தீட்டு

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks

மரண அவஸ்தை என்ற சொல்லின் முழு அர்த்தத்தை அந்த நிமிடத்தில் உணர்ந்து கொண்டிருந்தான் ராஜா. அவனுக்கு அவன் மேலேயே கோபம் உண்டானது. தன் விதியை நொந்தவாறே சாவி விழுந்த ஓட்டையையே பார்த்துக்கொண்டிருந்தான். பெல்ட் அவிழ்ந்து இருப்பதையோ பேண்ட் ஜிப் போடாமல் சரிந்து இருந்ததையோ கவனித்து சரிசெய்யும் மனநிலை அவனிடம் இல்லை. "என் புத்தியை செருப்பால அடிச்சுக்கணும்" வாய்விட்டு சற்று சத்தமாகவே திட்டிக்கொண்டு பேண்டை மாட்டி, பெல்டை சரி செய்தான்.


பாஸ்க‌ருட‌ன் இரவுக்காட்சிக்கு சினிமாவுக்கு செல்வ‌து என‌ முடிவான‌ பிற‌கு ஊரை விட்டு பதினான்கு கிலோமீட்ட‌ர் தூர‌ம் த‌ள்ளியிருக்கின்ற‌ இந்த‌ சினிமா தியேட்ட‌ருக்கு வ‌ந்த‌து முத‌ல் த‌வ‌று. அதிலும் நேரமாகிவிட்டதால் பாஸ்க‌ரின் பைக்கில் செல்ல‌லாம் என்று அவனுக்கு யோச‌னை தந்த‌து அடுத்த‌ தவ‌று.


தியேட்ட‌ருக்கு வ‌ந்து சேர்ந்த‌ பின் ராஜா, பைக்கிலிருந்து இறங்காமல் அதை தானே ஸ்டாண்டு போட்டு சாவி எடுத்து வ‌ருவ‌தாக‌ கூறி பைக்குக‌ள் நின்ற‌ இட‌த்தில் அதை சரியாக‌ நிறுத்தி விட்டு சாவியை எடுத்து மேல் சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு தியேட்டர் உள்ளே நுழையும் வ‌ரை எல்லாமே ச‌ரியாக‌த்தான் இருந்த‌து. அவ‌ச‌ரமாய் வயிற்றை கலக்குவ‌து போல‌ கோபாலுக்கு உண‌ர்வு வ‌ர‌, பாஸ்க‌ரிட‌ம் சொல்லிவிட்டு அந்த‌ தியேட்ட‌ரின் க‌ழிவ‌றைப்ப‌குதிக்குள் நுழைந்தான். ஏற்கனவே பலமுறை வந்த இடம்தானென்றாலும் அந்த குடலைப்பிடுங்கும் நாற்றம் இன்றும் அப்படியே இருந்தது. இருவர் சிகரெட் பிடித்தபடியே சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தனர்.


தனியாக கதவு வைத்து நான்கடி இடம் விட்டு கட்டப்பட்டிருந்த மூன்றாவது கழிப்பறையில் நுழைந்து கதவை சாத்திவிட்டு மேடையில் கால்வைத்து பேண்டை அவிழ்த்து அமர்ந்து சிறுநீர் கழிக்கும் நேரத்தில் அந்த விபரீதம் நிகழ்ந்தது.


சட்டைப்பையிலிருந்த சாவி கீழே குனிந்த நேரத்தில் தவறி பீங்கான் குவளையில் விழுந்தது. சிறுநீர் ஓடிக்கொண்டிருந்த பாதையில் வழுக்கியபடி சென்று பார்வையிலிருந்து மறைந்திருந்தது. அனிச்சை செயலாய் சாவி கக்கூஸ் ஓட்டையில் விழுந்தது அவனது மூளைக்கு எட்டும்முன்னரே பதறி எழுந்தான். சாவி தொலைந்து விட்டது அல்லது தொலைக்கப்பட்டு விட்டது.


"சரியான பைத்தியக்காரன் நான். கீழே விழுந்ததுமே எடுத்திருக்கணும்"



தன்னையே நொந்து கொண்டான் ராஜா. சாவி விழுந்த நேரத்தில் மூத்திரத்தின் மேல் கையை வைப்பது அவனுக்கு அசிங்கமாய் இருந்ததோ என்னமோ. கொஞ்ச நேரத்திற்கு முன்பிருந்த வயிற்று வலி சுத்தமாய் நின்று போயிருந்தது.


சிறுநீரின் மேல் தண்ணீரை ஊற்றிவிட்டு ஓட்டையையே கவனமாக உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். சாவி இல்லாமல் பைக்கை எடுக்க முடியாத கவலையும், பாஸ்கரிடம் வசவு வாங்க வேண்டிய இழவும் சேர்ந்திருந்த படியால் கொஞ்சமும் யோசிக்காமல் கக்கூஸ் ஓட்டைக்குள் கையை விட்டு சாவியை தேடத்தொடங்கினான். சாவி கிடைக்கவில்லை.



அவனது நிலைமை அவனுக்குள் மிகுந்த அருவெறுப்பை உண்டு செய்தது. கையை ஓரடி உயரத்தில் கட்டப்பட்டிருந்த தண்ணீர் குழாயில் நன்கு சுத்தம் செய்து கொண்டு உடைந்த மனதுடன் வெளியேறினான்.


கழிவறைப்பகுதி வெளியே சிகரெட் பிடித்துக்கொண்டு நின்றிருந்த பாஸ்கர், ராஜாவைக் கண்டதும் "சரி வா.. டைமாகுது. உள்ளே போகலாம்" என்று கூறியவாறே சிகரெட்டை மண்தொட்டியில் தூக்கியெறிந்துவிட்டு நகர ஆரம்பித்தான்.


கலங்கிய குரலில் ராஜா, "பாஸ்கர்.."


திரும்பிப்பார்த்த பாஸ்கர், "என்னடா.."


"பைக் சாவி கக்கூஸ்ல வுழுந்துடுச்சுடா"


பாஸ்கரின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது. பதட்டமாய் "என்னடா சொல்ற!"


"ஆமாண்டா. உக்கார்றப்ப தவறி பைக் சாவி கக்கூஸ் உள்ள விழுந்துடுச்சுடா"


அவசரமாக பாஸ்கர் ராஜாவை தாண்டி கழிவறைப்பகுதிக்குள் நுழைந்தான். பின்னால் ஒன்றும் செய்யத்தோணாமல் ராஜாவும் தொடர்ந்தான். குரலின் கலக்கம் நழுவாமல் பாஸ்கர் ராஜாவிடம், "எந்த பாத்ரூம்டா"


ராஜா பொறுமையாக மூன்றாவது அறையை காட்ட அதற்குள் பாஸ்கர் நுழைந்திருந்தான். ராஜா கழிவறையின் வாசலில் பின்னால் நின்றிருந்தான்.


பாஸ்கர், "என்னடா செய்யறது?"


ராஜா, "தெரியலைடா. நானும் டிரை பண்ணிப்பார்த்தேன். ஆனா கிடைக்கல"


பாஸ்கரின் முகத்தில் அருவறுப்பு ஆரம்பமாக தொடங்கியிருந்தது. ஒன்றும் பேசாமல் திரும்பி தியேட்டரின் உள்ளே நுழைந்தான். ராஜாவுக்கு பாஸ்கரிடம் எதையும் கேட்கவும் பயமாக இருந்தது. கண்டிப்பாக கெட்டக் கெட்ட வார்த்தையில் திட்டுவான். தியேட்டர் உள்ளே நுழையும் இடத்திலேயே அமர இடம் கிடைக்க பாஸ்கர் அதில் சென்று தலையை கையால் தாங்கி பிடித்துக்கொண்டு அமர்ந்தான். அவனது அருகிலேயே ராஜாவும் அமர்ந்தான்.
மெல்ல மெல்ல கூட்டம் சேரத்தொடங்க.. படம் திரையில் ஓடத்தொடங்கியது. முதல் பாடல், படம் ஆரம்பித்த பத்து நிமிடத்தில் ஆரம்பிக்க பாஸ்கர் எழுந்து வெளியே சென்றான். அவன் வெளியேறுவதை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் ராஜா. பாட்டு முடிந்தும் பாஸ்கர் இருக்கைக்கு வந்து சேராமலிப்பதை கண்ட ராஜா, பாஸ்கரை தேட, ராஜாவுக்கு எதிர்ப்பக்கத்தில் மேலிருந்து மூன்றாவது வரிசையில் ஆறாவதாய் குனிந்தபடி அமர்ந்திருப்பது தியேட்டரின் மெல்லிய வெளிச்சத்தில் கண்ணில் பட்டது.


ராஜாவுக்கு நாக்கு பிடுங்கிக்கொண்டு சாகலாமா என்று தோணியது. சாவியை தொலைத்த அச்சத்தை விட கக்கூசுக்குள் கையை விட்ட அவமானம்தான் அவனை பிடுங்கி தின்றது. அபிமான நடிகரின் படம் அவனுக்குள் எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தவில்லை. சினிமா எப்போது முடியும் என்று எதிர்ப்பார்த்து அமர்ந்திருந்தான். இடைவேளை விடும் சமயத்திலும் ராஜா வெளியேறவில்லை. மெல்ல தனது கையை தூரத்தில் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். வாந்தி வரும் போலிருந்தது. எப்படி தன்னால் கையை உள்ளே விட முடிந்தது என்று அவனால் அனுமானிக்க முடியவில்லை.


படம் இரவு ஒன்று ஐம்பதை தொடும் சமயத்தில் முடிந்தது. அனைவரும் எழுந்து கலைந்து போகத்தொடங்க பாஸ்கரும் வெளியேறியிருந்தான். ராஜா அனைவரும் சென்ற பின்னர் மெதுவாக தியேட்டரை விட்டு வெளியேறினான். வண்டிகள் ஒவ்வொன்றாக கிளம்பிக்கொண்டிருக்க பாஸ்கர் தியேட்டரின் வாசலிலேயே நின்றிருந்தான்.


ராஜா அவனருகே வந்தபின், "வண்டிக்கு சைடு லாக் போட்டியா?"
அந்த புது மாடல் பைக்கில் சைடு லாக் எப்படி போடுவது என்று ராஜாவுக்கு தெரியாததால் தெரியலைடா என்றான். பாஸ்கருக்கு ராஜாவின் மேல் எரிச்சல் அதிகமாகிக்கொண்டே வந்தது.


அனாதையாக நின்று கொண்டிருந்த பைக்கின் அருகில் சென்று ஹேண்டில் பாரை திருப்பி பார்க்க செல்லபிள்ளையாக திரும்பி நின்றது. பாஸ்கருக்கும் மூச்சு வந்தது. ஸ்டாண்டை விடுவித்து பாஸ்கர் பைக்கை தள்ளிக்கொண்டு போவதை தியேட்டர் காவலாளி ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டிருந்தார்.


இரண்டு கிலோமீட்டர் தூரம் கூட பாஸ்கரால் வண்டியை தள்ள முடியவில்லை. தூக்கம் ஒருபுறம். வண்டிசாவி தொலைந்த எரிச்சல் ஒரு புறமாய் இருக்க, கை சோர்வில் பைக் ஒரு புறமாய் சாய்ந்து விழ பார்த்தது.



தடுமாறி பைக்கை சரிசெய்ய, அருகில் வந்து கொண்டிருந்த ராஜா, "கொடுடா.. நான் தள்ளிட்டு வர்றேன்" என்றான். சிடுசிடுப்பான குரலில் "அதெல்லாம் ஒண்ணும் வேணாம்" என்று பதில் சொன்னாலும் அவனால் வண்டியை தள்ள முடியவில்லை. வண்டியை சைடு ஸ்டாண்டு போட்டு சரித்து நிறுத்திவிட்டு பாக்கெட்டிலிருந்த கடைசி சிகரெட்டை பற்றவைத்து புகையை நன்கு உள்ளிழுத்து வெளியேற்றினான்.


ராஜா பாஸ்கரிடம் ஒன்றும் பேசாமல் வண்டியை சைடு ஸ்டாண்டு எடுத்துவிட்டு விட்டு தள்ளிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். சிகரெட் பிடித்தவாறே பின்னால் பாஸ்கரும் நடக்கத்தொடங்கினான். ராஜா கைப்பிடியை பிடித்து வண்டியை தள்ளிக்கொண்டு போவது பாஸ்கருக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. ஆனாலும் இருவரும் ஒன்றுமே பேசாமல் நடந்து கொண்டிருந்தனர். ஊர் வந்து பாஸ்கரின் வீட்டில் பைக்கை ஏற்றி விட்டு பேசாமலேயே திரும்பி நடந்தான் ராஜா. ராஜாவின் மனதில் சாவி தொலைத்த அதிர்ச்சி மெல்ல குறைந்திருந்தது. அசிங்கத்தில் கையை விட்ட அதிர்ச்சி மட்டுமே பாஸ்கருக்கு தெரிந்தது வடுவாகி அமர்ந்தது.


இந்த சம்பவத்திற்கு பின் நிகழ்ந்த இரு நிகழ்ச்சிகளில் முதலாமானது..



பாஸ்கர், ராஜாவிடம் பேசுவதை முழுமையாக நிறுத்தியிருந்தான். அவனது பைக்கின் ஹேண்டில் பாரில் கையை வைக்கும் இடத்தில் இருந்த அழகான பூப்போட்ட ரப்பர் கைப்பிடியை அன்றிரவே பிளேடை கொண்டு அறுத்து தூக்கியெறிந்திருந்தான்.


அடுத்தது.. இப்போதெல்லாம் ராஜா தன் இரண்டு வயது மகன் சுப்பிரமணி ஆய் போனால் தானே தூக்கிக்கொண்டு போய் சுத்தம் செய்து விடுகிறான். வீணாய் மனைவியை சத்தம் போட்டு அழைத்து வேலை கொடுப்பதில்லை.