முனியாண்டி விலாஸ் - 4

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks

முனியாண்டி விலாஸ் - 1
முனியாண்டி விலாஸ் - 2
முனியாண்டி விலாஸ் - 3

முனியாண்டி விலாஸில் இதுவரை..

எல்லாம் புனைவு ஒன்று எழுத ஆரம்பித்தப் பொழுதில் ஆரம்பித்திருந்தது. புனைவில் கடைசி மனிதனாய் ஒருவனை உருவாக்கி அலையவிட்டு, போதாமல் செத்துப்போயிருந்த ஒரு மூலப்பிரதியில் மூன்று கதாபாத்திரங்களை இணைத்திருந்தேன். பெயர்கள் என்னும் எச்சங்கள் மேல் எனக்கு விருப்பம் இல்லாததால் யாருக்கும் எங்கும் பெயர் சூட்டவில்லை. அவன் இவன் என குறிப்பிட்டுச் சொல்ல இரண்டு ஆண் மற்றும் இவள் என்று சுட்டிக்காட்ட ஒரு பெண். அது போதுமானதாயிருந்தது அந்தக்கதைக்கு. முக்கோண காதல் சரித்திரத்தில் ஏற்பட்ட குழப்பமாக காதல் தோல்விக்கு பயந்து அவன் இவனைக் கொல்ல, இவள் இவனை வெடிகுண்டு வீசி அழித்தாள். இவளுக்கு பெயர் சூட்டுவதன் மூலம் மூலப்பிரதியில் பிரித்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் ஜெனிதாவாக்கினேன். ஆனால் அங்கு அலையும் எல்லா இவள்களும் ஜெனிதாவாகிப்போன கொடுமையால் இனி..........

o0o0o0

மூலப் பிரதியின் முதல் பக்கத்தில் மெல்லியத்தூறலாய் பெய்யத்தொடங்கும் மழை நாற்பது பக்கங்கள் வரை தொடர்ந்திருந்தது. மழையின் அடர்வுகளில் மனிதர்கள் ஒளிந்திருந்தனர். எழுத்துக்கள் மழையின் சாரலை உள்வாங்கி மனிதர்களை ஈரமாக்கியிருந்தது. பொறுமையாய் ஒவ்வொரு வாக்கியத்தையும் ஒவ்வொரு எழுத்துக்களையும் படிக்க ஆரம்பித்தேன். புத்தகத்தின் ஏதோவொரு புள்ளியில் என்னை உட்கொண்டு செல்லும் வாயில் கிடைக்கும். அதற்காக ஆழ்ந்திருந்தேன். ஒவ்வொரு பக்கமாக பிரட்டப்பட்டது. இருபத்தி ஐந்தாம் பக்கத்தில் ஆழ்ந்திருந்த போது நான் நனைய ஆரம்பித்தேன்.

அடர்ந்த மழை என்பதை எழுத்துக்களில் படிப்பதை விட அந்த அனுபவத்திற்குள் புகுவது எத்தனை சிரமம் என்பதை உணரத்தொடங்கியும் வீணானது. இன்னும் பதினைந்து பக்கங்கள் எழுத்துக்களோடு எழுத்துக்களாக ஓட வேண்டும். வெயில் மெல்ல சூட்டை கிளப்புகின்ற நாற்பதாம் பக்கம் வரை நனைய மறுத்தலை வீணாக்க இயலாது. ஓட்டமும் நடையுமாய் நாற்பதாம் பக்கத்தில் கிடைத்த இரண்டாம் அத்தியாயத்தில் புகுந்து கொண்டேன்.

o0o0o0

1. ஜெனிதாவை தேடுவதற்காக அல்லது அவளை பிரதியிலிருந்து பிரிப்பதற்காக நான் உள் நுழைந்துள்ளேன்.

2. மற்றபடி இவனைக் கொன்ற அவனையோ, ஜெனிதாவால் செத்த இவனையோ உயிர்ப்பிப்பது என்னால் இயலாது

3. அவர்களை உயிர்ப்பிக்க முடியாத காரணம் எனக்கு இனி அவர்கள் தேவையில்லை என்பதாகலாம்.

4. எனக்குத் தேவை ஜெனிதா மாத்திரம் தான் என்பதும் குறிப்பிட வேண்டியது.

5. ஜெனிதாவுக்கான உரையாடல்களுல் என்னுடைய கேள்விகளும் பதில்களும் இருப்பதால் அவளைக் கண்டுபிடிப்பது எளிது.

6. காரணம் எங்களுக்கான மொழி.

7. ஜெனிதாவிற்கான இருப்பிடமாக நான் முனியாண்டி விலாஸை மாத்திரம் தான் காட்டியிருந்தேன்.

8. ஜெனிதாவின் வீடு, பயணம், சுற்றுலா எல்லாமே முனியாண்டி விலாஸ் என்னும் புனைவுக்குள் அடங்கியது.

9. இவன் இங்கு நானாக இருந்திருக்கலாம்.

10. அப்படியென்றால் இவனைக்கொன்ற அவனும் நானாகத்தான் இருக்கமுடியும்.

11. அவன் ஜெனிதா மேல் கொண்ட காதல் என்னுடைய நிறைவேறாத ஆசை.

12. இவனை அவன் கொன்றது என்னுடைய காதல் தோல்விக்கான விளைவு.

13. அவன் ஜெனிதாவினால் சாகடிக்கப்பட்டது என்னை புனிதமாக்கிக்கொள்ள மாத்திரமே.

14. அறுநூற்றி பத்தாம் பக்கத்தில் ஜெனிதாவிற்கு எளிதில் கிட்டும்படி வெடிக்காத உபயோகப்படுத்தும் நிலையில் வெடிகுண்டு கிடைத்தது.

15. ஜெனிதா அதை அறுபது பக்கங்களுக்கு முன்னால் கொண்டு வந்து அவனைக் கொன்றாள்.

16. இவன் பிரதிகளில் தன்னைத் தேடியது தன்னை மாத்திரமல்ல.

17. அவன் கவிதை எழுதக் கற்றுக் கொண்டது ஜெனிதாவால் அல்ல.

18. ஜெனிதா அவர்களின் மரணத்தை தவிர்த்திருக்கலாம்.

19. எல்லோரும் ஜெனிதாவாய் இருப்பதற்கு காரணம் நான் பெண்களை அதிகம் நேசிப்பதாயிருக்கும்.

20. மூலப்பிரதி என்பது நான் எழுத நினைத்த கதையின் கதை.

21. மூலப்பிரதிக்குள் மூவர் நுழைந்தது இயல்பு மீறிய செயல்.

22. ஜெனிதாவை வெளித்தள்ளிவிட்டு நான் என்ன செய்யப்போகிறேன்.

23. ஜெனிதாவை அடுத்த அத்தியாத்தில் என்னால் கண்டுபிடிக்க முடியும்.

24. நான் இப்போது மூலப்பிரதியின் மங்கியப்பக்கங்களில் ஜெனிதாவை வெளியே அனுப்ப எத்தனிக்கிறேன்.

25. ஜெனிதா மூலப்பிரதியில் இருந்து வெளியேறிவிட்டாள் அல்லது நான் அவளை வெளியேற்றிவிட்டேன்.

o0o0o0

பிரதிக்குள் மூழ்குதலில் உள்ள சௌகர்யம் நேரங்கழிவது தெரியாது. தேவைப்பட்டால் பூலோகத்தின் வாசல்படியை கண்டுபிடித்துள்ள இடத்தில் நின்று முப்பதாம் அத்தியாயத்திலிருந்து அழைத்துச்சென்ற சைக்கிளில் டீ விற்பவனிடம் டீ வாங்கி குடிக்கலாம். இல்லையென்றால் காதலில் பிரிந்தவனின் வருத்தம் தெரியாமல் பிறிதொரு புதிய காதலியிடம் மண்டியிட்டு இருப்பதை காணலாம். மழைப்பக்கங்களில் நனையலாம். சூரியக்காய்ச்சலில் படுக்கலாம். குழந்தைகளுடன் குழந்தையாய். ரத்தருசி தெரிந்தவனாய். பைத்தியக்காரனாய்.. எப்படியும் இருக்க முடிகிறது. என்னால் பிரதியிலிருந்து வெளிவர முடியவில்லை.

o0o0o0

காற்றுக்கிடைக்காத வனத்தின் நடுவினில் நின்று கொண்டிருந்தேன். அதிகம் பிரதிக்குள் அலைந்து திரிந்ததில் புனைவு உலகம் ஒரு அத்தியாயத்தில் முடிந்ததைப்போலிருக்கிறது. நட்சத்திரங்கள் காற்றுடன் இணைந்து மேலே வந்து விழுந்து சிதற திரும்பிப் பார்த்தேன்.

தேவதை பிரதியின் வெளியில் நின்று கொண்டிருந்தாள். சிறகுகள் பொலிவு பெற்றிருந்தன. அவளைச்சுற்றிலும் நீலம் பூத்த மலர்களை வண்ணத்துப்பூச்சிகள் தொட்டு விளையாடிக்கொண்டிருந்தன. அவளுக்கு அருகில் நின்றிருந்த இன்னொரு தேவதையை எனக்கு அறிமுகப்படுத்தினாள்.

புனைவின் கடைசி மனிதனை ஜெனிதா திருமணம் செய்து கொண்டாளாம். ஜெனிதாவிற்கான தேவதையாக அந்த புதிய தேவதை கிடைத்திருப்பதாகவும் இரண்டு தேவதைகளும் நெருங்கிய தோழிகளாக மாறிய கதையையும் சலிக்காமல் கூறிக்கொண்டிருந்தாள்.

கிளம்பும் முன் சற்றுத்தயங்கி நின்று புனைவின் கடைசி மனிதனுக்கு ஜெனிதா எனது பெயரை வைத்திருப்பதாகக் கூறி விடைபெற்றாள்.

o0o0o0

மூலப்பிரதியை நீங்கள் வாசிக்கும்போது கதையில் ஒட்டாமல் தனித்து அலையும் ஏதோ ஒரு மனிதனை நீங்கள் காண நேர்ந்தால் அது நானாக இருக்கக்கூடுமென்று நம்பவும்.