திருக்குற‌ள் க‌தை - 1

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks


ப‌த்ம‌னுக்கு லேசாக‌ விய‌ர்க்க‌த்தொட‌ங்கிய‌து. சென்னையின் காலைவெயில் சூடு பொறுக்க‌ முடிந்த‌தாக இருந்தும் ப‌ஸ்ஸிற்காக‌ காத்திருக்கும் ச‌ம‌ய‌த்தில் கிடைத்த‌ இள‌ங்காற்று பார்வையை அவ‌னால் தாங்க‌ முடிய‌வில்லை. மனதை க‌ட்டுப்ப‌டுத்திக்கொள்ள‌ முடியாம‌ல் மிகுந்த‌ சிர‌ம‌ப்ப‌ட்டு மீண்டும் எதேச்சையாக‌ சாலையைப் பார்ப்ப‌து போல‌ அவ‌ள் ப‌க்க‌ம் பார்வையை வீசினான்.


அவள் மஞ்சள் சுடிதார் அணிந்திருந்தாள். அழகாக கழுத்தை நெருங்கி சுற்றியிருந்த துப்பட்டாவின் பின்னல்கள் கொண்டிருந்த ஒரு முனை அவளது இடுப்பின் கீழ்வரை தொங்கிக்கொண்டிருந்தது. சுடிதாரில் ரங்கோலிப்பூக்கள் நூல்களில் சிக்கிக்கொண்டு வடிவங்களில் சிதறிக்காணப்பட்டன. வலது கையில் சில புத்தகங்களை அணைத்து பிடித்திருந்ததில் தெரிந்த வளையல்களில் நான்கு சுடிதாரின் வ‌ண்ண‌த்தை ஒத்திருந்த‌து. இட‌து கையின் ம‌ணிக்க‌ட்டு அருகே சிக‌ப்புக்க‌யிறின் மேலே அந்த மெல்லிய க‌றுப்புப்ப‌ட்டை க‌டிகார‌ம் ச‌ற்றே குறுக‌லாய் ஏறியிருந்த‌து. வெயிலுக்கு அணியும் கறுப்புக்கண்ணாடியால் கண்கள் மறைத்து அணிந்திருந்ததில் மிச்சம் தெரிந்த நெற்றி, நாசி, உதடுகள், முகவாய் மற்றும் கன்னத்தில் அவள் முகத்தை பார்த்துவிட்டு பத்மன் பிரமித்து நின்றான்.


தேவதை.. நிச்சயமாய் தேவதைதான். வாரப்பத்திரிகைகளில் ஓவியமாய் கிடைத்திருந்த பிரதிகளின் ஒப்பீட்டளவில் இறக்கைகளை உதறிவிட்டு வந்த தேவதையாய்த்தான் அவள் தெரிந்தாள்.


நிமிடத்தில் கவிஞனாகிவிட்ட கர்வம் பத்மனிடம் ஏறியமர்ந்த‌து. அடுத்த கவிதைக்கான வரிகளை கண்ணாடி அணிந்திருந்த அவள் கண்களில் தேட முயன்றான். அவளும் தன்னைத் திரும்பிப்பார்த்தது தைரியம் தந்திருந்தது அவனுக்கு.


அவள் பார்க்கிறாள். மீண்டும் அவனை திரும்பிப் பார்க்கிறாள். இவன் அவள்மேல் வைத்த பார்வையை உதிர்க்காமல் வைத்திருந்தது அவளது பார்வையை உதிர வைத்தது. அதிர்வு சலனங்களை பத்மனின் மனக்குளத்தில் வீசியெறிந்த கல்லாய் அவள் நிற்க மையவட்டம் சுற்றித்தொலைகின்ற நீரலையானான் பத்மன். இப்போது சுடிதாரின் துப்பட்டா தலையை சுற்றி வெயிலுக்கான குடையாகியிருந்தது.
அந்த‌ பேருந்து நிறுத்த‌த்தில் கூட்ட‌ம் இல்லாத‌து ப‌த்மனின் மனதை, கனவை மற்றும் கற்பனையை சுவார‌ஸ்ய‌ப்ப‌டுத்த‌ உத‌விய‌து. த‌ன‌க்குள் அவ‌ள் பார்வையை நிச்ச‌ய‌ப்ப‌டுத்திக்கொண்டான் மீண்டும் மீண்டும்.


திருவின் ஞாப‌க‌ம் வ‌ந்த‌து. அவ‌ன் இருந்திருந்தால் பாவை பார்வையின் அர்த்தங்களின் அர்த்தங்களை சொல்லியிருப்பான். நிச்ச‌ய‌ம் செய்திருப்பான். இது காத‌லா இல்லை வேடிக்கையா என்று. அவ‌ன‌து விசித்திர‌ங்க‌ளில் புரியாத‌ விஷ‌ய‌ம் இது. எப்ப‌டி க‌ணிக்கின்றான் என்று அறிவ‌த‌ற்கு முன்பே அது செய‌லாகியிருக்கும் மாய‌ம். மீண்டும் அவ‌ள் த‌ன்னை க‌வ‌னிப்ப‌து க‌ண்டு ப‌த்ம‌னுக்குள் காதல்சோறு பெருமையாக மாறி பொங்கிய‌து.


அவ‌ள‌து பார்வை த‌ன்மேல் விழுந்த‌தை த‌ன‌க்குள் விழுந்த‌தாய் மாற்றி உள்நுழைந்த ச‌ப்த‌த்தை கேட்க‌ விரும்பினான். ம‌ன‌ம் ப‌ல‌த்த‌ மௌன‌த்தில் கொண்டாடும் சின்ன‌ப்பிள்ளையின் விளையாட்டை ஒத்திருந்த‌து. வடிவ‌ம் தெரியாது கிழித்தெறிய‌ப்ப‌ட்ட‌ வ‌ண்ண‌த்துண்டுக‌ளின் வ‌ரிசை சேர்க்கின்ற‌ ஆர்வ‌ம் த‌ன‌க்குள் த‌ன்னை அவ‌ளைப்ப‌ற்றி யோசித்த‌து. அவ‌னுக்குத் தெரிந்துப்போன‌து. இத‌ற்கு மேல் ச‌த்திய‌மாய் முடியாது. அவளது இன்னொரு பார்வையை தாங்குவ‌து இவ‌னுக்கு கடினமாய் போய்விடும்.‌ காத‌லை தூண்டிவிடும் வேக‌ம் அதிக‌மாகிவிடும் ஆப‌த்து நிறைந்திருந்த‌து.


மன‌த்தூண்டிலில் சிக்கிக்கொண்டு நீரிலின்றி வெளியேற்றி காற்றுக்காய் உயிர்துடிக்கும் மீனாய் இருந்த‌து ப‌த்ம‌னின் காத‌ல். இரைக்குப்ப‌ய‌ந்து இரையாய் மாறி இல்லாம‌ல் போய்விடுவானோ என்ற‌ ப‌ய‌மும் அவ‌னை சூழ்ந்த‌து. இத‌ற்குமேல் தாங்கும் ச‌க்தி இழ‌ந்த‌ நிலை கிடைத்த‌போது அடுத்த நிமிடத்தின் ஆரம்பத்தில் அவ‌ளிட‌ம் பேசிவிட‌லாமென‌ முடிவு செய்திருந்தான். அடுத்த‌ நிமிட‌ம் கிடைப்ப‌த‌ற்காக‌ வினாடிக‌ளை குறைக்க‌த் தொட‌ங்கினான்.


60...59...58...57...56...55...54...53...52...51...50...49...48...47...46....45....44...43....42...41...


அவ‌ன‌து வினாடிக்குறிப்பை அறியாம‌ல் அவ‌ளே ச‌ற்று மேலேறி வெயில் ப‌டாத‌ இட‌த்தில் நின்றாள். அது அவ‌னுக்கு ம்ம்ம்ம்ம்ம்மிக‌ப்ப‌க்க‌த்தில் இருந்த‌து இவ‌ன‌து புண்ணிய‌த்தின் ப‌ல‌னாக‌வேப் ப‌ட்ட‌து.(அந்த பேருந்து நிறுத்தம் மிகச்சிறியதாக இருந்தது அவனது முன்னோர் செய்த புண்ணியமாயிருந்திருக்கக்கூடும்.)


ப‌த்ம‌ன் அவ‌ள் ப‌க்க‌ம் திரும்பிப்பார்த்தான்.


அவ‌ளும் அவ‌னைப் பார்த்தாள்.


ப‌த்ம‌ன் குர‌லின் அடைப்பு இன்னும் உடைப‌டாம‌லிருந்த‌தை மெல்லிய‌ செரும‌லில் ச‌ரிப்ப‌டுத்தினான்.


அவ‌ள் மூச்சு விடும் ச‌ப்த‌ம் அவ‌னுக்குள் பெருத்த‌ அலையோசையாக‌ கேட்ட‌து. மெல்ல‌ அவ‌ளிட‌ம் பேச‌ வார்த்தைக‌ளை தேட‌ முய‌ன்று முடியாம‌ல்,


"எக்ஸ்யூஸ் மீ..!"


'ம்' என்ற‌ பாவ‌னைக்கு ஏற்ற‌வாறு அவ‌ள் ப‌த்ம‌னை பார்த்தாள்.


"நீங்க‌...." தாயிடம் த‌ன்னை அடையாள‌ம் தெரிய‌ வைக்க‌ த‌விக்கின்ற‌ குழ‌ந்தையின் த‌விப்பை முக‌த்தினில் ஏற்றி வார்த்தைக‌ளை முடிக்கும்முன்பு... அவனது முகக்குறியின் வியப்பைக் கண்டு அவ‌ள் க‌ண்க‌ளிலிருந்து க‌ண்ணாடியை க‌ழ‌ற்றினாள்.


அந்த‌ க‌ண்க‌ள்...! அந்த‌ பார்வை...!!


நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.


அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானொருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் என்னைத் தாக்குவது போன்று இருந்தது.


அடிப்பாவி! மெட்ராஸ் ஐ.......யாடி உன‌க்கு...