போங்கடா! நீங்களும்.... உங்க காதலும்......!!

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks


எனது நண்பனொருவனிடம் நான் எழுதிய பதிவுகளை கொடுத்து உனக்கு பிடித்த பதிவு ஏதும் இருந்தால் கூறு என்று சொல்லியிருந்தேன். பொறுமையாக எல்லாப்பதிவுகளையும் படித்து, 'யார நெனச்சுடா இந்த கவிதயெல்லாம் எழுதுன!' என்றான். பின் அவனுக்கு தெரிந்து எனக்கு பிடித்தமான எல்லாப் பெண்களின் பெயர்களையும் கூறி இவளா.. இவளா.. என்று கேட்டான். கடைசி வரை சரியான பெயரை அவன் கூறவில்லை. நானும் அவள் பெயரை சொல்லவில்லை. ஆனாலும் ஒவ்வொரு பெயராய் அவன் கூறும்போது எனக்கு கூச்சமாகவும் கஷ்டமாகவும் இருந்தது. காதல் தோல்வி எத்தனை கொடிது; ஒருத்தியும் என்னை காதலிக்கவில்லை!


நின்று பெய்யாது
சென்ற மழையாய்
அத்தனை மேகத்திலும்
காற்று
காதலாய் உள்ளது!


மாதங்களில் அவள் மார்கழி போல் தினந்தோறும் எனக்கு மாலைப்பொழுது பிடிக்கும். அவளை அதிகம் மாலைநேரங்களில் மட்டுமே கண்டதாலோ என்னவோ, மாலைப்பொழுதின் மேல் எனக்கு தீராத மயக்கம் உண்டு. அந்த நேரங்களில் தியானம் போல இலக்குகளில்லாத தொலைவு வரை நடந்து சென்று கொண்டிருப்பேன். அந்தி சாயும் நேரத்தில் வீசும் காற்றுக்காகவும் சூரியன் மேற்கில் மறையும் காட்சிக்காகவும் கூடவே அவள் தரிசனம் கிடைக்கும் என்பதற்காகவும் குடந்தையில் மகாமகக்குளக்கரையில் சென்று அமர்வதுண்டு. அருகிலேயே மகளிர் கல்லூரியும் உண்டு. பூக்களைப்போன்ற பெண்கள் கூட்டமாக கடந்து செல்லும்போது கூச்சப்பட்டு தலை குனிந்தால் விழியில் குளத்தின் சலனங்கள் பட்டுத்தெறிக்கும். அருகில் மிக அருகில் அவர்களிடமிருந்து எழுகின்ற பேச்சுக்களும் சரசரப்புகளும்... முடிக்கப்படாமல் வார்த்தைகள் கலைத்துப் போடப்பட்ட கவிதையின் ஞாபகமும், ஒரு வார்த்தைக்காக காத்திருக்கும் நேரத்தில் கிடைத்த புத்தகத்தை வாசித்த திருப்தியும் தரும் அந்த பெண்களின் வருகை.


அலைபாய்கின்ற மனது

எப்போதும்

தப்பிப்பதையே சிந்திக்கிறது.

எதிலிருந்து

தப்பிப்பது

என்பதை மறந்து...!


கனவுபோல் இருந்த வாழ்க்கையில் சுலபமாக எழுதிய கவிதைபோல் ஒருத்தி வந்தாள். புதியன அறிதலும் அறிவன காணலும் இயல்புபோல் காதல் என அதற்கு பெயர் சூட்டி ஒரு நீண்ட பிரிதலுக்கான ஒத்திகை காண்பதுபோல் மூச்சு முட்ட முத்தம் கொடுத்து போய் வருகிறேன் என்று போனவள் இன்று வரை திரும்பி வரவேயில்லை.


வானில் பறக்கிறது

சிறகுகளாய் காதல்!

சுமைகளாய் கண்கள்!!


எனக்கு தனிமை பிடித்துப்போன அளவிற்கு ஒற்றைரோஜாவையும் பிடிக்கும். ஆனால் அவளுக்கு நெருக்கிச்சரம் கோர்த்த மல்லிகையென்றால் இஷ்டம். அமைதி என்றால் என்னவென்றே தெரியாத புயலின் தங்கையவள். மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்த அளவுக்கு ஏமாற்றங்களை தாங்கும் சக்தி இல்லை என்று உணர்ச்சிப்பூர்வமாக அவளிடம் கூறியபோது ஹார்லிக்ஸ் குடிச்சுப் பாரேன். சக்தி கிடைக்கும் என்று சென்ட்டிமென்ட்டை காலி செய்துவிட்டு போனவள். ஒரு தோழியை என்னிடம் அறிமுகம் செய்தநாளில், "என்னடி நான் வெஜ் பார்ட்டி மாதிரி இருக்குது" என்று அவள் காதில் தோழி கிசுகிசுத்தபோது, நீ "சேச்சே! இது சுத்த சைவம்டி" என்று மெல்ல சொல்லி அதிர அதிர சிரித்த சிரிப்பில் நான் தயிர்சாதமாகியிருந்தேன். அவளது அதிக கோபங்களும் எனது ஆண் என்ற அகங்காரமும் எங்களிருவரையும் பிரித்து வெகுதூரத்தில் வைத்திருக்கிறது.


தொலைதூரங்களை

காண்கின்ற

கால‌த்தின் க‌ண்களில்

காத‌ல் வாழுமா.. சாகுமா...!


பிறிதொருத்தி, சிறந்ததாய் நான் நினைத்த எனது சில காதல் கவிதைகளை படித்து பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சுடன், 'நீ காதலையும் பெண்ணையும் ஐந்து வரிகளுக்குள் அடக்க நினைத்து தவறுதலாய் உன்னைப்பற்றிய குறிப்புகளைத்தான் உன் கவிதைகளில் எழுதியிருக்கிறாய். எந்த பெண்ணும் எவரின் காதலும் சிறுகுறிப்புகளுக்குள் அடங்கி விடுவதில்லை. மன்னித்துக்கொள்.. எனக்கு உன் கவிதைகள் பிடிக்கவில்லை' என்று அவள் சொன்ன கணத்தில் எனக்கு அவளையும் பிடித்துப்போனது. அடுத்த நிமிடம் உனக்கு பிடித்த கவிதை என்று கூறி நான் காகிதத்தில் எழுதிக்கொடுத்தது அவளுக்கு பிடித்திருந்தது. அதில் நான் எழுதியது 'காதல்'. ஆயினும் அவள் தன் திருமணத்திற்கு என்னை அழைக்காததைப்பற்றி நான் அதிகம் கவலை கொள்ளவில்லை. அன்று இரண்டு பாட்டில் பீருக்கு காதல்நோய் தீர்ந்திருந்தது.


வானவில்லை தொட்டு வந்த

நட்சத்திரத்தில்

வண்ணங்கள் சேர்ந்துவிட்டன..

நட்சத்திரம்

காணாமல் போய்விட்டது.


நேற்று முன்தினம், குளிரில் தனிமையை நடையில் தொலைத்துவிட எண்ணி சாலையில் செல்லும்போது அவள் எதிரில் நின்றிருந்தாள். நான் நேசித்த அத்தனை பெண்களின் ஜாடைகளும் அவள் உருவத்தில் ஒத்துப்போயிருக்க நான் என்னையே திட்டிக்கொண்டு நகர்ந்தேன்... "போங்கடா! நீங்களும்.... உங்க காதலும்......!!"
இருந்தும் எதற்கும் இருக்கட்டுமென்று புன்னகையை சிந்தி வைத்து கடந்தேன்.


அருகாமைகள்

சிறகாக

சருகாக

சில நேரம்

பறவையாகவும்...

ஆனாலும்

அவ்வப்போது

முகமூடிகளை கழற்ற முடிவதில்லை...!