக்கு கொண்டு செல்லும் கடைசிப்படி" இது நான் ஒரு முறை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள நினைத்ததைப்பற்றி சொன்னபோது அலட்சியமாய் அவள் உதிர்த்த வார்த்தை முத்துக்கள். சேகரித்து கோர்த்து வைத்து படிமங்களாக்கி மீண்டும் உதிர்த்த போது அவளது அத்தனை வார்த்தைகளும் புதியதாய் மாறி நுரைத்து வாசனை பூத்திருந்தன. அன்று நான் எரித்திருந்த சிகரெட்டின் புகைகூட உயிர்கொண்டு மீண்டும் அந்த வார்த்தைகளின் நடுவில் எழுந்து வந்ததும் என்னை அதிகம் ஆச்சரியப்படுத்தியது.

பெண் என்ற படிகவழி, உயிரின் ஒற்றை வெளிச்சப்புள்ளியை உடைத்தெறிந்து வண்ணங்கள் சேர்த்து‌ சிதறல்களின் மிச்சம் வழிந்தோடும் இடங்களிலெல்லாம் காதல் இருக்கிறது இன்னமும் சாகாமல். நான் மட்டுமேன் செத்துப்போக துடிக்கின்றேன். . விடை அவளுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் அவளால் என்னை கொடூரமாய் கொல்ல முடியவில்லை. கொடூரம் என்றால் அத்தனை சாதாரணமாய் இல்லை. அந்த விபரீதங்களை வார்த்தைகளில் துடைத்து மெருகேற்றி பளிச்சிட வைக்க முடியாது. உணரவேண்டும். உணர்வுகள் என்றால் உண்மையில் நீங்கள் இந்த எழுத்துக்களோடு கலந்து உள்ளே சென்று அனுபவிக்க வேண்டும். என் தலையிலிருந்து சிதறிய ரத்தம் மேட்டிலிருந்து நழுவி மெல்ல என் கண்களை நோக்கி வரும் சமயம் அதைப்பார்த்து கண்களை இமைக்க முடியாமல் அருகி என் பார்வையை ரத்தமே மறைத்து தேங்கி நிற்பதை உங்களால் உணர முடிகிறதா...

இதனாலெல்லாம் என்னை மனம் பிறழ்ந்தவனென்று முடிவு செய்து ஒதுங்கிப்போய் தள்ளிநின்று ஜாடைகள் காட்டவேண்டாம். ஏனெனில் விருப்பங்கள் அற்றுப்போதல் அல்லது தனிமை கெட்டுப்போவதே பிறழ்வின் முதல் செயலாகும். எனது விருப்பமாக உங்களிடம் காட்டியதாக நினைத்துக்கொண்டிருக்கும் தனித்து வளர்ந்த சிறுசெடியின் பச்சை ஒதுக்கி மையச்சுற்றுகளில் வெளுத்த மஞ்சளை கொண்டு வெள்ளை வளையத்துடன் முகம் காட்டும் ஒற்றைப்பூவின் சிறு இதழை பிய்த்தெடுத்து நான் முகர்ந்து பார்ப்பதை நீங்கள் பார்த்திருந்தால் முடிவு செய்திருக்கலாம் நான் பைத்தியமென்று. அல்லது விரலின் நுனிவரை நகத்தை வெட்டியெடுத்து மேலே பூத்திருந்த ரத்தத்தை மெல்ல பத்திரமாய் அழுக்குப்படாத வெள்ளைக்காகிதத்தின் அடியில் ஒட்டி பூ வரைவதை பார்த்திருந்தால் நீங்கள் நம்பலாம் நான் பைத்தியமென்று. அதுவுமில்லையேல் அலங்காரமான மரங்களை சாகடித்து பூக்களை புதிதாய் செதுக்கிய இரட்டைக்கதவின் நடுவில் நடுவிரலை நசுங்கச்செய்து கருத்து ரத்தங்கட்டிப்போன வலியின் நிமிடங்களுடன் நான் ஆதரவு தேடும்போது நீங்கள் சத்தியமாய் நம்பலாம் நான் பைத்தியமென்று. ஏனென்றால் அவளிடம், இந்த நிகழ்வுகளின் மூலங்களை அறியாத அவளிடம் நான் இதைச்சொன்னபோது உனக்குப்பைத்தியம்டா என்றுதான் சொன்னாள். நானும் நம்பிவிட்டேன். நான் பைத்தியமாய்த்தான் இருக்கின்றேன் என்று.

உடனே அவள் சிரித்தாள்

நானும் சிரித்தேன்

பிறகு அவள் அழுதாள்

நான் அழுதேன்

நான் அழுதேன்

அவள் சிரித்தாள்

இன்னும் நான் அழுதுக்கொண்டே இருக்கிறேன்

அவள் எங்காவது கண்டிப்பாய் சிரித்துக்கொண்டிருப்பாள். ஏனெனில் நான் பைத்தியமாகியிருக்கிறேன். நீங்கள் இனி என்னை நம்பவேண்டாம். நானே சொல்லிவிட்டேன். நானும் மனம் பிறழ்ந்து வாழ்க்கையின் இடுக்குகளில் என்னை ஒளித்துக்கொள்ளும் விருப்பங்கள் அற்றுப்போன திசையை நாடிச்செல்லும்முன் சொல்லிச்செல்கிறேன். நான் பைத்தியமாகிவிட்டேன் என்று.

உயரங்களின் திசையில் எந்த கணிப்பும் இன்றி தோற்றுவிக்கப்பட்டு நிலைகொள்ளாது காற்றில் அலைவது போல் நான் அந்த உயரக்கட்டிடத்தில் நிற்கின்றேன். என்னைத் தவிர்த்த அத்தனை குரல்களும் காற்றில் என்னை வரவேற்று ஆர்ப்பரிக்கின்றன. எங்கோ யாருக்கோ கொடுத்த தவிர்த்த அத்தனை முத்தங்களும், காதல்களும் இதே காற்றில் அலைந்து என்னைப்பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு அடுத்த வேதனையை பார்ப்பதற்கு மீண்டும் நகர்ந்து செல்கின்றன. இன்னும் ஒரு அவகாசம் மிச்சமிருக்கிறது. எனது சாவைப்பற்றி நான் யோசித்துப்பார்க்க வேண்டும். நின்ற அவதானிப்புகள் என்னை மட்டும் சாத்தியப்படுத்திவிட்டு நகர்ந்து கொண்டேயிருக்கின்றது. நான் மட்டுமே நிஜம். நான் என்னையும் தவிர்த்துவிட்டு மீண்டும் யோசித்துப்பார்த்தும் நான் மட்டும் தனியே இன்னும் மேலேதான் நின்று கொண்டிருக்கிறேன்.

கீழே விழுதல் என்று சொல்வதை நான் தவிர்க்கிறேன்... மீண்டும் மீண்டும்... எல்லோரின் வாக்கிய அமைப்புகளும் என்னை ஏதோ ஒரு விதத்தில் மாற்றிவிட்டு அவை மட்டும் மீண்டும் பாம்பின் நாவாய் மாறி உள்ளே புகுந்து கொள்கின்றன. நான் விழுந்துவிட்டேன் என்று யாரும் இனி தயவு செய்து உச்சரிக்க வேண்டாம். அது சத்தியமாய் தவறானது. மழை பெய்வது போல திசைகளால் ஆன உலகத்தின் பாதையில் பூமியை நோக்கி நகரத் தொடங்குகின்ற மற்றுமொரு திசைகாட்டி மனத்தோடு பயணிக்கவே விரும்புகின்றேன். என் எல்லாப்பயணமும் எப்போதும் இப்படித்தான் ஆரம்பித்து மெல்ல நகர்ந்து ஏதாவது ஒரு புள்ளியில் மாட்டி செத்துப்போகின்றது.

புவியின் திசை நோக்கிய புதிய பயணத்தின் முடிவை சுவாரஸ்யப்படுத்திக்கொள்ள வேண்டிய அத்தனை சந்தர்ப்பங்களையும் நான் வார்த்தைகளை இரைத்து வீணடித்துக்கொண்டிருக்கின்றேன். இன்று மழை வரும் போல் தெரிகின்றது. கண்டிப்பாக மழை வந்துவிட்டால் எனது மரணம் மழை நிற்கும் வரை ஒத்தி வைக்கப்படும். மழையில் நனைவதும் எனக்குப்பிடிக்குமென்பதால் அதையும் ரசித்துக்கொள்ள மனம் விரும்புகின்றது. இப்போது நான் மழையில் நனைவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் மழையில் குளிர்கையில் கால் நழுவி என்னையறியாமல் கீழே விழுந்துவிடுவேனோ என்ற அச்சம் புதிதாய் உண்டாகிறது. ஏனெனில் என் மரணம் என் விருப்பத்திற்கிசைந்து நிகழ விரும்புவேனே ஒழிய மழையின் உத்தரவிற்கிணங்கி அல்ல.

நான் கீழே விழும்போது கண்களை மூடிக்கொள்ளாமல் விழ ஆசையாக இருக்கின்றது. சத்தமும் எழுப்பக்கூடாது என்ற எண்ணமும் மனதில் ஓடுகின்றது. அந்த கைப்பிடி அற்ற மொட்டைசுவரின் மேல் நிற்கும்போது மூத்திரப்பை நிரம்பி விட்டாற் போல தோன்றுகிறது. எனக்கு வேண்டியவர்கள் எவரும் கீழே நடந்து தொலைக்கக்கூடாது என்று கடவுளை வேண்டிக்கொண்டு இன்னும் அங்கேயே நின்றிருக்கிறேன். கடைசியாய் கடிதமோ, கவிதையோ எழுதாமல் சாகிறோமே என்ற வருத்தம் கொஞ்சம் இருக்கிறது. இன்னும் மழை வந்தபாடில்லை.