முனியாண்டி விலாஸ் - 3

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks

0O0O0O0

முனியாண்டி விலாஸ் - 1
முனியாண்டி விலாஸ் - 2

0O0O0O0

அவனைப் ‘பற்றிய’ நான்

வார்த்தைகளை கலைத்துப்போட்டு அதை கவிதையாக்கும் திறனை அவன் ’அதற்குள்’ கற்றிருந்தான். வார்த்தை இடைவெளிகளில் கிடைக்கும் இடத்தில் அமர்ந்து கொள்வதும் ஒவ்வொரு வார்த்தைக்கான அர்த்தத்தை அறியும் முயற்சியும் அந்த அர்த்தத்திற்கு அவளை ஒப்பீடு செய்வதுமாக அவனை அவனது பொழுது கவிஞனாக மாற்றி கொள்ளச்செய்திருந்தது. சொற்களைக் கோர்த்து அதை பூக்கூடைப்போல ஒன்றின் வார்த்தைகளை ஒன்றில் அடுக்கி மிகக்கவனமாக சேகரித்தான். அவனது காதல் தன்மை பிடிவாதத்தை ஒத்திருந்தது. அடம்பிடித்து காரியம் சாதிக்கத்துடிக்கும் குழந்தைத்தன்மை. அவனிடமிருந்து அவளைப்பாதுகாப்பதை விட காதலிடமிருந்து அவனை பிரித்தெடுப்பதுதான் சிரமம் அதிகம் தந்தது எனக்கு.

அவள் மீதான அவனின் மயக்கம் அதிகரித்திருந்தது. சொற்களைக் களவாடுதலில் தேர்ந்திருந்தான். நாயக மயக்கம் கொள்ளும் சமயத்தின் அத்தனைச் சொற்களும் திருடு போயிருந்த விளைவின் முதல் புள்ளியாக மூலப்பிரதியின் நாயகன் மேலிருந்த மயக்கம் நாயகிக்கு நீர்த்திருந்தது. இதனால் எதிர்நாயகனின் கதைத் தன்மையில் அழுத்தமும் அவன் நாயகி மேல் கொண்ட காதலின் உண்மைத்தன்மையும் வெளித்தெரிந்தது. மூலப்பிரதியினை மேற்கோள்களாக கொண்டு வந்திருந்த அத்தனைப் பிரதி விளக்கங்களையும் நான் கிழித்துப்போட இது மாத்திரம் போதுமானதாக இருந்தது.

சுயவிளக்கக் குறிப்புகள் : எனக்கு மூலப்பிரதியின் மேல் யாதொரு கோபமும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் அதை நேசிக்கும் பிரபல இலக்கியக்கூட்டத்தினரிடையே சொல்ல அச்சமாய் இருந்தது. இப்போதெல்லாம் வாசல் கதவின் மேல் செருப்புக்களை அனாயாசமாய் வீசியெறிந்து செல்வது சிறுவர்களுக்கும் பழகியிருந்தது காரணமாயிருக்கலாம்.

0O0O0O0

”கை கொடு”

மருதாணி பூசியிருந்த விரல்கள் சிவந்த மலர்களின் இதழ்களை ஞாபகப்படுத்தியது. இல்லையென்றால் பூத்து வெடிக்காத மொட்டுக்கள். வலது தோளில் மாட்டியிருந்த கைப்பை மடியில் சரிந்திருந்தது. மார்புகளுக்கு மத்தியிலான புடவையின் மடிப்புகளின் சரிவில் கைப்பையின் கறுப்பு நிற வார் அலட்சியப்படுத்தியது என்னை. வலது கையை இன்னமும் என் முன்னே நீட்டிக்கொண்டிருந்தாள். எனக்கான டீயும் அவளுக்கான பெப்சியும் எங்கள் முன்னால் மெல்லிய புகை விட்டுக் காத்திருந்தன.

மெல்ல நாற்காலியின் முன் நகர்ந்து எனது கையால் மிருதுவாக அவளது கையைப் பற்றினேன். மனதில் எதுவும் எங்கும் உடைந்து நொறுங்காதது ஆச்சரியமாய் இருந்தது.

“ரொம்ப தேங்க்ஸ்!”

“எதுக்கு?” அவள் இன்னமும் கையை விடவில்லை. நானும் கையை தனித்துக்கொள்ள விரும்பவில்லை. அந்த சமயத்தில் இந்த பகிர்விற்காக ஏங்கித்தவித்தது போல அமைதியாயிருந்தது மனது.

“நீ அன்னிக்கு ஒரு கவிதை சொன்னீல்ல? நேத்து மாமா பயங்கர அப்செட்ல இருந்தாரு. அந்தக்கவிதையை சொன்னேன். அவரோட மூடே மாறிடுச்சு தெரியுமா. பயங்கர ஹேப்பியாகிட்டாரு. உனக்காகத்தான் நான் எழுதினதுன்னு அவர்ட்ட சொன்னதும் எனக்கு நேத்து ட்ரீட் கிடைச்சது”

சற்று இடைவெளியுடன் தொடர்ந்தாள் ”கூடவே முத்தமும்” மெல்ல தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

என் கை கதகதப்பாக இருந்தது. இவளிடமிருந்து விலகாமல் குழந்தையாய் அப்படியே மாறிடவேண்டும் போல இருந்தது. ஆனால் நிஜமாய் அவள்தான் குழந்தையாய் இருந்தாள். அந்த உதட்டோர சிரிப்பு உறக்கத்தில் சிரிக்கும் குழந்தையுடையது. அவளது முகத்தை ஆச்சரியம் தீராமல் பார்த்துக்கொண்டிருந்தேன். கை தனித்து இருந்தது. ஏமாற்றம் காட்டிக்கொள்ளாமல் இருக்க விரல்களை மூடிப்பிரித்து ரேகை தேடினேன். அவளது கை தொட்ட வாசம் நுகர ஆசையாய் இருந்தது.

“எந்தக் கவிதை”

“நேரமாகி பிரிந்து வீடு செல்வோம்.. என் கோபமெல்லாம் இரவு மீதுதான்.. இத்தனை அவசியமென்ன அதற்கு.. இல்லை அவசியம்தானென்ன..”

மெல்ல ராகத்துடன் இழுத்துப்பேசினாள்.

மௌனமாக கண்ணை மூடி பிரார்த்திப்பவன் போல கைகள் கூப்பி “பிரியா என்னை மன்னிக்கட்டும்” என்றேன்.

“யாரது பிரியா?” அவள் கண்கள் வெளிப்படுத்திய பாவனை ஆச்சரியக்குறிக்குரியதாயிருக்கும்.

“அவளுக்காகத்தான் இந்தக் கவிதையை எழுதுனேன்”

அடுத்த வார்த்தை சொல்வதற்குள் அவள் கிளம்பிச் சென்றிருந்தாள். அவள் குடிக்காத பெப்சி காத்திருந்தது. நான் இவளுக்காக ஒரு கவிதை எழுதத் தொடங்கினேன்.

0O0O0O0

இப்படி ஆகுமென்று நான் நினைத்திருக்கவில்லை. இவள் இவன் மேல் கொண்ட காதலை தெரிந்து கொண்ட அவன் இவனை சாகடித்திருந்தான். பிரதிகளுக்குள் நடைபெற்ற கொலையாகினும் சட்டத்தின் முன் காத்திருந்த அவனை இவள் வெடிகுண்டு வீசிக் கொன்றிருந்தாள். மூலப்பிரதியின் ஊடகச்செய்தி வெடிக்காமல் காட்சிப்பொருளாக பத்திரப்படுத்தியிருந்த வெடிகுண்டை இவள் அவனைக்கொல்ல உபயோகப்படுத்தியிருந்தாள். சம்பவ இடங்களின் நிகழ்வுகள் அதிக வருத்தம் தர எனது மௌனம் கூடியது.

தேவதை எனக்குப் பின்னால் நின்றிருந்தாள்.

”அவ இப்ப எங்க?” தேவதையின் குரலில் என்றுமில்லாத தணிவு இருந்தது.

அவளைக்காணவில்லை. புத்தகத்தின் எந்தப் பக்கத்தில் ஒளிந்திருப்பாளென்று தெரியவில்லை. 120ஆம் பக்கத்தில் முதல் தற்கொலை நிகழ்கிறது. இவளும் அங்கு சென்று தற்கொலைக்கு முயற்சிக்கக்கூடும். அவளை எப்படி தனித்துப்பிரிப்பது என்று தெரியவில்லை.

தேவதை உதவிக்கு வந்தாள்.

“அவளுக்கு பேர் இல்லாம இருக்கறதாலதான் இந்த பிரச்சினை எல்லாம். அவளுக்கு ஒரு பேர் வை. அவளைத்தேட வசதியா இருக்கும்”

பெயர்களை யோசிக்க விடாது மனது ஜெனிதாவை நினைத்தது. அவள் ஜெனிதா ஆனாள். ஆனால் குழப்பம் தீராமல் சங்கடங்களுடன் நிறைந்து வழிந்தது.

அந்த மூலப்பிரதியில் இருந்த அத்தனை அவள்களும் மற்றும் இவள்களும் ஜெனிதாவாகியிருந்தனர். பாவாடை சட்டை அணிந்த ஜெனிதா, மொட்டை அடித்த ஜெனிதா, ஜீன்ஸ் அணிந்த ஜெனிதா, கிழிந்த சேலை ஜெனிதா, சோகமாக ஜெனிதா, சிரித்துக்கொண்டு ஜெனிதா, வெடித்துக்கிளம்பும் அழுகையுடன் ஜெனிதா, பல் வெளியில் நீட்டிக்கொண்டு சடைகளில் இலைகள் செருகிய அரக்கியாகவும் ஜெனிதா, ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..

(தொடரும்)...........................