முனியாண்டி விலாஸ் - 2

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks

புனைவின் க‌டைசி ம‌னித‌னுக்கான‌ த‌னித்த‌ தேவ‌தை!

அவ‌ள் மிக‌ க‌ளைத்திருந்தாள். அவ‌ளுக்கான‌ பொறுப்புக‌ள் இல்லாத‌ நிலையில் தேவ‌தைப்ப‌ட்ட‌ம் சும‌ந்து கொண்டிருப்ப‌து போல் தோன்றிய‌து. அவ‌ளுடைய‌ ப‌ழுப்பு நிற‌த்தில் மெல்லிய‌ க‌ருவ‌ண்ண‌ம் பூசப்ப‌ட்டிருந்த‌ இற‌க்கைக‌ளில் இருந்த‌ சிற‌குகள் தீயினால் பொசுங்கி காண‌ப்ப‌ட்ட‌‌ன‌. உடைக‌ளின் நீல‌ம் வெளிறியிருந்த‌து. த‌ண்ணீரைக்க‌ண்டால் மிக‌ துக்க‌ப்ப‌டுப‌வ‌ளாக‌ இருந்தாள். தூக்க‌ம் பீடித்த‌ க‌ண்க‌ளுட‌ன் ஒரு இட‌த்தில் த‌ங்குவ‌த‌ற்கான‌ ம‌ன‌நிலையை தொலைத்த‌வ‌ளாக‌ ந‌ட‌ந்து கொண்டிருந்தாள். வ‌ர‌ங்களுக்கும் சாப‌ங்க‌ளுக்கும் வித்தியாச‌ம் தெரியாத‌வ‌ளாகவும் ப‌ற‌த்தல் செய‌லை முற்றிலும் ம‌றந்த‌வ‌ளாக‌வும் இருந்தாள். தேவ‌தை த‌ன‌து கூட்ட‌த்தை புனைவுல‌க‌ம் முழுவ‌துமாக‌ தேடி அலுத்திருந்தாள். அதிக‌ம் ஆர்வ‌ப்ப‌டும்போது நீண்ட கூர்மையான அலகுகள் கொண்டதும் த‌லையில் வித்தியாச‌மான‌ கிரீட‌ம் போன்ற‌ அமைப்புடைய‌தும் பெரிய‌ இற‌க்கைக‌ளுடைய‌துமான‌ சிவ‌ப்பு நிற‌ ப‌ற‌வையை வ‌ரைந்து அத‌ற்கு உயிர் கொடுத்து பேசிக்கொண்டிருப்பாள். சில‌ நேர‌ங்க‌ளில் அந்த‌ ப‌ற‌வையை த‌ன்னை விட்டு ப‌ற‌ந்து போகும்ப‌டியும் வேண்டிக்கொள்வாள். த‌ன‌க்கொரு சுமையாக‌ இப்ப‌ற‌வை இருப்ப‌தாக‌வும் த‌ன்னை விட்டு இது நீங்கும்போது வ‌ருத்த‌ம் சற்று குறையும் என்றும் அழுதாள். நான் அவ‌ளை ச‌மாதான‌ப்ப‌டுத்தும் எண்ண‌த்தில் அவ‌ளை ஆறுத‌ல்ப‌டுத்த‌ முய‌ன்ற‌பொழுது இவ‌ள‌து இந்த‌ நிலைக்கு என்னை கார‌ண‌ம் சொல்லி குற்ற‌ஞ்சாட்டினாள்.

தேவ‌தைக‌ளின் சிற‌ப்பாக‌ நான் அறிந்திருந்த‌து அவ‌ர்க‌ளின் க‌ன‌வுக‌ளைத்தான். தினம் க‌ன‌வுக‌ளில் பூக்கின்ற‌ கிடைக்கின்ற‌ பூக்க‌ளை ப‌டுக்கையிலிருந்து ப‌றித்தெடுத்து த‌ங்க‌ளை அழ‌குப்ப‌டுத்திக்கொண்டிருந்த‌ தேவ‌தைக‌ள் இருந்த‌ உல‌க‌த்தில் நான் க‌ண்டிருக்கும் எல்லா தேவ‌தைக‌ளும் ஏதோ ஒரு வித்தியாச‌ப்பூவை கையில் ஏந்தியிருந்த‌ன‌ர். தின‌ம் மாறும் காட்சிபோல‌ பூக்க‌ளின் நிற‌ங்க‌ளிலும் வ‌டிவ‌ங்க‌ளிலும் மாற்ற‌ம் கொண்டிருக்கும். ஆனால் இவ‌ள் க‌ன‌வு காணாத‌வ‌ளாய் இருந்தாள். ய‌தார்த்த‌ புத்த‌க‌த்தின் ப‌க்க‌ங்க‌ளின் வ‌ரிசை மாறாம‌ல் இருக்கின்ற‌ ச‌ம‌ன்பாடாய் அவ‌ள் செய‌ல்க‌ள் இருந்த‌ன‌. தேவ‌தைக‌ள் க‌ன‌வு காணாவிட்டால் க‌தைக‌ள் தீர்ந்துவிடும் என்ற‌ ந‌ம்பிக்கை என‌க்குள் நிர‌ம்பியிருந்த‌து.

தேவ‌தையின் விசும்ப‌ல் ஒலி அட‌ங்க‌வில்லை. மெல்ல‌ ச‌ப்த‌ம் வெளியில் ந‌க‌ர்ந்து வெளியில் எதிரொலித்து வெளியிலேயே தீர்ந்திருந்த‌து. ச‌ப்த‌ம் என்மேல் ஊர்ந்து என்னை தாண்டி செல்கின்ற‌ ச‌ம‌ய‌த்தின் நிமிட‌ங்க‌ளில் என‌க்கான‌ துய‌ர‌ங்க‌ளும் அதில் க‌ல‌ந்திருந்த‌தை என்னால் உண‌ர‌ முடிந்த‌து. அப்போது என் இதயத்தின் பாரம் அதிகரித்து தலைகுனியச்செய்தது.

புனைவுலகில் தன்னந்தனியனாக அலைந்து கொண்டிருக்கும் அவனுக்கான தேவதையாகத்தான் அவள் இருந்து வந்தாள். ஒவ்வொரு உயிருக்கும் வீதம் குறிப்பிட்ட இருப்பிற்கான அலகிற்கிணங்கி இவள் வந்திருக்கக்கூடுமென்று நான் எண்ணினேன். தனித்திருப்பது மாத்திரம் இவளது கடினமாக இருக்குமென்று என்னால் கருதவியலவில்லை. ஆனால் என் எதிர்பார்ப்பிற்கு மாறாக அவளது கனவுகள் விரிந்திருந்ததை நான் அறிந்த போது எனது நிச்சயத்தன்மை அதிகம் சரிந்து விழுந்திருந்தது.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

அவள் சிரித்தபடியே இருந்தாள். எங்காவது மழை பெய்திருக்கக்கூடும். மழைத்துளிகளுடன் ஊடே மின்னல் கீற்றுகள் நனையாமல் கிடைத்திருக்கும். எனக்குப்பிடித்த ஐயிதழ் கொண்ட வெள்ளைநிற ஒற்றைப்பூ காம்பில் முளைத்ததும் புதுமழையில் நனைந்திருக்கும். பறவைகள் தங்கள் கூடுகளில் சேர்ந்திருக்கும்.

“ம்.. அப்புறம்...”

“கடைசியா எனக்கு லவ் லெட்டர் கொடுத்தது ஐஸ்வர்யாராய்”

“ஐஸ்வர்யாராயா..!?” அவள் சிரிப்பை மறைக்க முயன்றும் அவளது கன்னங்கள் காட்டிக்கொடுத்தன.

“ம்.. நான் பவானிக்கு அந்த பேருதான் வச்சிருந்தேன்.”

“ம். சரி.. அப்புறம்”

“அவ அபிஷேக் பச்சனை கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டா”

“அபிஷேக் பச்சன்??”

“ம்.. கோமதியை கல்யாணம் செஞ்சுக்கிட்டானே நடராஜன். அவனுக்கு நான் வச்ச பேரு”

நாங்கள் நின்றிருந்தது முனியாண்டி விலாஸ் கடையின் வெளியே. ஊரின் பேருந்து நிலையத்தின் இரண்டாம் நுழைவு வாசலின் எதிரே சிகப்பு நிறப்பின்னணியில் வெளுத்திருந்த மஞ்சள் நிற எழுத்துக்களால் ஆர்ட் மதி என்று வரைந்தவரின் பெயரை கீழே கொண்டிருந்த கொஞ்சம் துருப்பிடித்திருந்த பலகைக்கு இடது ஓரத்தில் தொங்கிக்கொண்டிருந்த காய்ந்த மல்லிகைச்சரம் தாங்கியிருந்த கருத்த மூங்கிலுக்கு பக்கத்தில் நின்றிருந்தோம் நானும் அவளும்.

“டீ சாப்பிடுறியா..”

வேண்டாம் என்று தலையசைத்து மறுத்தாள். இந்த இடத்தில் நின்று பேசுவது அத்தனை சரியில்லைதான். ஆனாலும் பேருந்துக்கு காத்திருக்கும் நேரம்தான் கிடைக்கிறது அவளுடன் பேசுவதற்கு.

“சரி. வேற...” பேருந்துக்கான வருகையை எதிர்பார்ப்பது போல எதிர்பக்கம் பார்வை வீசினாள். எனக்குத்தெரியும். நாங்கள் பேசுவதை வேறு யாரும் கவனிக்கிறார்களா என்ற எச்சரிக்கை அவளுக்கு. நான் இதில் அத்தனை கவலைப்பட்டதில்லை.

“இந்த மாதிரிதான் ஊர்ல எல்லோருக்கும் ஒரு பேரு வச்சிருக்கேன். காந்தி, நேரு கூட எனக்கு தோஸ்த்துன்னா பார்த்துக்கயேன்”

என்னைத்தவிர்த்து பார்வை திருப்பிய அவளது தயக்கம் என்னை தொட்டது. யோசிக்கிறாள். புதிதாய் கேள்வி அனுப்ப யோசிக்கிறாள். இவளது நிமிட நேர யோசனைகள் என்னை முட்படுக்கையில் ரத்தம் காண வைக்கும் தன்மை கொண்டது.

எனது கண்களை நேராக உற்றுப்பார்த்தாள்.

“அப்ப எனக்கு என்ன பேரு வச்சிருக்க”

அவளது முகம் வட்ட வடிவமானது. நெற்றியின் சிறிய பரப்பை மறைத்துவிடத்துடிக்கும் காற்றில் அலையும் முன் முடிகள். வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பை கொண்ட இமைகளில் சிக்காது தப்பி நிற்கின்ற பெரிய கண்கள் சற்று களைத்திருந்தது. இறக்கைகளை கழற்றிவிட்டு வந்திருக்க வேண்டும்.

நான் ரகசியம் கூறும் பாவனையில் அவள் காதோரம் குனிந்து அவளது கேச வாசனையில் மயங்கி மெல்லிய குரலில் கூறினேன்.

“தேவதை...”

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

மிகக்கடினமாக இருந்தது. தேவதை இன்னமும் என் முன்னால்தான் நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு அவன் தனித்திருப்பது பற்றிய கவலை அதிகரித்துக்கொண்டிருந்தது. அவனை இயல்பான பருவத்திலிருந்து நீக்கி இளைஞனாக்கி காட்டியது அவன் மழலைத்தன்மை அறியாதது அவனுக்கான கதைகளை கனவுகளை தேவதையால் அவனுக்கு உணர்த்த முடியாமல் இருப்பது மிக முக்கியமாய் அவன் யாரையும் காதலிக்காதது இவையெல்லாம் தேவதைக்கு மிகுந்த இழப்புகளாக பட்டது.

தனியானவனாக அவன் இருக்க வேண்டும் என்று விரும்பியதால் நான் என் புனைவுலகில் யாரையும் அனுமதித்ததில்லை. இவன் தனித்திருந்தான். இவனுக்கான தனித்த தேவதையாய் இவள் இருக்கிறாள். தேவதையையும் நான் இங்கு உருவாக்கவில்லை. தன்னிச்சையாக வந்திருக்கின்றாள். இவளது சாபமாயும் இருந்திருக்கக்கூடும். தேவதைகள் இல்லாத தேசம் காணாதவன் என்பதால் என்னால் அவளை மாத்திரம் அனுமதிக்க முடிந்திருந்தது.

கொடுந்தயக்கத்துடன் தேவதை என்னிடம் அந்த கேள்வியை கேட்டாள்.

“நீ இவனைக் கொன்னுடறியா?”

(தொடரும்)