பிடித்த கவிதைகள் - 2

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks

மகாபாரதம்
இதிகாசமானது
பகவத்கீதை
வேதமானது
கண்ணன்
அர்ச்சுனர்
அனைவரும்
கடவுளானார்கள்
எல்லாம் சரி
கூட்டம் கூட்டமாக
வெட்டிக்கொண்டும்
குத்திக்கொண்டும்
செத்துப்போன‌
சிப்பாய்கள்
என்ன ஆனார்கள்?

-------------------இரா.பூபாலன்

'குமரிப்பெண்' 'வினிதா'
'மும்தாஜ்' 'மருதம்'
'ஜாலி' 'கன்னி'
'இர‌வுப் ப‌ற‌வை' 'கும்த‌ல‌க்கா'
'உங்க‌ள் வ‌ச‌ந்தி' 'குளிர்கால‌ சுந்த‌ரி'
என்று ப‌ல‌ புத்த‌க‌ங்க‌ளைப்
ப‌டித்த‌ பின்ன‌ரும்
ப‌ள்ளிக்கூட‌த்திலிருந்து
திரும்பிவ‌ரும் வ‌ழியில்
ர‌யில் த‌ண்ட‌வாள‌த்தில் கிட‌ந்த‌,
அட்டையில்லாத‌
கிழிந்த‌ புத்த‌க‌ம் போல் ஒன்று
ப‌டிக்க‌க் கிடைக்க‌வில்லை இன்னும்.
அப்ப‌டி என்ன‌ விசேஷ‌ம்
அதில் என்று சொல்ல‌
அந்த‌ப் புத்த‌க‌ம்
என்னிட‌ம் இல்லை இப்போது
அந்த‌ வ‌ய‌தும்!

--------------முகுந்த் நாக‌ராஜ்


க‌டைசிப் ப‌க்க‌ங்க‌ள்
கிழிந்துபோன‌
துப்ப‌றியும் ந‌வீன‌த்தை
தெரியாம‌ல் எடுத்துப்
ப‌டித்திருக்கிறீர்க‌ளா?
அதுதான் வாழ்க்கை!

---------------அப்துல் ர‌குமான்

அமைதி வெறியும் ச‌ம‌ர் வெறியும்
ஒருவ‌கையில் ஒன்றுதான்
ச‌மாதான‌க் கொடியும் ச‌ட‌ல‌த்தைப் போர்த்துவ‌தும்
வெள்ளைத் துணிதான்!

---------------கும‌ர‌ விருச்சிக‌ன்

அப்பா சொன்னாரென‌
ப‌ள்ளிக்குச் சென்றேன்
த‌லை சீவினேன்
சில‌ ந‌ண்ப‌ர்க‌ளைத் த‌விர்த்தேன்
ச‌ட்டை போட்டுக்கொண்டேன்
ப‌ல் துல‌க்கினேன் வ‌ழிப‌ட்டேன்
க‌ல்யாண‌ம் க‌ட்டிக்கொண்டேன்
காத்திருக்கிறேன்
என் முறை வ‌ருமென்று

--------------க‌னிமொழி

யாருக்கும்
நான் யாரென்று
தெரிய‌வில்லை
சொல்லிவிட்டேன்
நான்தான்
போப்பாண்ட‌வ‌ரென‌
புர‌ட்சி செய்கிற‌வ‌ன்
போப்பாண்ட‌வ‌ராய்
இருக்க‌
முடியாதென்றார்க‌ள்!

---------கோசின்ரா (என் க‌ட‌வுளும் என்னைப் போல் க‌றுப்பு)

நான் எழுதாது செல்லும்
என் க‌விதையை
எழுதுங்க‌ளேன்
எழுந்து வ‌ர‌ முடிய‌வில்லை
எல்லையில் என் துப்பாக்கி
எழுந்து நிற்ப‌தால்!

---------வான‌தி

பித்த‌ளைச் ச‌ட்டிக‌ளுக்குப்
புளிச்ச‌க்கை
சில்வ‌ர் த‌ட்டுக‌ளுக்கு
விம் ப‌வுட‌ர்
வெள்ளிப் பாத்திர‌ங்க‌ளுக்கு
விபூதி ம‌ட்டும்
ப‌ள‌ப‌ள‌வென‌
விள‌க்கிவைக்கும்
அம்மாவால்
க‌டைசிவ‌ரை
விள‌க்க‌வே முடிய‌வில்லை
அப்பாவிட‌ம் த‌ன் ம‌ன‌சை!

---------ஜீவி

க‌டைசி ம‌ட‌ல் என்று
க‌ன‌விலும் நினையாதே
மீள‌
வித்தாய் விழுத‌லும்
வீரிய‌மாய் விழுத‌லும்
பூவும் பிஞ்சும் க‌னியும் தாங்கிப்
போராட‌ வ‌ருத‌லும்
எவ்வாறு க‌டைசியாகும்?

------------ச‌ஞ்சுத‌ன் (சிறையிலிருந்து ம‌ட‌ல்க‌ள்)

ஒருத‌ர‌ம் காத‌ல்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
ஒருத‌ர‌ம் புல்லாங்குழ‌ல்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
ஒரு வ‌ண்ண‌த்துப்பூச்சியும்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
நான்தான் அடிக்க‌டி
தொலைந்துவிடுகிறேன்!

---------பூமா ஈஸ்வ‌ர‌மூர்த்தி

அடிமுட்டாள்
அயோக்கிய‌ன்
அதிபுத்திசாலி
ஒரு ஞானி
அனைவ‌ரும்
குள‌த்தில் குதித்த‌ன‌ர்
ஒரே மாதிரிதான்
வ‌ட்ட‌ வ‌ட்ட‌மாக‌ வ‌ந்த‌து!

-------தென்ற‌ல் (நீல‌ இற‌கு)

இப்போதெல்லாம்
நாம் ச‌ந்தித்த‌ இட‌ங்க‌ளில்
யாருமே அம‌ர்வ‌தில்லை
வெறும் ம‌ஞ்ச‌ள் பூக்க‌ளே
சித‌றிக்கிட‌க்கின்ற‌ன்

--------அட்லாண்டா சீனிவாச‌ன்

சொல்லாம‌ல் விட‌ப்ப‌ட்ட‌ காத‌லை
ம‌ர‌க்க‌ன்று ஒன்றை ந‌டுவ‌த‌ன் மூல‌ம்
சொல்லிவிட‌ முடியாத‌துதான் என்றாலும்
இதுநாள் வ‌ரை நீருற்றிக் காத்துவ‌ந்த‌
வாகைம‌ர‌ம் பூத்து உதிர்க்கும்
வெளிறிய‌ பூக்க‌ளின் நெடி
உன்னை நோக்கி நீள‌
ஏதாவ‌து விருட்ச‌த்தின் அடியில்
நீயும் நின்றிருக்க‌லாம்
நிராக‌ரிப்பின் ஒற்றை சாட்சியாய்!

--------சுகிர்த‌ராணி (தொகுப்பு: அவ‌ளை மொழிபெய‌ர்த்த‌ல்)

அன்புருவ‌மாய்
அமைதிப் பூங்காவாய்
க‌ருணைக் க‌ட‌லாய்
ப‌ண்புப் பெட்ட‌க‌மாய்
தியாக‌ச் சுட‌ராய்
அழ‌குச் சிலையா
போக‌ப் பொருளாய்
வ‌ரைய‌றுக்க‌ப்ப‌ட்ட‌ அடையாள‌ங்க‌ளில்
தொலைந்தே போன‌து
எம் ஆதி அடையாள‌ம்!

-------கிருட்டிண‌ம்மாள் (ந‌ன்றி: ந‌வீன‌ விருட்ச‌ம்)

பார்வைய‌ற்ற‌ குழ‌ந்தை
ம‌ர‌ப்ப‌டிக‌ளில் இற‌ங்கி
வ‌ந்துகொண்டிருக்கிறாள்
அவ‌ளுக்கு
அது ஒரு பிர‌ச்னையே இல்லை

அவ‌ளாக‌க் க‌ற்பித்துக்கொண்ட‌
இந்த‌ உல‌கின் ஒழுங்கில்
ஏழாவ‌து ப‌டிக்குப் பிற‌கு
ஒன்ப‌தாவ‌து ப‌டி
வ‌ராத‌வ‌ரை

பார்வைய‌ற்ற‌ குழ‌ந்தை
நிதான‌மாக‌வே ப‌டிக‌ளில்
இற‌ங்கிக்கொண்டிருக்கிறாள்

---------ம‌னுஷ்ய‌ புத்திர‌ன் (தொகுப்பு: க‌ட‌வுளுட‌ன் பிரார்த்தித்த‌ல்)

ப‌ழைய‌ ம‌ன்னருட‌ன் ந‌க‌ர்வ‌ல‌ம்
வ‌ந்த‌தாய்ச் சொல்ல‌ப்ப‌ட்ட‌
பாக‌ன‌ற்ற‌ கிழ‌ யானை
ப‌ட்ட‌த்து ஒப்ப‌னையோடும்
ஓசைய‌ற்ற‌ ச‌ல‌ங்கையோடும்
தெருவில் இற‌ந்து கிட‌ந்த‌து

------யாத்ரீக‌ன் - முனிய‌ப்ப‌ராஜ்

ப‌த்து வ‌ருஷ‌மாச்சு
வ‌யித்துல‌ இன்னும்
ஒரு புழு பூச்சிக்கு
வ‌ழி இல்லைன்னு
ம‌ரும‌க‌ளை வெளித்த‌ள்ளும்
அம்மாவே -
என் மேல்
எவ்வ‌ள‌வு ந‌ம்பிக்கை உன‌க்கு!

-------ப‌.சுப்பிர‌ம‌ணி, முக‌ம் தேடும் முக‌ங்க‌ள் (தொகுப்பு: வ‌ல‌ம்புரி லேனா)

க‌ண்ண‌னைக் காத‌லிப்ப‌தாக‌
ந‌டன‌ அர‌ங்கேற்ற‌த்துக்கு
ஏற்பாடு செய்து
ஊரை அழைத்த‌வ‌ர்க‌ள்தாம்
ந‌ம‌து காத‌லை
அர‌ங்கேற‌விடாம‌ல்
த‌டுக்கிறார்க‌ள்.

----நெல்லை க‌ண்ண‌ன் (காத‌ல் செய்யாத‌வ‌ர்க‌ள் க‌ல்லெறியுங்க‌ள்)

குழ‌ந்தை அழும்போதெல்லாம்
நான் குதிரை ஆக‌
வேண்டியிருக்கிற‌து.
இம்ம‌ண்ணில்
என்னைச் ச‌வாரியாக்கி
கைகொட்டி சிரிக்க‌,
குழ‌ந்தைக்குமா ஆன‌ந்த‌ம்?

-----எஸ். வைதீஸ்வ‌ர‌ன்

உன் க‌விதையை நீ எழுது
எழுது உன் காத‌ல்க‌ள் ப‌ற்றி கோப‌ங்க‌ள் ப‌ற்றி
எழுது உன் ர‌க‌சிய‌ ஆசைக‌ள் ப‌ற்றி
நீ அர்ப்ப‌ணித்துக்கொள்ள‌ விரும்பும் புர‌ட்சி ப‌ற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப் புர‌ட்சியாள‌ர்க‌ள் ப‌ற்றி எழுது
சொல்லும் செயலும் முய‌ங்கி நிற்கும் அழ‌கு ப‌ற்றி எழுது
நீ போடும் இர‌ட்டை வேட‌ம் ப‌ற்றி எழுது
எல்லோரிட‌மும் காட்ட‌ விரும்பும் அன்பைப் ப‌ற்றி எழுது
எவ‌ரிட‌மும் அதைக் காட்ட‌ முடியாம‌லிருக்கும்
த‌த்த‌ளிப்பைப் ப‌ற்றி எழுது
எழுது உன் கவிதையை நீ எழுது
அத‌ற்கு உன‌க்கு வ‌க்கில்லை என்றால் ஒன்று செய்
உன் க‌விதையை நான் ஏன் எழுத‌வில்லை என்று
என்னைக் கேட்காம‌லேனும் இரு.

-------ப‌சுவ‌ய்யா

க‌ண்ணீரைப் ப‌டைத்த‌து
க‌ட‌வுளின் த‌வ‌றா
ஆன‌ந்த‌ப்ப‌ட்டு
அதை வ‌டிக்காம‌ல்
அழுது வ‌டிக்கும்
ம‌னித‌னின் த‌வ‌றா?

--------நீல‌ம‌ணி (ஃ சிற்றித‌ழ்)

என் இனிய ந‌ண்ப‌னே
என்னை அறிந்த‌தாக‌க் கூறினாய்
எப்ப‌டி என்றேன்; ஆத்திர‌ப்ப‌ட்டாய்
உன்னிட‌த்தில் என்னை ச‌ம‌ப்ப‌டுத்தி
பார்த்தாய்
பின் ப‌ர‌வாயில்லை புத்திசாலி என்றாய்
அறிவென்றாய். கூட‌வே அழ‌கென்றாய்
அதை எத‌ற்காக‌ச் சொன்னாய்
இல்லை
உன்னால் என்னை அறிய‌ முடிய‌வில்லை.

-------ற‌ஞ்ச‌னி (ற‌ஞ்ச‌னி க‌விதைக‌ள்)

மேலே தொகுக்கப்பட்டுள்ள அத்தனைக் கவிதைகளும் சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' தொகுப்பில் எ.பி.க.விலிருந்து எடுக்கப்பட்டது.

தந்துதவியதற்கு நன்றிகள் விக்னேஷ்வரன்