பிடித்த கவிதைகள் - 1

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks

கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப் போய்விட்டார்
ஆயினும் மனதிலே ஒரு நிம்மதி
--------------------------------------------------------------ஆத்மாநாம்

அள்ளி கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அன்னியமாச்சு
ஆகாயம் அலை புரளும் அதில்
கை நீரைக் கவிழ்த்தேன்
போகும் நீரில் எது
என் நீர்?
--------------------------------------------------------------சுகுமாரன்

என் பார்வையைப் பறித்து சூடிக்
கொண்டுபோனது ஒரு காட்சி
காக்கி உடையில் ஒரு பெண் போலீஸ்
பஸ்ஸுக்கு காத்திருந்தாள் தன்
கைக் குழந்தை தோள் சாய்த்து!
------------------------------------------------------------- பாதசாரி

மழையின் பெரிய புத்தகத்தை
யார் பிரித்துப் படித்துக்கொண்டிருக்கிறார்கள்
படிக்கட்டில் நீர் வழிந்து
கொண்டிருக்கிறது
------------------------------------------------------------தேவதச்சன்

வீட்டைச் சுற்றி தோட்டம் போட்டேன்
தோட்டத்தைச் சுற்றி வேலி போட்டேன்
வேலியைச் சுற்றி காவல் போட்டேன்
காவலைப் பற்றி கவலைப்பட்டேன்
-------------------------------------------------------------ஷண்முக சுப்பையா

நீலத்தை சூடிக்கொண்டடது வானம்
பச்சையை ஏந்திக்கொண்டது வயல்
கறுப்பை வாங்கிக்கொண்டது கொண்டல்
வெண்மையை வாங்கிக்கொண்டது பருத்தி
மஞ்சளை அப்பிக்கொண்டது சந்தனம்
பழுப்பை அணிந்துகொண்டது மரம்
சிவப்பை வரிந்துகொண்டது ரத்தம்
ஏழு வண்ணங்களிலும் கொஞ்சம் திருடி
எடுத்துக்கொண்டது இந்திர தனுசு
இவனுக்கென்று இல்லாமல் போயிற்று
தனி ஒரு நிறம்.
---------------------------------------------------------------------விக்ரமாதித்யன்

ஒரு இரவைத் திறந்தேன்
ஏகப்பட்ட மூடிய விரல்கள்
அதிலொரு விரலைத் திறந்தேன்
ஏகப்பட்ட மூடிய இரவுகள்
--------------------------------------------------------------------------ஸ்ரீநேசன்

அலைகளைச் சொல்லி...
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிறவரை.
-------------------------------------------------------------------------நகுலன்

பினாயில் தண்ணீர் தெளித்த தரையை
ஈரம் போகத் துடைக்கிறது
எண்ணெய் படிந்த சைக்கிள் செயினைத்
தொட்ட கையைத் துடைக்கிறது
பூஜை பாத்திரங்களை எல்லாம்
சுத்தப்படுத்தி வைக்கிறது
டி.வி. டேப் ரிக்கார்டர், கம்ப்யூட்டர்களை
தூசு தட்டி வைக்கிறது
எறும்பு புகுந்த பண்டங்களை
வெயிலில் உலர்த்த உதவுகிறது
இப்படி
வீடு முழுக்க வேலைகளை
செய்துகொண்டு இருக்கிறது
செத்துப்போன பாட்டியின் புடவை
--------------------------------------------------------------------முகுந்த் நாகராஜன்

ஒரு பறவை பறந்துகொண்டிருக்கும்போது
மிதந்துகொண்டிருக்கிறது
கூடவே வானமும்
பறவையைச் சுட்டார்கள்
விழுந்ததோ
ஒரு துண்டு வானம்
------------------------------------------------------------------பாலைநிலவன்

நிறைய
நதிக்கு
ஒரு புன்னகையே
போதும்
--------------------------------------------------------------பி. ராமன்

எங்கோ மலைப்பிரதேசத்தில்
ஒரு தோட்டக்காரனிடம்
கெஞ்சி வாங்கி வந்த திராட்சை செடி
பூக்கவும் இல்லை
காய்க்கவும் இல்லை
மாறாக
படரவிட்டிருக்கிறது
மலையடிவாரத்தை
எனது பால்கணியில்!
---------------------------------------------------------தென்றல்

சமுத்திரக் கரையில்
ஒதுங்கும் கிளிஞ்சல்கள்
குழந்தைக்கு வைரங்கள்
காட்சிதானே நிஜ வைரம்
காண்பவன் குழந்தையானால்
கிளிஞ்சல்கள் போதுமே.
-------------------------------------------------------நா.விச்வநாதன்

வீட்டின் கதவைத் தட்டுகிறது
எப்பொழுதும்
ஒரு பகல்
யாவரும் வெளிக்கிளம்பினர்
எனது தந்தை அலுவலகத்திற்கு
சகோதரி கல்லூரிக்கு
அம்மா சமையலறைக்கு
நானும் வெளிக்கிளம்பினேன்
நண்பகலோடு.
--------------------------------------------------------அப்பாஸ்

கூண்டுக் கிளியின்
காதலில் பிறந்த
குஞ்சுக் கிளிக்கு
எப்படி எதற்கு
வந்தன சிறகுகள்?
-------------------------------------------------------கல்யாண்ஜி

எதையேனும் சார்ந்திரு
கவித்துவம்
தத்துவம் காதல்
இங்கிதம் சங்கீதமிப்படி
எதன் மீதேனும் சாய்ந்திரு
இல்லையேல் உலகம்
காணாமல் போய்விடும்
-------------------------------------------------------வண்ணநிலவன்

அந்திக்கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.
---------------------------------------------------கலாப்ரியா

அவன் மலை மீது அமர்ந்திருந்தான்
ஒரேயொரு கணம்
அவன் தோளுக்கும் வலிக்காமல்
ஒரு பறவையின் நிழல்
சற்றே
அமர்ந்து
கடந்துவிட்டது.
-----------------------------------------------------ராணி திலக்

குழந்தை என்னிடம் கேட்டது
மீன் உடம்பிற்குள் ஈரமாக இருக்குமா?
இல்லை என்றேன் நான்
அப்படியென்றால் வேறு எப்படியிருக்கும்
சிவப்பாகவும் இளஞ்சிவப்பாகவும்
காலை நேரத்துக் கல்லறையைப் போல
குளிர்ச்சியாகவும் இருக்கும் என்றேன்
குழந்தை மறுபடியும் கேட்டது
உனக்கு எப்படித் தெரியும் அது
இறந்து போனாலன்றி?
-----------------------------------------------------------பிரெய்ன் டர்னர் (தமிழில்: எஸ். பாபு)

நீ இருக்கும்
திசைக்கு முகம்காட்டி
உன் சதுரமான
எதிர்பார்ப்பின் மேல்
பூக்காது
தொட்டிப்பூ
பூப்பூத்தல் அதன் இஷ்டம்
போய்ப் பார்த்தல் உன் இஷ்டம்
---------------------------------------------------------------------கல்யாண்ஜி

கவிதைகள் அனைத்தும் எஸ். ராமகிருஷ்ணனின் "தேசாந்திரி"யின் அத்தியாய தொகுப்புகளிலிருந்து தொகுக்கப்பட்டது.